தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.10

உலக அமைதிக்காக இந்தியா-அமெரிக்கா இணைந்து பாடுபடும்: மன்மோகன் சிங்

புதுதில்லி, நவ.8- உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரி்க்காவும் இணைந்து ஆக்கப்பூர்வமாகவும் உறுதியாகவும் பாடுபடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
"இருதரப்பு உறவுகளை மேலும் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தவும், இருநாடுகளும் இணைந்து ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில் கூட்டாக சில திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா சேர அமெரிக்கா ஆதரவு தரும். தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை விலக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது." என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
"இருநாடுகளும் பரஸ்பரம் வைத்துள்ள நம்பிக்கை மேலும் வலுப்பெறுவதை உறுதிபடுத்துவதற்கான அறிவிப்புதான் இந்த கூட்டுப் பேட்டி" என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஒபாமா ஆதரவு


புதுதில்லி, நவ.8- ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அவர் உரையாற்றியபோது இதைத் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:

100 கோடிக்கும் மேலான மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் பேசும் வாய்ப்பு கிடைத்ததற்காக முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பெரிய வளம் அதன் மக்கள்தான். இந்தியாவின் வெற்றிக்கு காரணம் ஜனநாயகமே. உலகத்தில் மாற்றம் கொண்டு வரும் வகையில் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இருநாடுகளும் இணைந்து செயல்படும். இந்திய-அமெரிக்க நட்புறவு நீண்ட நாள் தொடரும்.

அமெரிக்காவும் இந்தியாவும் இருபெரும் ஜனநாயக நாடுகள். இருநாடுகளின் அரசியலமைப்புச் சட்டமும் "மக்களாகிய நாம்..." என்ற வார்த்தைகளுடன் தான் தொடங்குகிறது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்பட வேண்டும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை எதிர்பார்க்கிறேன். அதில், நிரந்தர உறுப்பினராக இந்தியா இருக்க வேண்டும். உலகில் இந்தியாவுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும்.

இவ்வாறு ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டார்.

ஒபாமா தனது உரையை முடிக்கும்போது "ஜெய் ஹிந்த்" என்று கூறி முடித்தார். பின்னர் தனது இருக்கையில் அமரும் முன் இந்திய பாணியில் இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் பத்வா உத்தரவை மீறி சூப்பர் மார்க்கெட்களில் பெண் கேஷியர்கள்


ஜெட்டா : சவுதி அரேபியாவில் மத அமைப்பு பிறப்பித்த "பத்வா' உத்தரவை மீறி, அந்நாட்டு சூப்பர் மார்க்கெட்களில் பெண் "கேஷியர்கள்' பணியமர்த்தப்பட்டுள்ளனர். வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உண்டு. முஸ்லிம் பெண்கள், ஆண் பாதுகாவலரின் உதவியின்றி வெளியிடங்களுக்கு செல்லுவது மற்றும் இரு பாலினரும் ஒரே இடத்தில் பணியாற்றுவது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்வா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த உத்தரவுகளுக்கு ஏற்ற வகையில், பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், சவுதி அரேபிய அரசு சில சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபிய அரசின் உயரிய மத அமைப்பு கடந்த ஞாயிறன்று "பத்வா' ஒன்றை பிறப்பித்தது. அதில், "கேஷியர் பணி, சம்பந்தம் இல்லாத ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யும் பணி என்பதால், அந்தப் பணிக்கு பெண்களை நியமிக்கக் கூடாது' என, தெரிவித்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி ஜெட்டா நகரில் உள்ள,"மர்ஹபா ' குரூப் சூப்பர் மார்க்கெட்களில், பெண் "கேஷியர்'கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதே போல, சில ஜவுளிக் கடைகளிலும் பெண் "கேஷியர்'கள் பணிபுரிகின்றனர்.

இதுகுறித்து, மர்ஹபா நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு, மூன்று மாதங்களுக்கு முன் தொழிலாளர் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. உத்தரவு வரும் வரை, தொடர்ந்து பெண்கள் பணிபுரிவர். எங்கள் அனைத்து கிளைகளிலும் 25க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கின்றனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். ஆனால், பத்வா உத்தரவு மீறப்படுவதற்கு, சில மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அயோத்தியில் மாநாடு நடத்த விஹெச்பி முடிவு

அயோத்தி, நவ.8- வரும் 19-ம் தேதி அயோத்தியில் மாநாடு ஒன்றை நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இத்தகவலை அந்த அமைப்பின் தலைவர் ராம் மங்கள் தாஸ் ராமாயணி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அயோத்தியில் நடைபெறும் மாநாட்டில் சுமார் 60 ஆயிரம் ராம பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

"இந்து மதத் தலைவர்களும் துறவிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறி அறக்கட்டளை ஒன்றின் மூலம் பாபர் மசூதியை கட்ட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணியை ராகுல் மூலம் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்றும் ராம் மங்கள் தாஸ் தெரிவித்தார்.

தில்லியில் ஒபாமா: மன்மோகன் சிங் வரவேற்பு


புது தில்லி, நவ. 7: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் புது தில்லி வந்து சேர்ந்தார்.
புது தில்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபைப் புறக்கணித்து பிரதமர் மன்மோகன் சிங், புது தில்லி விமான நிலையத்தில் ஒபாமாவை நேரில் வரவேற்றார்.
மன்மோகன் சிங்குடன் வரவேற்பில் பங்கேற்ற அவரது மனைவி குருசரண் கெளருடனும் ஒபாமாவும், மிஷேலும் உரையாடினர்.
மத்திய இணை அமைச்சர் சல்மான் குர்ஷீத், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர், வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரும் ஒபாமா தம்பதியை வரவேற்றனர்.
ஹுமாயூன் சமாதியில் ஒபாமா: விமான நிலையத்தில் இருந்து ஒபாமா தம்பதி நேரடியாக தில்லியில் உள்ள சுமார் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹுமாயூன் சமாதியைப் பார்வையிடுவதற்காக சென்றனர்.
அவர்களுக்கு அதன் வரலாற்றுப் பின்னணி குறித்து இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை கண்காணிப்பு ஆய்வாளர் கே.கே.முகம்மது எடுத்துக் கூறினார்.
உள்ளே நுழைவதற்கு முன்னரே அந்த நினைவுச் சின்னத்தைப் பார்த்து ஒபாமா கூறிய வார்த்தை- "அற்புதம்'.
பெர்சியன், மத்திய ஆசிய, இந்திய கட்டடக் கலையின் சங்கமமாக விளங்கும் ஹுமாயூன் சமாதியை இருவரும் சுமார் 45 நிமிடம் பார்வையிட்டனர்.
தாஜ் மஹால் கட்டுவதற்கு இந்த நினைவுச் சின்னம்தான் உந்துதலாக இருந்தது என ஒபாமாவிடம் முகம்மது குறிப்பிட்டார்.
அங்கு பணிகள் மேற்கொள்ளும் தொழிலாளிகளின் குழந்தைகள் 14 பேருடன் ஒபாமா தம்பதியினர் பேசி மகிழ்ந்தனர். அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.
'இந்த நினைவுச் சின்னம் மிகவும் அற்புதமாக உள்ளது. எங்கள் நாட்டில் 7 ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு சின்னம் கட்டப்பட முடியுமா என்பது சந்தேகமே' என ஒபாமா குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு புகழாரம்: "அரசுகளின் எழுச்சி, வீழ்ச்சிக்கு இடையே, இந்தியப் பண்பாடு தாக்குப் பிடித்ததுடன் மட்டும் இல்லாமல் உலகையே சாதனையின் உச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது' என ஹுமாயூன் சமாதியில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் ஒபாமா எழுதினார்.
இரு தலைவர்கள் பேச்சு: ஹுமாயூன் சமாதியைப் பார்வையிட்ட பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் இரு தலைவர்களும் 25 நிமிடம் தனிப்பட்ட முறையில் பேசினர்.
மன்மோகன் சிங் விருந்து: அதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் அளித்த விருந்தில் ஒபாமா தம்பதியினர் பங்கேற்றனர்.
இன்று...: திங்கள்கிழமை காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒபாமாவுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் பின்னர் மகாத்மா காந்தியின் சமாதியில் ஒபாமா தம்பதியினர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்தப் பேச்சுக்குப் பின்னர் ஒபாமாவும், மன்மோகன் சிங்கும் கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஒபாமாவை மதியம் சந்திக்க உள்ளனர்.
மாலையில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா உரையாற்றுகிறார்.
2000-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவருக்குப் பின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ள 2-வது அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஒபாமாவுக்கு வரவேற்பு அளிக்க உள்ளார்.
அத்துடன் தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொள்ளும் ஒபாமா, செவ்வாய்க்கிழமை காலை இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.




உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 12 லட்சம் பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்


மதுரை : ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 12 லட்சம்  பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.