தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.2.11

எகிப்து துணை அதிபரை கொலை செய்ய முயற்சி

கெய்ரோ, பிப். 5-
எகிப்து துணை அதிபர் ஒமர் சுலைமானை கொலை செய்ய நடந்த சதியில் அவரது மெய்காப்பாளர்கள் 2 பேர் இறந்தனர். எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி அங்கு பெரும் கிளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் துணை அதிபரை கொலை செய்ய நடந்துள்ள முயற்சி பதட்டத்தை அதிகரித்துள்ளது.
அதிபர் முபாரக் பதவி விலகக் கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை அவருக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று முபாரக் கூறி விட்டார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும், முபாரக்கை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டும் கூட அதை முபாரக் நிராகரித்து விட்டார்.
இந்த நிலையில் துணை அதிபர் ஒமர் சுலைமானைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. ஆனால் அதில் அவர் உயிர் தப்பி விட்டார். மாறாக அவரது மெய்க்காப்பாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் எகிப்தில் நிலைமை மேலும் பதட்டமாகியுள்ளது. இந்த நிலையில் கெய்ரோவில் உள்ள சுதந்திர சதுக்கத்தை விட்டு வெளியேறுமாறு ராணுவம் கூறியதை அந்த நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர். மாறாக லட்சக்கணக்கானோர் கூடி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 11 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் கலவரத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் மாற்றத்தின் மூலம் தான் அங்கு அமைதியை நிலைநாட்ட முடியும். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வந்தால் எகிப்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என ஒபாமா கூறியுள்ளார்.
இந்த நிலையில் அதிபர் 

சுவாமி அசீமானந்த் வாக்குமூலம் கசிவு: சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி, பிப். 5-
சுவாமி அசீமானந்த் வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி என்பது குறித்து பதிலளிக்குமாறு சிபிஐ இயக்குநருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுவாமி அசீமானந்த் கடந்த டிசம்பர் 18-ல் அளித்த வாக்குமூலம் தெகல்கா பத்திரிகையில் வெளியானது. நீதிமன்ற விசாரணையைத் தடம்புரளச் செய்யும் நோக்கத்துடன் வாக்குமூலம் வெளியிடப்பட்டுள்ளதால் இது தொடர்பாக சிபிஐ கூடுதல் எஸ்.பி. டி.ஆர்.பாலாஜி, தெகல்கா பத்திரிகையின் உரிமையாளர், பதிப்பாளர், ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தேவேந்திர குப்தா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சஞ்சய் பன்சால் கூறியதாவது:
எந்தவிதமான சூழ்நிலையில் சுவாமி அசீமானந்த் வாக்குமூலம் ஊடகத்துக்கு கசியவிடப்பட்டது என்பதை விளக்குமாறு சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். இதற்கான பதிலை பிப்ரவரி 15-க்குள் சிபிஐ இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும் என்றார். பின்னர், சிபிஐ கூடுதல் எஸ்.பி., தெகல்கா பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்த தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்தார்

அமெரிக்க தூதரகம் முன்பு அமெரிக்க கொடி எரிப்பு: 50 பேர் கைது

சென்னை, பிப். 5-
அமெரிக்காவில் இந்திய மாணவர்களை கண்காணிப்பதற்காக அவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களை கண்காணிப்பதற்காக அவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கண்டித்து போராட்டங்கள் நடக்கின்றன. சென்னையில் நேற்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் முன்னணி, இந்திய மாணவர் கூட்டமைப்பு ஆகிய இயக்கங்கள் சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு மறியல் முயற்சி நடந்தது. சுமார் 50 பேர் திரண்டு வந்தனர். அண்ணா மேம்பாலம் அருகே இவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். திடீரென்று அமெரிக்க கொடியை தீ வைத்து கொளுத்தினார்கள். பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அண்ணாசாலையில் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

மத்தியபிரதேசத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்கியது

குவாலியர், பிப். 5-
மத்தியபிரதேசத்தில் போர் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் விமானி உயிர் தப்பினார்.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மகாராஜாபூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 11.15 மணிக்கு மிக்-21 ரக பைசன் சூப்பர் சானிக் ஜெட் போர் விமானம் ஒன்று கிளம்பியது. 11.20 மணிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தின் அடர்ந்த காட்டுக்குள் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. ஆனால், விமானம் கீழே விழுவதற்கு முன்னதாக விமானி கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விமானத்தின் பாகங்கள் சுமார் 500 சதுர மீட்டர் பரப்பளவில் சிதறிக்கிடந்தன. தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் ஒரு ஹெலிகாப்டரில் அங்கு விரைந்தனர். அவர்கள் விமானத்தின் நொறுங்கிய பாகங்களை சேகரித்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது

இலங்கை சுதந்திர தினவிழாவை எதிர்கட்சிகள் புறக்கணித்தன

கொழும்பு, பிப். 6 இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்கட்சி தலைவருமான சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவிக்க, அரசு மறுத்து விட்டதை கண்டித்து சுதந்திர தின விழாவை எதிர்கட்சிகள் புறக்கணித்தனர்.
இலங்கையின் 63வது ஆண்டு சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்டாராகமா என்ற இடத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு அதிபர் ராசபக்சே உரையாற்றுகையில், "இலங்கை 2 ஆயிரத்து 500 ஆண்டு பாரம்பரியம் மிக்க நாடு. இயற்கையாகவே மற்றவர்களை பாதுகாக்கவும் போற்றவும் வகையில் அமைந்தது நமது பாரம்பரியம். மனித உரிமையை மதிப்பது என்பது நமது தாய் மண்ணோடு கலந்துவிட்ட ஒரு பண்பு. மற்ற நாடுகளின் உதவியை பாராட்டுகிறேன். நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். அடுத்த நான்கு ஆண்டுகளில் நமது நாட்டின் ஆண்டு வருமானம் இரண்டு மடங்காக உயரும்" என்றார்.
முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்கட்சி தலைவருமான சரத்பொன்சேகா ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆயிரத்து 669 கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதே போல சரத் பொன்சேகாவையும் விடுவிக்கும்படி எதிர்கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால், அரசு, பொன்சேகாவை விடுதலை செய்ய மறுத்து விட்டது. இதை கண்டித்து எதிர்கட்சி தலைவர்கள் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை புறக்கணித்துள்ளனர்