தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.2.11

இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் - ப.சிதம்பரம்


இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் தலைத் தூக்கியுள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இவ்வமைப்புகளின் பங்கினைக் குறித்து சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

மலேகான், சம்ஜோதா, மக்கா மஸ்ஜித், அஜ்மீர் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் உள்பட பல்வேறு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் உள்நாட்டு பாதுகாப்பைக் குறித்து விவாதிக்க அழைக்கப்பட்ட மாநில
முதல்வர்கள் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார் அவர்.

இந்த அமைப்புகளின் பெயர்களை குறிப்பிடுவதிலும், அவற்றின் சதித்திட்டங்களை வெளிப்படுத்துவதிலும் தங்களுக்கு எவ்வித தயக்கமுமில்லை என ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அவர்கள் எந்த மதப்பிரிவைச் சார்ந்தவர்களாகயிருந்தாலும், அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தி போதுமான தண்டனையை வாங்கிக் கொடுப்போம்.

பயங்கரவாதம் தொடர்பாக நமது தேசிய புலனாய்வு அமைப்பினரும் (என்ஐஏ), மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகளும்
ஒவ்வொரு நாளும் புதிதாக ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர். நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தின் புதிய பரிமாணங்கள் தொடர்பாக நம்மைத் தட்டி எழுப்புவதாக இந்த ஆதாரங்களை நாம் கருத வேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக உள்நாட்டு பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. புனே குண்டுவெடிப்பு மட்டுமே கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரேயொரு பயங்கரவாத தாக்குதலாகும் என ப.சிதம்பரம் தெரிவித்தா
ர்

ராசாவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் தனது காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. இதை நீதிமன்றம் ஏற்று அவரை சிபிஐ காவலுக்கு அனுப்பியது.

அதே போல முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரையும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது நீதிமன்றம்.

நேற்று கைதான ராசா, சித்தார்த் பெகுரியா, சந்தோலியா ஆகியோர் இரவு முழுவதும் சிபிஐ அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ராசா உள்ளிட்ட 3 பேர் மீதும் 8 நிறுவனங்களுக்கு விதிகளை மீறி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஆ.ராசாவின் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், விசாரணை தகவல்களையும் கைது நடவடிக்கைக்கு ஆதாரமாக சி.பி.ஐ.காட்டியுள்ளது.

இவை தவிர குற்றம் சாட்டப்பட்டவர்களின் பணப் பறிமாற்றமும் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.

மேலும் அப்ரூவராக மாறிவிட்ட ஒருவர் கொடுத்துள்ள வாக்குமூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை வெளிப்படுத்தும் மிக முக்கிய ஆதாரமான சி.பி.ஐ. வசம் உள்ளது. ராசாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் அடைந்த பண லாபங்கள் குறித்த தகவலை அவர் விவரமாகத் தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடங்கிய 2007ம் ஆண்டு முதல் அவை வழங்கப்பட்ட 2008ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் ராசாவுடன் தொடர்புள்ளவர்களின் பணப் பரிமாற்றங்கள் சி.பி.ஐ. வசம் சிக்கியுள்ளன.

மேலும் நிரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் கிடைத்த தகவல்களும் கைதுக்குக் காரணமாகியுள்ளன.

இந் நிலையில் இன்று பிற்பகலில் ராசா, சித்தார்த்த பெகுரியா, சந்தோலியா ஆகிய மூவரும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றமான பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது மூவரிடமும் ஒரே நேரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் மூவரையும் 5 நாட்கள் தங்கள் காவலில் அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.

மேலும் சிபிஐ தாக்கல் செய்த கைது அறிக்கையில், ராசாவின் நடவடிக்கைகளால் நாட்டுக்கு ரூ. 22,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் விதிகளை மாற்றி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கினார் ராசா. இந்த இரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார்.

இதில் ஸ்வான் நிறுவனம் ரூ. 530 கோடி மட்டுமே கொடுத்து ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. ஆனால், இதில் 40 சதவீத பங்குகளை மட்டுமே ரூ. 4,200 கோடிக்கு விற்றுள்ளது. இதனால் இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகிறது.

ராசா மீது இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 13(1), 13(1டி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ராசா வெளியில் இருந்தால், விசாரணைக்கு இடையூராக இருப்பார் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இதை ராசாவின் வழக்கறிஞர் எதிர்த்தார். ராசாவை கைது செய்ததே தவறு என்று அவர் வாதிட்டார்.அவர் வாதாடுகளையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது ராசா அல்ல. அவர் ஓடி ஒளிந்துவிடாமல் விசாரணைக்கு ஆஜாராகி வருகிறார். ஆனால், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாகக் கூறி அவரை சிபிஐ கைது செய்ததாகக் கூறுவது சரியல்ல என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி 30 நிமிடங்களில் தீர்ப்பளிப்பதாக அறிவித்தார். பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, ராசாவை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதையடுத்து ராசா உள்ளிட்ட 3 பேரையும் சிபிஐ தனது தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றது. 5 நாள் விசாரணைக்குப் பின் வரும் திங்கள்கிழமை மூவரும் மீண்டும் இதே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 10ம் தேதி வர உள்ளது. அன்று சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு இன்னும் ஒரு வாரமே கால அவகாசம் உள்ளது.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு, சி.பி.ஐ. நேற்று திடீரென அழைப்பு விடுத்தது. கைது செய்யப்பட்டுள்ள ராசா உள்ளிட்ட 3 பேரிடமும் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தலாம் என்று சி.பி.ஐ. கூறியுள்ளது.

இதை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதனால் இனி அடுத்தக்கட்ட விசாரணை நடக்கும் போது சி.பி.ஐ. அதிகாரிகளும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் ஒன்றாக இருந்து விசாரணை நடத்துவர்.

அதேசமயம், வழக்கமாக இதுபோல கைதாகி சிறைக்கு அனுப்பப்படும் சமயத்தில் அரசியல்வாதிகளுக்கு வரும் நெஞ்சு வலி, ராசாவுக்கும் வருமா என்பதும் தெரியவில்லை. சிபிஐ விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பு அவர் சென்னையில் மருத்துவமனையில் சேர்ந்து திடீரென உடல் நலப் பரிசோதனைகளை செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

எகிப்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை தாக்கிய முபாரக் ஆதரவாளர்கள் .


எகிப்தில் அதிபர் பதவி விலக வேண்டுமென மில்லியன் கணக்கானோர் பல நாட்களாக தொடர்ந்து
வீதிகளில் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  அவர்களை, எகிப்து அதிபரின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும்  ஆயிரக்கணக்கானோர் திடீரென கூட்டத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இரு தரப்பினரும் கற்களாலும் போத்தல்கள் மற்றும் கையில் அகப்படும் பொருட்களால் தாக்கியவாறு இருந்ததாகவும் இதனால்  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
Tahrir Square இற்கு அருகாமையில் மோதல் இடம்பெறுகின்ற இடம் போர்க்களம் போல் காட்சி தருவதாகவும் அங்கிருக்கும் சர்வதேச ஊடகங்களின் நிருபர்கள் வர்ணிக்கின்றனர். Tahrir Square க்கு அருகில் குதிரைகள் ஒட்டகங்களில் வந்த முபாரக் ஆதரவாளர்களே இந்த தாக்குதல்களுக்கு காரணமென தெரியவருகிறது.

இதுவரை 500 மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அத்துடன் அங்கிருந்து செய்தி சேகரித்துவரும் சர்வதேச ஊடக நிருபர்களும் தாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னர் எகிப்து நாட்டு இராணுவத்தினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.   (கலவரம் வீடியோ)   

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா, 2 தொலைத் தொடர்பு ௦அதிகாரிகள் கைது - சிபிஐ அதிரடி

டெல்லி,பிப்.2:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, அவரது சகோதரர் கலிய பெருமாள் ஆகியோரை சிபிஐ இன்று கைது செய்தது.

ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராசா மீது சட்டவிரோத கிரிமினல் செயல்பாடு, தொலைத் தொடர்புத்துறை கொள்கைகளை மீறி சில நிறுவனங்களுக்கு சலுகை வழங்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்துள்ளது சிபிஐ.

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, நீரா ராடியா, தொலைத் தொடர்புதுறை முன்னாள் அதிகாரிகள் உள்பட பலரிடமும் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

ராசாவிடம் கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி முதன் முதலில் விசாரணை நடத்தியது. அப்போது அவரது உறவினர்களிடமும் நண்பரிடமும் விசாரணை நடந்தது. அதற்கு முன் அவரது வீட்டிலும் அவரது உறவினர்களின் வீட்டிலும் ரெய்ட் நடத்தியது.

25ம் தேதி 2வது முறையாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோதே ராசாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது. சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து இந்த விசாரணை நடந்தது.

அதே நேரத்தில் ராசாவின் சகோதரர் கலிய பெருமாளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை முதல் ராசாவிடம் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் 4வது முறையாக விசாரணை நடத்தினர். டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது.

இன்றைய விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ இன்று முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. அதேப்போல இன்று பிற்பகலில் ராசாவை கைது செய்தது சிபிஐ. பின்னர் அவரது சகோதரர் பெருமாளையும் கைது செய்வதாக சிபிஐ அறிவித்தது. அவர்களுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வரும் 10ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தனது தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், ரூ. 22,000 கோடியளவுக்கே நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில்(FIR) கூறியுள்ளது.

அதே நேரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் திமுகவை நெருக்கவே இந்த நேரத்தில் சிபிஐ தனது பிடியை இறுக்குவதாகவும் பேச்சுக்கதள் எழுந்துள்ளன. இந்தக் கைது நடவடிக்கையால் திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
thatstamil

எகிப்து:அதிபர் முபாரக்கிற்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு

கெய்ரோ,பிப்.2:எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை முபாரக் ஏவிவிட்டார். ராணுவ டாங்கிகள், பீரங்கி வண்டிகள், தெருக்களில் நிறுத்தப்பட்டன எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே தயாராக நின்றனர். போராட்டகாரர்களை ஒடுக்கும்படி முபாரக் ராணுவத்துக்கு உத்தரவிட்டபடி இருந்தார்.

ஆனால் முபாரக் உத்தரவுக்கு கட்டுப்பட ராணுவம் திடீரென மறுத்து உள்ளது. பொதுமக்களை சுட முடியாது என்றும் ராணுவம் கூறிவிட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எகிப்து மக்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் அவர்கள் சட்டப்பூர்வமாக போராடுகின்றனர். அவர்களுக்கு போராட உரிமை உள்ளது. எங்கள் சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்கமாட்டோம்" என்று கூறப்பட்டுள்ளது.

ராணுவமும் மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டதால் முபாரக்கின் நிலைமை மோசமாகி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முபாரக் முயற்சித்து வருகிறார்.

இதுத் தொடர்பாக துணை அதிபர் உமர் சுலைமான் டெலிவிஷனில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார். அதில் அவர் கூறியதாவது: அதிபர் முபாரக் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறார். எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம். அரசியல் சட்டம், சட்டவிதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம். பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்று அவர் கூறினார்.

ஆனால் போராட்டகாரர்கள் சமாதானத்துக்கு தயாராக இல்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர். அதிபர் உத்தரவுக்கு ராணுவம் கட்டுப்பட மறுத்துவிட்ட நிலையில் எதிர்கட்சியினரும் சமாதான பேச்சு நடத்த தயாராக இல்லாததால் முபாரக் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது

முபாரக்கின் பேச்சு ஏமாற்றுவேலை - உடனடியாக பதவி விலக எல்பராதி வலியுறுத்தல்


கெய்ரோ,பிப்.2:சர்வதேச அணுமின் முகமையின் முன்னாள் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான எல்பராதி சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முபாரக் உடனடியாக பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
"முபாரக் செப்டம்பர் மாதம் பதவி விலகுகிறேன் எனக் கூறுவது ஆட்சியில் தொடர்வதற்கான தந்திரமாகும். முபாரக் உடனடியாக பதவி விலகி அடுத்த தேர்தல் வரை கேர்டேக்கரிடம்(இடைக்கால ஆட்சியாளர்) ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

முபாரக்கின் பேச்சு ஏமாற்று வேலையாகும். அவர் ஆட்சியை விட்டு போக விரும்பவில்லை. இந்த நகரத்தில் மக்களைப் பாருங்கள். அவர் எதனை விரும்புகிறார்கள் என்று. முபாரக் தொடர்ந்து தந்திர விளையாட்டை ஆடிவருகிறார். எகிப்தின் வேதனையை அதிகரிக்க அவர் விரும்புகிறார். அவர் ஆட்சியில் தொடர்வது மக்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்யும். யார் அவருக்கு ஆலோசனை வழங்குகின்றார்களோ அவர்கள் தவறான யோசனையையே வழங்குகின்றனர்." இவ்வாறு எல்பராதி தெரிவித்துள்ளார்.  நன்றி: பாலைவன தூதுசெய்தி:presstv

ஹுஸ்னி முபாரக்கின் ராஜினாமாச் செய்ய 50 மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை

கெய்ரோ,பிப்.2:போராட்டம் உக்கிரம் அடையும் முன்பு உடனடியாக ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யவேண்டுமென எகிப்து நாட்டைச் சார்ந்த 50 மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நீதிபீடத்தின் கண்காணிப்பில் பாராளுமன்ற அதிபர் தேர்தல்களை நடத்தவேண்டுமென கெய்ரோ இன்ஸ்ட்யூட் ஆஃப் ஹியூமன் ரைட் ஸ்டடீஸ், செண்டர் ஃபார் எக்ணாமிக்ஸ் அண்ட் சோசியல் ரைட், அரப் செண்டர் ஃபார் இண்டிபெண்டண்ட்ஸ் ஆஃப் ஜுடிஸியரி உள்பட முக்கிய மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளன.

புதிய அரசியல் சட்டம் உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உட்படும் கமிஷனை உருவாக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்