தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.11.10

ராமர் கோயிலுக்கு சர்ச்சைக்குரிய நிலம் முழுவதும் தேவை: விஹெச்பி

கோபால்கஞ்ச், நவ.20- அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் ராமர் கோயில் கட்டுவதற்கு வழங்கும் வகையில் அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச பொதுச்செயலர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.

பிகார் மாநிலம் கோபால்கஞ்சில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொகாடியா கூறியதாவது:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 90 x 115 அளவுள்ள இடத்தை மூன்றாக பிரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால், ராமர் கோயில் கட்ட 30 x 35 அளவுள்ள இடம் மட்டுமே கிடைக்கும். இந்த சிறிய இடம் ராமர் கோயில் கட்ட போதுமானதாக இருக்காது.

சர்ச்சைக்குரிய இடம் தான் ராமர் பிறந்த இடம் என்னும் எங்கள் நிலையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுளளது. அங்கு ராமர் கோயில் கட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தரவேண்டும்.

அனைவரின் ஆதரவையும் வேண்டி நாடு தழுவிய "ஹனுமத் ஜகரன் ஹவன் யக்யா" என்னும் விழிப்புணர்வு பயணத்தை விஹெச்பி தொடங்கியுள்ளது.

இவ்வாறு பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

நக்சல் தாக்குதலில் பலியான 2 போலீசாருக்கு முதல்வர் நிதி

சென்னை : சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களின் தாக்குதலில் மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக் குறிப்பு: சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த, மத்திய பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், கல்பகனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனும் ஒருவர்.

இதுதவிர, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், கான்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற காவலர் மற்றொருவர். வீர மரணம் அடைந்த இரண்டு காவலர்களின் தியாகத்தைப் போற்றி அவர்களது குடும்பத்தினருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

பிரதீபா அரபு நாடுகளில் சுற்றுப் பயணம்: நாளை புறப்படுகிறார்

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாளை ஐக்கிய அரபு நாடுகளுக்கு 5 நாளம் பயணமாகப் புறப்படுகிறார்.

இதற்காக அவர் நாளை டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்.

ஐக்கிய அரபு நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப் பயணம் மெற்கொள்ளும் அவர், வரும் 25-ம் தேதி வரை அபுதாபி, சார்ஜா, துபாய் உள்ளிட்ட நகர்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும், அங்கு நடக்கும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அபுதாபியில் நடக்கவிருக்கும் இந்திய வர்த்தக கண்காட்சியைத் துவக்கி வைக்கிறார். பிரதீபா அரபு நாடுகளுக்குச் செல்வது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 25-ம் தேதி அவர் சிரியாவுக்குச் செல்கிறார். அங்கு 29-ம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை (கிழக்கு) செயலாளர் லதா ரெட்டி தெரிவித்தார்.

காஷ்மீர் : ஈரானுக்கு இந்தியா கண்டனம்

ஈரான் காஷ்மீர் பிரிவினையை ஆதரித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவதற்கு அந்நாட்டுத் தூதரிடம் இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதருக்கு இந்திய அரசு கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், காஷ்மீர் தொடர்பாக ஈரான் வெளியிடும் கருத்துகள் இந்தியாவின் பிராந்திய ஒற்றுமைக்கு எதிராக உள்ளன. ஈரானின் நடவடிக்கைகள் இந்திய அரசுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஈரான் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் முதல் ஈரான் அரசு காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று முறை கருத்துத் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடைபெறும் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்றும் பாலஸ்தீன், ஆப்கானிஸ்தானில் நிலவுவது போன்ற சூழ்நிலை காஷ்மீரிலும் நிலவுகிறது என்றும் ஈரான் தெரிவித்திருந்தது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. அவையில் இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் ஈரானில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இதற்கு முன்னர் இதேபோன்ற வாக்கெடுப்பு வந்தபோது ஈரானை ஆதரித்தும், தீர்மானத்தை எதிர்த்தும் இந்தியா வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது

மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளி சுவாமி ஆசிமானந்த் கைது!

மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தை சிபிஐ வெள்ளிக் கிழமையன்று கைது செய்தது.

சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.

குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிமானந்த் ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்த் நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் ஆசிமானந்த்துக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்ற
ன.