தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.10

தில்லியில் ஒபாமா: மன்மோகன் சிங் வரவேற்பு


புது தில்லி, நவ. 7: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் புது தில்லி வந்து சேர்ந்தார்.
புது தில்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபைப் புறக்கணித்து பிரதமர் மன்மோகன் சிங், புது தில்லி விமான நிலையத்தில் ஒபாமாவை நேரில் வரவேற்றார்.
மன்மோகன் சிங்குடன் வரவேற்பில் பங்கேற்ற அவரது மனைவி குருசரண் கெளருடனும் ஒபாமாவும், மிஷேலும் உரையாடினர்.
மத்திய இணை அமைச்சர் சல்மான் குர்ஷீத், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர், வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரும் ஒபாமா தம்பதியை வரவேற்றனர்.
ஹுமாயூன் சமாதியில் ஒபாமா: விமான நிலையத்தில் இருந்து ஒபாமா தம்பதி நேரடியாக தில்லியில் உள்ள சுமார் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹுமாயூன் சமாதியைப் பார்வையிடுவதற்காக சென்றனர்.
அவர்களுக்கு அதன் வரலாற்றுப் பின்னணி குறித்து இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை கண்காணிப்பு ஆய்வாளர் கே.கே.முகம்மது எடுத்துக் கூறினார்.
உள்ளே நுழைவதற்கு முன்னரே அந்த நினைவுச் சின்னத்தைப் பார்த்து ஒபாமா கூறிய வார்த்தை- "அற்புதம்'.
பெர்சியன், மத்திய ஆசிய, இந்திய கட்டடக் கலையின் சங்கமமாக விளங்கும் ஹுமாயூன் சமாதியை இருவரும் சுமார் 45 நிமிடம் பார்வையிட்டனர்.
தாஜ் மஹால் கட்டுவதற்கு இந்த நினைவுச் சின்னம்தான் உந்துதலாக இருந்தது என ஒபாமாவிடம் முகம்மது குறிப்பிட்டார்.
அங்கு பணிகள் மேற்கொள்ளும் தொழிலாளிகளின் குழந்தைகள் 14 பேருடன் ஒபாமா தம்பதியினர் பேசி மகிழ்ந்தனர். அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.
'இந்த நினைவுச் சின்னம் மிகவும் அற்புதமாக உள்ளது. எங்கள் நாட்டில் 7 ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு சின்னம் கட்டப்பட முடியுமா என்பது சந்தேகமே' என ஒபாமா குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு புகழாரம்: "அரசுகளின் எழுச்சி, வீழ்ச்சிக்கு இடையே, இந்தியப் பண்பாடு தாக்குப் பிடித்ததுடன் மட்டும் இல்லாமல் உலகையே சாதனையின் உச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது' என ஹுமாயூன் சமாதியில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் ஒபாமா எழுதினார்.
இரு தலைவர்கள் பேச்சு: ஹுமாயூன் சமாதியைப் பார்வையிட்ட பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் இரு தலைவர்களும் 25 நிமிடம் தனிப்பட்ட முறையில் பேசினர்.
மன்மோகன் சிங் விருந்து: அதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் அளித்த விருந்தில் ஒபாமா தம்பதியினர் பங்கேற்றனர்.
இன்று...: திங்கள்கிழமை காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒபாமாவுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் பின்னர் மகாத்மா காந்தியின் சமாதியில் ஒபாமா தம்பதியினர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்தப் பேச்சுக்குப் பின்னர் ஒபாமாவும், மன்மோகன் சிங்கும் கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஒபாமாவை மதியம் சந்திக்க உள்ளனர்.
மாலையில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா உரையாற்றுகிறார்.
2000-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவருக்குப் பின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ள 2-வது அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஒபாமாவுக்கு வரவேற்பு அளிக்க உள்ளார்.
அத்துடன் தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொள்ளும் ஒபாமா, செவ்வாய்க்கிழமை காலை இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.




0 கருத்துகள்: