தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.12.10

பள்ளியில் பைபிள் விநியோகம்: பெற்றோர் முற்றுகை

கடலூர் : பண்ருட்டியில் மாணவ, மாணவியருக்கு பைபிள் வழங்கிய இரண்டு பள்ளிகளில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி கஸ்தூரிபாய் தெருவில் உள்ள புனித அன்னாள் நிறுவனத்தின் கீழ் உள்ள முத்தையர் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜான்டூயி பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பைபிள் வழங்கப்பட்டது. பைபிள் வழங்கிய மாணவ, மாணவியர் கட்டாயமாக படிக்க வேண்டும் என வற்புறுத்தியதாக இரண்டு பள்ளிகளிலும் 50க்கும் மேற்பட்ட பெற்றோர் முற்றுகையிட்டு பள்ளி தலைமை ஆசிரியர், நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வரும் 16ம் தேதி இந்து ஆன்மிக பேரவை சார்பில் இரண்டு பள்ளிகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பண்ருட்டி இந்து சமுதாய ஆன்மிக பேரவை தலைவர் கோபாலகிருஷ்ணன், தாசில்தார் பன்னீர்செல்வத்திடம் மனு கொடுத்துள்ளார்.



லஷ்கரைவிட இந்து தீவிரவாத குழுக்களே மிகப்பெரும் அச்சுறுத்தல்: ராகுல் காந்தி


புதுதில்லி, டிச.17: லஷ்கர்- இ- தோய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2009 ஜூலையில் நடந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தோய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு ராகுல் காந்தி, இந்திய முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்கர்-இ-தோய்பாவை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்லீம் சமுதாயத்தினருடன் மோதலையும், பதற்றத்தையும் உருவாக்கும் இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சி இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என ராகுல் காந்தி எச்சரித்ததாக அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராகுல் குறித்த விக்கிலீக்ஸ் வெளியீட்டில் சதிச்செயல் இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உண்மையை ஆராய்வோம். இதன் பின்னணியில் சில சதிச்செயல்கள் இருக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்

ஏமனில் அமெரிக்க தூதரக வாகனத்தின் மீது குண்டுவீச்சு


சனா, டிச.17: ஏமன் தலைநகர் சனாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் சென்ற வாகனத்தின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மற்றும் ஏமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். சனாவில் உள்ள ஹட்டா மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் பி.ஜே.குரோலி தெரிவித்தார்

அசாஞ்சேவுக்கு நிபந்தனை ஜாமீன்


லண்டன், டிச.16: விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு நிபந்தனை ஜாமீனை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இணையதள நிறுவனர் அசாஞ்சே மீது ஸ்வீடன் நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை பிரிட்டிஷ் போலீஸôர் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த பிரிட்டிஷ் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கியுள்ளது. உத்தரவாதத் தொகையாக அவர் 2.4 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகளை செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சிறையிலிருந்து விரைவில் ஜாமீனில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது