தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.12.10

மரணத்தின் விளிம்பில் தவிக்கும் காஸா நோயாளிகள்


கடந்த நான்கு வருட காலமாக சர்வதேச மனித உரிமைகளை மீறும் வகையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காஸா மீதான சட்டவிரோத முற்றுகையினால், காஸா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலதரப்பட்ட நோயாளிகள் பெரும் இன்னல்களை அனுபவித்துவருகின்றனர் என காஸா மருத்துவ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், எக்ஸ்ரே கருவிகளுக்குரிய உதிரிப்பாகங்கள் முதலான அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களை அனுமதிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை தடைவிதித்துள்ள காரணத்தினால் சிறுவர், பெண்கள், வயோதிகர் என்ற பாகுபாடின்றி காஸா நோயாளிகள் பெரிதும் துன்புறுவதாகவும், அவசர சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான நோயாளிகள் மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2007 ஜூன் முதல் காஸா கரையோரப் பிராந்தியங்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து போதிய மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளும் வழியின்றி காஸா மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகித் துன்புற்றுவருகின்றனர்.

இதேவேளை, 2008 டிஸம்பர் மாதம் காஸா மீதான இஸ்ரேலிய காட்டுமிராண்டித் தாக்குதல் இடம்பெற்று சரியாக இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையில், 300 குழந்தைகள் உட்பட 1400 அப்பாவிப் பலஸ்தீனர்களின் உயிர்களைக் காவுகொண்டு, 5000 க்கும் அதிகாமானோர் படுகாயமடைந்த துர்ப்பாக்கிய நிகழ்வை நினைவுகூறும் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்றன.

காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புத் தாக்குதலின் விளைவாக சுமார் 4000 பலஸ்தீன் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நாட்டின் கீழ்க்கட்டமைப்பு வசதிகள் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டன. ஏராளமான குழந்தைகளும் பெண்களும் பல்வேறு உளவியல் பாதிப்புகளுக்கு உட்பட்டு இன்றுவரை துன்புற்றுவருகின்றனர். சுமார் மூன்று வாரகாலம் தொடர்ந்த இஸ்ரேலிய அத்துமீறல் யுத்தத்தினால் சுமார் 50,000 பலஸ்தீனர்கள் வீடற்ற அகதிகளாய் முகாம்களில் வசித்துவருகின்றனர்.

உலக நாடுகள் மற்றும் ஐ.நா. வாக்குறுதியளித்தபடி முறையான மீள்கட்டுமான முயற்சிகள் இன்னுமே முற்றுப்பெறாத நிலையில், பலஸ்தீன் பொதுமக்களின் நாளாந்த சுமுக வாழ்வையே கேள்விக்குறியாக்கும் வகையில் இன்னுமே ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் தொடரும் இஸ்ரேலிய முற்றுகை குறித்து உலகளாவிய மனிதநேய மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் பல தொடர்ந்தும் தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றமையும் இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்கள், சேவைகளைத் தொடர்ந்து பகிஷ்கரிப்புச் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

அமெரிக்கப் போர்விமானத் தாக்குதல் - 18 பாகிஸ்தானியர் பலி

கடந்த திங்கட்கிழமை (27.12.2010) அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியமான வஸிரிஸ்தானில் ஐ.நா.வின் அனுமதிக்குப் புறம்பாக இடம்பெற்ற அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 18 பாகிஸ்தானியப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. இனால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் போது ஐந்து ஏவுகணைகள் எறியப்பட்டதாகவும், வடக்கு வஸிரிஸ்தானின் மீர் அலி பிரதேசத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை இலக்காகக்கொண்டு இத்தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இத்தகைய வான்வழி ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாலிபான் படையணியினரை இலக்காகக்கொண்டே இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக வாஷிங்டன் தெரிவித்துள்ள போதிலும், இத்தாக்குதல்களில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களே பலியாகி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமை இடம்பெற்ற மேற்படி தாக்குதல் சம்பவத்தைப் பாகிஸ்தானியப் பிரதமர் யூஸுஃப் ரஸா கிலானி கடுமையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்க இராணுவத்தின் இத்தகைய நியாயமற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் பாகிஸ்தானில் ஏராளமான பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளதாக அவர் கடும் விசனம் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை ஸ்ருதி பாண்டே (வயது 6)

அலகாபாத்: உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் உ.பியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஸ்ருதி பாண்டே.

உ.பி. மாநிலம் ஜன்சி நகரைச் சேர்ந்தவர் இந்த குட்டி யோகா ஆசிரியை. 6 வயதே ஆகும் ஸ்ருதி, உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு யோகா சொல்லிக் கொடுத்த மாஸ்டர் ஹரி சேத்தன். இவருக்கு வயது 67 என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன்சி நகரில் உள்ள பிரமானந்த் சரஸ்தி தாம் என்ற ஆசிரமத்தில் தினசரி காலை 5.30 மணிக்கு தனது யோகா வகுப்பை தொடங்கி சொல்லிக் கொடுக்கிறார் இந்த குட்டி ஆசிரியை.

கடந்த 2 வருடங்களாக யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார் ஸ்ருதி. அதாவது தனது 4 வயது முதலே அவர் யோகா ஆசிரியையாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரமத்தை ஹரி சேத்தன் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார். அன்று முதல் இன்று வரை இவ்வளவு இளம் வயதில் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு யோகாவில் கரை கண்டது ஸ்ருதி மட்டும்தான் என்கிறார் ஹரி பெருமையுடன்.

வர்த்தகப் பிரமுகர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என கிட்டத்தட்ட 30 பேர் புடை சூழ வெள்ளை நிற கால்சட்டை, சிவப்பு நிற டி சர்ட் அணிந்து அழகாக யோகா சொல்லிக் கொடுக்கிறார் ஸ்ருதி.

இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், நான் சொல்லித் தருவதை மற்றவர்கள் கேட்டு நடப்பது பெருமையாக இருக்கிறது. என்னை விட வயதில் பல மடங்குப் பெரியவர்கள் நான் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கும்போது உண்மையாகவே எனக்கு ஆசிரியை என்ற உணர்வு வருகிறது. எனது சகோதரர் யோகா செய்வார்.அதைப் பார்த்துதான் எனக்கும் ஆர்வம் வந்தது. பின்னர் நானாகவே செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அதில் சிரமம் இருந்தாதல் என்னை எனது பெற்றோர் யோகா வகுப்புக்கு அனுப்பி கற்கச் செய்தனர் என்கிறார் ஸ்ருதி.

ஸ்ருதியின் சகோதரர் ஹர்ஷ் குமாருக்கு இப்போது 11 வயதாகிறது. இவர் ஏற்கனவே 5 வயதில் யோகாவின் 84 நிலைகளையும் கற்று லிம்கா சாதனை படைத்தவர் ஆவார். இருப்பினும் யோகா ஆசிரியராக செயல்படும் எண்ணம் இவரிடம் இல்லை. ஆனால் தனது தங்கையின் திறமையை வெகுவாக பாராட்டுகிறார் ஹர்ஷ்.

கற்க வந்த 6 மாதத்திலேயே சிறப்பான பயிற்சி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஸ்ருதி என்று கூறும் ஹர்ஷ், ஸ்ருதிக்கு இயல்பிலேயே யோகா கை கூடி வந்தது என்றும் பாராட்டுகிறார்.

ஸ்ருதியின் ரசிகர்களில் ஒருவர் ஸ்வாமி பானு. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு வயது 90 என்பது குறிப்பிடத்தக்கது.