தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.8.10

புகை கக்காத நவீன தொழில்நுட்பத்துடன் 150 பஸ்கள் தயாரிப்பு : புத்தாண்டு முதல் ஓடப்போகிறது


நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, குறைந்த அளவில் புகையை வெளியிடும், "பி.எஸ்., 4' இன்ஜின்களைக் கொண்ட, "கிரீன் பஸ்களை' இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 150 கிரீன் பஸ்கள், புத்தாண்டில் சென்னை சாலைகளில் வலம் வர உள்ளன. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதல் முறையாக தமிழகத்தில் கொண்டுவரப்படும் இந்த முன்னோடித் திட்டம், படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.
நாட்டில் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கார், பஸ், டூவீலர்கள் என வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவு பல்வேறு நாடுகளில், பல்வேறு அளவீடுகளில் கணக்கிடப்படுகின்றன. இந்தியாவில், "பாரத் ஸ்டேஜ்' (பி.எஸ்.,) என்று அளவீடு செய்யப்படுகிறது. பெருகி வரும் வாகனம் வெளியிடும் புகையால், நீர், நிலம், காற்று மாசு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில், "பி.எஸ்., 4' வகை இன்ஜின்கள் கொண்டதாக அமைக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தற்போது நம் நாட்டில் இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும், "பி.எஸ்., 3' வகையிலான இன்ஜின்களைக் கொண்டுள்ளன. "பி.எஸ்., 4' இன்ஜின்களை பயன்படுத்துவதால், புகையின் அளவும், சத்தமும் வெகுவாக குறையும். புகையில் கார்பன், கார்பன் மோனாக்சைடு குறைந்த அளவு வெளியாவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். இதைக் கருத்தில் கொண்டு, புதிய வாகனங்களுக்கு "பி.எஸ்., 4' வகை இன்ஜின்களை பயன்படுத்த மத்திய நகர்ப்புற அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத கிரீன் பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மக்களின் போக்குவரத்துக்கு பிரதானமாக செயல்படுவது மாநகர பஸ்கள்தான். அரசு போக்குவரத்துக் கழகம் ஏழு கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, 21 ஆயிரத்திற்கும் மேலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் "பி.எஸ்., 3' இன்ஜின்கள் உள்ளன. அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வாங்கும் புது பஸ்களை,"பி.எஸ்., 4' இன்ஜினுடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, 150, "கிரீன் பஸ்கள்' வாங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அசோக் லேலண்ட் நிறுவனம் பஸ்களை தயாரித்து வருகிறது. புத்தாண்டு பரிசாக, சென்னையில் இந்த பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் இறுதியிலோ, ஜனவரி முதல் வாரத்திலோ இந்த பஸ்கள் சென்னை நகரில் வலம் வரும். இதன் தொடர்ச்சியாக, படிப்படியாக தற்போதுள்ள பஸ்கள் அனைத்தையும், "பி.எஸ்., 4' வகை பஸ்களாக மாற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது