தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.6.11

அரசுக்கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு சீட் தர மறுப்பு!


ஓசூர்: தமிழகத்தில், தெலுங்கு, கன்னடம், உருது சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடங்கள் பயின்ற சிறுபான்மையினருக்கு அரசுக்கல்லூரிகளில் சேர இருக்கை மறுக்கப்படுதாக மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ப்ளஸ் 2 வகுப்பில், தமிழுக்கு பதில், முதல் பாடமாக உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடம் படித்த மாணவ, மாணவியருக்கு, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர, சீட் மறுக்கப்படுவதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், ப்ளஸ் 2 வரை, முதல் பாடமாக தமிழுக்கு பதில், உருது, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடங்கள் உள்ளன. இவற்றில் சிறுபான்மை மொழி மாணவர்கள், முதல் பாடமாக, தங்களுடைய தாய்மொழியை எடுத்து படிக்கின்றனர். கடந்த காலத்தில், தமிழ் பாடத்தை படித்தவர்களுக்கு இணையாக, மற்ற சிறுபான்மை மொழி பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களுக்கும், அரசு வேலைவாய்ப்பும் அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கவும் முன்னுரிமை கிடைத்தது.
தி.மு.க., ஆட்சியில் நடந்த செம்மொழி மாநாட்டுக்கு பின், தமிழை தவிர மற்ற மொழி பாடங்களை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், "சீட்' வழங்காமல் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையோரத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு மாநிலங்கள், கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இவர்களுடைய குழந்தைகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் முதல் பாடத்துக்கு பதிலாக, தங்கள் தாய்மொழியான, உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி பாடங்களை எடுத்து படிக்கின்றனர்.
பிற மொழி பாடங்களை முதல் பாடமாக எடுத்து படித்ததால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பட்டப்படிப்புகளில் சேருவதற்கு இவர்களுக்கு, "சீட்' மறுக்கப்பட்டு வருகிறது. ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவில், பிற மொழி பாடங்களை முதல் பாடமாக எடுத்து படித்த ஏராளமான மாணவர்கள், அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் கொடுத்து படிக்கின்றனர். வசதியில்லாத ஏழை மாணவர்கள், பள்ளிக் கல்வியோடு நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மவுலானா ஆசாத் உருது கல்வி அறக்கட்டளை தலைவர் சவுகத் அலிகான் கூறியதாவது: அரசு கல்லூரிகளில் தமிழ் முதல் பாடம் படிக்காத சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, "சீட்' வழங்க கூடாது என, அரசு ஆணை உள்ளது என, கூறுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிறுபான்மை மொழியை எடுத்து படித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ப்ளஸ் 2 முடித்து விட்டு, அரசு கல்லூரியில் இடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திகிரியை சேர்ந்த ஷப்ரீன் தாஜ் என்ற மாணவி, உருது பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்ததால், சேலம் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில், "சீட்' மறுக்கப்பட்டது. இந்த மாணவியை விட குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவியருக்கு, "சீட்' வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, அரசு ஆணை உள்ளது என, கூறி சீட் தர மறுத்துவிட்டனர். தமிழகத்தில் சிறுபான்மை மொழி மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் மட்டுமே மேற்படிப்பு படிக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. என்று அவர் கூறினார்.

0 கருத்துகள்: