தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.12.10

அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு எதிரான கண்டனம் சரியே: உச்ச நீதிமன்றம்!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறைபடிந்துள்ளது என்று கடந்த வாரம் மிகவும் கடுமையாகக் குற்றம் சாட்டிய உச்ச நீதிமன்றம் தனது குற்றசாட்டை நீக்க மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதமன்றத்தின் சார்பில் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ் வாதாடினார். அலாகாபத் உயர் நீதிமன்றத்தில் உள்ள பல நல்ல நீதிபதிகளும் தற்போது சந்தேக வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் நீதிபதிகளின் நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு கோபமுடன் பதில் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி மர்கண்டேய கட்ஜு, அனைத்து விஷயங்களையும் கூறிக் கொண்டிருக்காதீர்கள். நானும் எனது குடும்பத்தினரும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்துடன் தொடர்பில் இருந்து வந்தவர்கள்தான். எந்த நீதிபதி கறைபடிந்துள்ளார். எவர் நேர்மையானவர் என்பது மக்களுக்குத் தெரியும். எனவே இவை பற்றியெல்லாம் என்னிடம் கூறாதீர்கள் என்று கூறினார்.

நாளை மர்கண்டேய கட்ஜு லஞ்சம் வாங்கினால், நாடு முழுவதும் நான் லஞ்சம் வாங்கியது வெளியில் தெரிந்துவிடும். எனவே எவர் நேர்மையானவர்; எவர் கறை படிந்துள்ளவர் என்பது போன்று என்னிடம் கூற வேண்டாம் என்றும் கட்ஜு கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் முந்தைய கருத்து முழு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நடத்தையையே கேள்விக்குட்படுத்தி இருப்பதால், கிராமப்புற மக்களுக்கு நேர்மையான நீதிபதி யார், கறைபடிந்த நீதிபதி யார் என்ற வேறுபாடு தெரியாது. எனவே இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ராவ் கேட்டிருந்தார்.

கிராமப்புற மக்கள் குறித்தெல்லாம் என்னிடம் கூறிக் கொண்டிருக்காதீர்கள். அவர்கள் இப்போது மிகவும் தெளிவாக உள்ளனர். இந்திய மக்கள் முட்டாள்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம் என்று கட்ஜு பதில் அளித்தார்.

கடந்த நவம்பர் 27ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் பரைச் என்ற ஊரில் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தை, ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதத்தில் நடைபெறும் சர்கஸ் காட்சி நடத்துவதற்கு ஒதுக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தனர்.

"டென்மார்க நாட்டில் ஏதோ அரசியல் கறைபடிந்துள்ளது" என்று ஷேக்ஸ்பியர் தம்முடைய நாவலான ஹேம்லெட்டில் கூறியுள்ளார். அதுபோல, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறை படிந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் கூறியிருந்தது. "அலகாபாத் உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும்" என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்
.

வளைகுடாவின் செல்வாக்கான 100 இந்திய அதிகார சக்திகளின் விபரங்கள்

துபாய் : அரேபிய வர்த்தகம் எனும் வளைகுடா வணிக இதழ் வளைகுடாவில் உள்ள சக்தி வாய்ந்த இந்திய பிரபலங்களை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆறு மாதங்களாக நடைபெற்ற இவ்வாய்வில் 500 நபர்களை தேர்ந்தெடுத்து பின் அதிலிருந்து வடிகட்டி 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறும் நபர்களை அவர்களின் நிறுவனத்தின் செல்வாக்கு, வணிகம், மக்களுடன் உள்ள நெருக்கம் என பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இப்பட்டியலில் முதலிடத்தில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்கே குழும உரிமையாளர் யூசுப் அலி உள்ளார். இவரின் குழுமத்தின் ஒரு அங்கமான லூலூ ஹைபர் மார்கெட் வளைகுடாவின் எல்லா நாடுகளிலும் பரவி வியாபித்துள்ள ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவரின் குழமத்தில் 29 நாடுகளை சார்ந்த 22,000 மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில் குழுமங்களிலேயே தமிழ் நாட்டை சார்ந்த சையது சலாஹூதினால் நிர்வகிக்கப்படும் ஈ.டி.ஏ குழுமத்தில் மாத்திரம் இதை விட அதிகமான நபர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லறை வணிக சக்ரவர்த்தியான யூசுப் அலிக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக 15 நாடுகளில் 900 கடைகளை வைத்துள்ள லேண்ட் மார்க் குழுமத்தின் நிறுவனர் முகேஷ் ஜெக்தானியும் ஸ்டாண்டார்ட் சார்டர்ட் வங்கியின் ஆப்பிரிக்க, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பணிகளை நிர்வகிக்கும் சங்கர் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார். நியூ மெடிகல் சென்டர் மற்றும் யூ. ஏ. ஈ எக்ஸ்சேன்ஜ் உரிமையாளர் ஷெட்டி நான்காம் இடத்திலும் 70 வருடங்களுக்கு முன்னாலேயே துபாய்க்கு வந்து அரேபியன் டிரேடிங் ஏஜென்ஸி எனும் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் பஞ்சோலியா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

கல்பார் கன்ஷ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் துணை தலைவர் முஹம்மது அலி, பெட்ரோ கெம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யோகேஷ் மேத்தா, யூனிலிவர் தலைமை நிர்வாகி சஞ்சீவ் மேத்தா, துபாய் பேர்ல் கன்ஷ்டரக்ஷன் தலைவர் சந்தோஷ் ஜோசப் ஆகியோர் முறையே ஐந்து முதல் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். முதல் பத்தில் உள்ள ஓரே பெண்மணியாக ஜூலைகா மருத்துவமனையின் நிறுவனர் ஜூலைகா தாவூத் உள்ளார்.

இப்பட்டியலில் உள்ள நபர்களில் மூன்றில் ஒருவர் சில்லறை வணிகத்தில் உள்ளனர். மேலும் கன்ஷ்டரக்ஷன், சுகாதாரம் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட துறைகளில் கோலோசுப்பவர்களும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பட்டியலில் தமிழக்த்திலிருந்து ஈ.டி.ஏ குழும தலைமை நிர்வாகி சலாஹீதின் 20வது இடத்திலும் ஈ.டி.ஏ குழும நிறுவனர் அப்துல் ரஹ்மானின் மகனும் கோல் & ஆயில் இந்தியா குழும உரிமையாளர் அஹ்மது புகாரி 44வது இடத்திலும் உள்ளனர்.

தமிழகத்தை சார்ந்த நபர்களில் அல் நபூதா மோட்டார்ஸின் தலைமை நிர்வாகி ராஜாராம் 25வது இடத்திலும் லார்ஸன் அன்ட் டுபூரோ பகுதி மேலாளர் நாகநாதன் 47வது இடத்திலும் தோஹா வங்கியின் தலைமை நிர்வாகி சீத்தாராமன் 59வது இடத்திலும் கல்ப் இன்கானின் தலைமை மேலாளர் கனேஷ் சீனிவாசன் 89வது இடத்திலும் உள்ளனர். கல்வி நிறுவங்களில் ஜெம்ஸ் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் வர்கீஸ் 11வது இடத்திலும் இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலை நடத்தி வரும் ரபியுத்தீன் 53வது இடத்திலும் உள்ளனர்.

ஸ்வீடன் அரசின் இணையதளத்தை ஹாக் செய்த விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள்: 12 மணி நேரத்திறகும் மேலாக செயலிழப்பு

ஸ்டாக்ஹோம்: உலகையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அஸ்ஸான்ஜ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு ஹாக்கர்ஸ் குழு ஸ்வீடன் அரசின் இணையதளத்தை ஹாக் செய்து முடக்கி ஸ்வீடன் அரசை அதிர வைத்துள்ளது.

விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட அவர்கள் சுவீடன் அரசின் இணையதளத்தை( http://www.regeringen.se/ ) 12 மணி நேரத்திற்கும் மேலாக செயல் இழக்கச் செய்தனர்.

இன்று அரசு தங்கள் இணையதளத்தை பயன்படுத்த முயன்றபோது அவர்களால் அதற்குள் செல்லமுடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் சர்வரை அணுக முடியவில்லை என்றே வந்துள்ளது என்று ஸ்வீடன் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஸ்வீடன் நாட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் தான் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அஸ்ஸான்ஜ் கைது செய்யப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்குமுன் விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் விசா இணையதளத்தை ஹாக் செய்தனர். மேலும், அலாஸ்காவின் முன்னாள் ஆளுநர் சாரா பாலின் இணையதளத்தையும் ஹாக் செய்தனர். சாரா அஸ்ஸான்ஜை இரத்தக்கறை படிந்த கைகளுடன் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுபவர் என்று விமர்சித்திருந்தார்