புதுடெல்லி:கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற்று அங்குள்ள மக்களுக்கு சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் உறுதிச்செய்ய வேண்டுமென கருத்து தெரிவித்த பிரபல வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து சங்க்பரிவார பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
உச்சநீதிமன்றத்தின் அருகில் உள்ள
அவருடைய சேம்பருக்குள் நுழைந்த ஸ்ரீராமசேனா என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த மூன்று தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ஒருவரை இச்சம்பவத்தை பார்த்தவர்களில் ஒருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதர இரு தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். தாக்குதலுக்கு உள்ளான பிரசாந்த் பூஷண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசாந்த் பூஷண் மீதான தாக்குதலை அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டித்துள்ளன.பெங்களூரிலும் இதர பகுதிகளிலும் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி பிரசித்திப்பெற்ற ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கம்தான் ஸ்ரீராம சேனா. இவ்வமைப்பின் டெல்லி மாநில தலைவரான இந்தர்வீர் என்பவர் பிரசாந்த பூஷணை தாக்கியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இதர இரு நபர்களை போலீஸ் தேடி வருகிறது. தாக்குதலின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பத்திரிகை அறிக்கையை இந்த தீவிரவாத அமைப்பு பத்திரிகை நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரசாந்த் பூஷணை பேட்டி காண வந்த தொலைக்காட்சி சேனலின் கேமராவிற்கு முன்புவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சேம்பருக்குள் ஆக்ரோஷத்துடன் குதித்து உள்ளே நுழைந்த 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பிரசாந்த் பூஷணின் கன்னத்தில் தொடர்ச்சியாக தாக்கினர். நாற்காலியிலிருந்து அவரை கீழே இழுத்துப்போட்டு ஒதைத்தனர். நெஞ்சு பகுதி உள்பட பல இடங்களில் காலால் மிதித்தனர். சட்டையை கீறி கிழித்தனர். தாக்குதலில் கண் கண்ணாடி கீழே சிதறி விழுந்து உடைந்தது.
கஷ்மீரைக் குறித்தா பேசுகிறாய்? என ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாக்குதலின் இடையே கூறியதாக பிரசாந்த் பூஷண் கூறினார். கஷ்மீரில் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என அண்மையில் தான் தெரிவித்ததாக பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.
“கஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கவா கூறுகிறாய்? சும்மா விடமாட்டோம். தலையை உடைப்போம்!” என ஆக்ரோஷமாக கூறிக்கொண்டு பிரசாந்த் பூஷணை தாக்கியதாக இச்சம்பவத்தை கண்டவர்கள் கூறுகின்றனர்.
பிரஷாந்த் பூஷணை சந்திக்க ஹிந்துத்துவா தீவிரவாதிகள் முன்னரே அனுமதிப் பெற்றுள்ளனர். இச்சம்பவம் நடக்கும்பொழுது தொலைக்காட்சி சேனலை சார்ந்தவர்களும், ஒரு உதவியாளரும் மட்டுமே அலுவலகத்தில் அவருடன் இருந்துள்ளனர்.
லோக்பால் மசோதாவைக் குறித்து அரசின் நகர்வுகளை சேனல் ரிப்போர்ட்டருடன் உரையாடிக்கொண்டிருந்தார் பிரசாந்த் பூஷண். தாக்குதல் சப்தம் கேட்டு ஓடிவந்த வழக்கறிஞர்களும் மற்றும் சிலரும் சேர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் ஒருவனை தாக்கி பிடிக்கும் வேளையில் இதர 2 தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். பிரசாந்த் பூஷணை ராம் லோகியா மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிட்சை பெற்றுவிட்டு அவர் வீட்டிற்கு சென்றார்.
ஒருவாரத்திற்கு முன்பு பிரசாந்த் பூஷண் கஷ்மீரில் இருந்தார். அங்கு 3 மாவட்டங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கல்லறைகளை கண்டுபிடித்ததை சுட்டிக்காட்டி கஷ்மீரிகளின் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். கஷ்மீரில் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்களின் உறவினர்களின் டி.என்.ஏ மாதிரிகளுடன் கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்களின் டி.என்.ஏ மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்த்து உண்மையான நிலையை புரிந்துக்கொள்ள அரசு முயலவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
சிறப்பு ஆயுத சட்டத்தை விரைவில் வாபஸ் பெறவேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரசாந்த் பூஷண் கூறியிருந்தார். நன்றி: தூது ஆன்லைன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக