தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.12.10

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு-தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

அவர்களுக்கு தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் அபுபக்கர் சித்திக், ரபிக் அகமது, ஹைதர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து, ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீ்ர்ப்பில், இந்த மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டது. ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர் போன்ற வெடி பொருட்களை வாங்கியதாக மூவரும் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒப்புதல் வாக்குமூலம் தவிர, அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக வேறு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்

காஷ்மீர் : காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு !


டெல்லியில் நடந்த காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் புகுந்து வன்முறையில் ஈடுபடும் இந்துத்வ குண்டர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி என்ற அமைப்பு காஷ்மீர் பிரச்சினை குறித்து, “விடுதலை: ஒரே வழி” என்ற கருத்தரங்கை கடந்த அக்டோபர் 21 அன்று டெல்லியில் நடத்தியது. இக்கருத்தரங்கில் காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சையத் அலி ஷா கீலானி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வரவர ராவ், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கைச் சீர்குலைக்கும் திட்டத்தோடு அரங்கத்தில் நுழைந்திருந்த இந்துத்துவா பாசிசக் கும்பல் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே ரகளையில் ஈடுபட்டதோடு, சையத் ஷா கீலானி, அருந்ததி ராய் ஆகியோரைத் தாக்கவும் முனைந்தது. இக்கருத்தரங்கையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காஷ்மீரின் வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியையும் அடித்து நொறுக்கியது, அக்கும்பல்.

தில்லி போலீசின் அனுமதி பெற்று, சட்டபூர்வமான முறையில்-அமைதியான வழியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இக்கருத்தரங்கின் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய இக்கும்பல், அக்கருத்தரங்கில் உரையாற்றிய அருந்ததி ராயையும் சையத் ஷா கீலானியையும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் சாமியாடி வருகிறது. சில ‘தேசிய’ப் பத்திரிகைகள் இந்துத்துவா கும்பலின் இந்த பாசிச கோரிக்கைக்கு ஆதரவாக செய்திகளையும், தலையங்கக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன. சில தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அருந்ததி ராயைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டிய அவசியம் குறித்து புதுப் பணக்கார கும்பலைக் கூட்டிவைத்து “டாக் ஷோ’’க்களை நடத்தித் தூபம் போட்டன.

அருந்ததி ராய் அக்கருத்தரங்கில், காஷ்மீர் மக்கள் நடத்தும் போராட்டத்தை, இந்தியாவின் மையப் பகுதியில் நக்சல்பாரிகள் நடத்தும் போராட்டத்தோடும், நர்மதை அணையை எதிர்த்துப் பழங்குடியின மக்கள் நடத்தும் போராட்டத்தோடும் ஒப்பிட்டுப் பேசியதோடு, “போராடும் பழங்குடியின மக்களின் கரங்களில் உள்ள வில்லும் அம்பும், காஷ்மீர் இளைஞர்களின் கரங்களில் உள்ள கற்களும் அவசியமானவைதான். ஆனாலும், அதற்கு மேலும் நமக்குத் தேவைகள் உள்ளன. நாகலாந்து, மணிப்பூர், சட்டிஸ்கர், ஒரிசா, காஷ்மீர் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நீதிக்காகப் போராடி வரும் மக்கள் ஐக்கியப்பட வேண்டிய அவசியத்தை’’த் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

காஷ்மீர் பிரச்சினை குறித்து அம்மாநில மக்களின் கருத்தை அறிவதற்காக மைய அரசு நியமித்துள்ள மூவர் குழுவைப் புறக்கணிக்கக் கோரி அக்கருத்தரங்கில் அறைகூவல் விடுத்த சையத் ஷா கீலானி, “சுயநிர்ணய உரிமை, காஷ்மீர் மக்கள் அனைவரின், காஷ்மீரில் வாழும் சீக்கியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட அனைவரின் அடிப்படை உரிமையாகும்; காஷ்மீர் மக்களின் போராட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் ஆதரிக்கத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறியாகும்” என உரையாற்றினார்.

நீர், நிலம், கனிம வளம் என நாட்டின் பொதுச் சொத்துகள் அனைத்தையும் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுப்பது தேசத் துரோகமா? இல்லை, அந்த அநீதியைத் தடுப்பதற்குப் போராடி வரும் மக்களிடம் ஐக்கியப்பட்டுப் போராடுங்கள் எனக் கோருவது தேசத் துரோகமா? சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவைப் பகுதிபகுதியாக ஆட்சியாளர்கள் பட்டா போட்டுக் கொடுப்பதைக் காட்டிலும், காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்க வேண்டும் எனக் கோருவது எந்த விதத்தில் தேசத் துரோகமாகிவிடும்?

சண்டிகரில் காஷ்மீர் தொடர்பான கூட்டத்தை அச்சுறுத்திய இந்துத்வ கும்பல்

இந்துத்துவா கும்பலோ அருந்ததி ராயைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதை நியாயப்படுத்துவதற்காக, “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை ” என அருந்ததி ராய் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை ஆதரித்துப் பேசியதாகவும் குறிப்பிடுகிறது. சில முதலாளித்துவ அறிஞர்கள், “அருந்ததி ராய் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியிருந்தாலும், அவர் வன்முறையில் ஈடுபடவில்லை; எனவே, அவரைக் கைது செய்ய வேண்டியதில்லை” என இப்பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த இரண்டு கருத்துகளும் ஒன்றுக்கொன்று எதிரானது போலத் தோற்றமளித்தாலும், சாரத்தில் இந்துத்துவா கும்பலும், இந்த முதலாளித்துவ அறிஞர்களும் காஷ்மீரின் வரலாற்றை மூடிமறைக்கிறார்கள் என்பதே உண்மை.

‘‘காஷ்மீர் 1947-இல் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டதே தவிர, அம்மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது கிடையாது” என்பது அருந்ததி ராயின் சொந்தக் கற்பிதம் கிடையாது. அது ஒரு வரலாற்று உண்மை. மேலும், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து அம்மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அப்பொழுது இந்திய அரசு ஒத்துக் கொண்டது. இந்த வரலாற்று உண்மைகளை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்களிடம் எடுத்துக் கூறுவதல்ல, அவ்வரலாற்று உண்மையை மூடிமறைத்துவிட முயலுவதுதான் துரோகமும் நயவஞ்சகமும் ஆகும்.

டைம்ஸ் நௌ, நியூஸ் 24, பயோனீர் உள்ளிட்ட சில ஊடகங்கள் அருந்ததி ராயைத் தண்டிக்கக் கோரும் விவகாரத்தில் இந்துத்துவா கும்பலைவிடக் கேவலமாக நடந்து கொண்டன. அருந்ததி ராய் அக்கருத்தரங்கில் இந்திய இராணுவத்தை வன்புணர்ச்சி வெறிகொண்ட கும்பலாகச் சித்தரித்ததாக இந்த ஊடகங்கள் செய்திகளைத் தயாரித்து வெளியிட்டன. அருந்ததி ராய் இந்த அண்டப்புளுகை அம்பலப்படுத்திய பின்னும், இந்திய தேசியவெறி பிடித்த இந்த ஊடகங்கள் ஒரு புளுகுணிச் செய்தியை வெளியிட்டதற்காக வெட்கப்படவுமில்லை; மறுப்பு வெளியிடவும் இல்லை.

அக்கருத்தரங்கில் காஷ்மீருக்குச் சென்று மடிந்து போகும் ஏழை இந்தியச் சிப்பாய்களின் அவல நிலையைச் சுட்டிக் காட்டிப் பேசிய அருந்ததி ராய், அதற்கு மாறாக, இந்திய இராணுவத்தை வன்புணர்ச்சி வெறிகொண்ட கும்பலாகச் சித்தரித்துப் பேசியிருந்தாலும்கூட அதில் தவறொன்றும் காண முடியாது. துப்பாக்கிச் சூட்டில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களை வீசும் காஷ்மீர் இளைஞர்களைப் பிடித்துக் கொண்டுபோ அதற்குத் தண்டனையாக அவர்களின் விரல் நகங்களைப் பிடுங்கி எறியும் இந்திய இராணுவம், காஷ்மீரத்துப் பெண்களிடம் மட்டும் கண்ணியத்துடன் நடந்து கொண்டிருக்குமா?

அருந்ததி ராய், கீலானிக்கு எதிராக இந்துத்துவா கும்பல் சாமியாடியவுடனேயே காங்கிரசு கூட்டணி அரசு அவர்கள் இருவர் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரும் ஏற்பாடுகளில் இறங்கியது. பின்னர், அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டதாக மைய அரசு கூறினாலும், எந்த நேரத்திலும் அருந்ததி ராய் மீது வழக்குத் தொடுக்கும் நிலையில்தான் இப்பிரச்சினையை தில்லி போலீசிடம் விட்டு வைத்துள்ளது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், “இப்பிரச்சினை பற்றி முடிவு செய்யும் சுதந்திரம் டெல்லி போலீசுக்கு உண்டு” எனக் கூறியிருப்பதில் இருந்தே காங்கிரசின் கபடத்தனத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

காங்கிரசின் இந்த ஜனநாயக வேடத்தைக்கூட இந்துத்துவா கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அருந்ததி ராய் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர உத்தரவிடக் கோரி அக்கும்பல் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

ஏதோ சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் கண்ணியவான் போல வழக்குத் தொடுத்துள்ள இந்துத்துவா கும்பல், இன்னொருபுறம் தனது மகளிர் அணியை இறக்கிவிட்டு அருந்ததி ராய் வீட்டின் மீது தாக்குதல் தொடுத்து, அவரை மிரட்டிப் பணிய வைக்க முயன்றது. இத்தாக்குதல் ஏதோ யாருக்கும் தெரியாமல் சதித் திட்டம் தீட்டப்பட்டு, அதன்பின் நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதல் அல்ல. “ஓவியர் ஹுசைனை வேட்டையாடியதைப் போலவே அருந்ததி ராயையும் வேட்டையாடுவோம்” என பஜ்ரங் தள் கும்பல் பத்திரிகைகளுக்கு செய்தியளித்துவிட்டு நடத்திய தாக்குதல் இது.

குறிப்பாக, என்.டி.டிவி., டைம்ஸ் நௌ, நியூஸ் 24 ஆகிய மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாகவே அருந்ததி ராயின் வீட்டின் முன் குவிந்துவிட்டனர். இதனைத் தாக்குதல் செய்தியை முதல் ஆளாக ஒளிபரப்பிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறாகப் பார்ப்பதா? இல்லை, இந்துத்துவா கும்பலுக்கும் சில தேசிய செய்தி ஊடகங்களுக்கும் இருக்கும் நெருக்கத்தைக் காட்டும் சான்றாகப் பார்ப்பதா? மைய அரசு, முன்னரே அறிவித்துவிட்டு நடந்த இத்தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இதன் மூலம், இவ்விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்படுவதாகக் கூறலாம்.

அருந்ததிராயின் வீட்டையும் அவரையும் தாக்க முயற்சித்த இந்துத்வ கும்பல்

டெல்லிக்கு அடுத்து, ஒரிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வர் நகரில் நடந்த காட்டு வேட்டைக்கு எதிரான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த அருந்ததி ராய்க்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டிய இந்துத்துவா கும்பல், அக்கருத்தரங்கை நடத்தவிடாமல் ரகளையிலும் இறங்கியது. இவ்வன்முறையில் ஐந்து பேர் காயமுற்றனர். அருந்ததி ராய், இந்துத்துவா கும்பலின் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாததோடு, காஷ்மீர் பிரச்சினை குறித்து தான் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற முடியாது என்றும் அறிவித்திருக்கிறார்.

ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான மிர்வாயிஸ் உமர் பாரூக் அரியானா மாநிலத் தலைநகர் சண்டிகரில் காஷ்மீர் பிரச்சினை குறித்த நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு, உரையாற்றத் தொடங்கும் முன்பே ரகளையில் ஈடுபட்ட இந்துத்துவா கும்பல், அவரை நெட்டித் தள்ளி வன்முறையில் இறங்கியது. “அவரின் அரசியல் கருத்துக்களுக்காகத்தான் மிர்வாயிஸ் தாக்கப்பட்டதாக’’க் கூறி, இந்துத்துவா கும்பலின் இந்த வன்முறையை விசிறிவிட்டுள்ளார், காங்கிரசின் கூட்டாளியும் ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான ஒமர் பாரூக்.

அருந்ததி ராயும், சையத் ஷா கீலானியும், மிர்வாயிஸ் உமர் பாரூக்கும் காஷ்மீர் பிரச்சினை குறித்து என்ன பேசி வருகிறார்களோ, அதுதான் காஷ்மீர் மக்களின் பொதுக் கருத்தாகும். இந்திய அரசின் காஷ்மீர் கொள்கைக்கு எதிரான இக்கருத்தைப் பேசுபவர்கள் மீது வழக்கு பாயும்; தாக்குதல் தொடுக்கப்படும் என ஒருபுறம் காட்டிவிட்டு, இன்னொருபுறம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கருத்துக் கேட்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது, காங்கிரசு கும்பல்.

இந்துத்துவா கும்பலோ, முசுலீம் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்ப்பதில், தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதில் காங்கிரசைவிடத் தனக்குத்தான் அதிக அக்கறை உண்டு எனக் காட்டிக் கொள்ள தற்பொழுது காஷ்மீர் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொள்ள முனைகிறது. அருந்ததி ராயின் பேச்சை மட்டுமல்ல, காங்கிரசு அரசு அமைத்துள்ள மூவர் குழுவின் சில்லறை ஆலோசனைகளை எதிர்ப்பதன் மூலமும்; அருந்ததி ராயைக் கைது செய்யாத காங்கிரசு அரசு, அஜ்மீர் வெடிகுண்டு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைக் கைது செய்வதாகப் புலம்புவதன் மூலமும் தனது இந்து-இந்திய தேசிய வெறியைக் காட்டி வருகிறது, அக்கும்பல்

பயங்கரவாதத்தை முறியடிப்போம் மனித உரிமை காப்போம்.

டெல்லி :பாபர் மஸ்ஜித் நீதியை வேண்டுகிறது என்ற முழக்கத்தோடு தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரத்தை டிசம்பர் 6, 2010 முதல் ஜனவரி 30 வரை நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீர்மானித்துள்ளது. இந்த தொடர் முழக்க விழிப்புணர்வு பிரசார தொடக்க நாள் மற்றும் முடியும் நாள் சுதந்திர இந்தியா வரலாற்றில் மறக்க முடியாத நாட்களாகும்.இப்பிரச்சாரத்தின் முடிவு நாளான ஜனவரி 30, 1948யில் பாசிச ஹிந்துத்வா சக்திகளால் மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார் .

இப்பிரச்சாரத்தின் துவக்க நாளான டிசம்பர் 6 , 1992யில் அன்று அதே பாசிச ஹிந்துத்வா சக்திகளால் நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்பின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலான தொன்மைமிக்க பாபர் மஸ்ஜித் பள்ளிவாசலை இடித்து தகர்க்கப்பட்டது. இத்தகைய செயல்களுக்கு நாடே சான்று பகர்கிறது .

இந்த பிரசாரத்தில் "பயங்கரவாதத்தை முறியடிப்போம் மனித உரிமை காப்போம்" என்ற கருத்தை வலியுறுத்தி டிசம்பர் 10ஐ தீவிரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படும்.
பாபர் மஸ்ஜித் வழக்கில் அநீதியான தீர்ப்பை அலஹபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய நிலையிலும் நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்க்கு பங்கு இருப்பதை புலனாய்வுத்துறை அமபலப்படுத்திய நிலையில் இந்த தொடர் முழக்க பிரசாரம் சரியான தருணத்தில் அமைகிறது.

இந்த பிரசாரத்தில் மாவட்ட அளவில் பொது நிகழ்சிகள், போஸ்டர் பிரசாரம், பாபர் மஸ்ஜித் ஆவண படக்காட்சிகள் , ஆர்பாட்டம், பேரணி, தர்ணா போன்ற பொது நிகழ்சிகள் இந்த பிரசாரத்தின்போது நடத்தப்படும். பாப்புலர் பிரண்ட்டோடு இணைந்து சமூகத்தின் பல்வேறு மட்டத்தில் களப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இயக்கங்கள் இந்த தொடர் முழக்க பாபர் மஸ்ஜித் மீட்பு பிரசாரத்தில் இணைந்து செயல்படும் .

பள்ளிவாசல் இடிக்கப்பட்டு அயோத்தியாவில் கலவரம் ஏற்பட்ட பின்பு லிபெர்ஹன் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் மூன்று மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்பிக்கும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அது பதினேழு வருடங்கள் கழித்தே தனது அறிக்கையை தாக்கல் செய்தது. சமர்பிக்கப்பட்ட பிறகும் இன்று வரை மத்திய அரசாங்கம் எந்தவொறு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பதினேழு வருடங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பாக வழக்கில் நீதிக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளோ, நாட்டில் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த சூழலில் டிசம்பர் 6 , 2010 அன்று டெல்லியில் ஜந்தர் மந்தர் வளாகத்தில் காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை தர்ணா போராட்டத்தை நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீர்மானித்துள்ளது. மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமுதாய தலைவர்கள் உட்பட பலரை நாம் தர்ணாவில் பேச அழைத்துள்ளோம் .

இந்தியாவில் முழுமையாக சுதந்திரம், நீதி, பாதுகாப்பு ஆகியவற்றை நிறைவு படுத்தும் வகையில் பாபரி பள்ளிவாசலை அதே இடத்தில் மீண்டும் மறு நிர்மாணம் செய்யும் உரிமையை நிலை நிறுத்துவதற்க்காக போராட அனைத்து இந்தியா குடிமக்களும் முன் வரவேண்டும் என பாப்புலர் பிரண்ட் அழைப்பு விடுக்கிறது . என தேசிய பொது செயலாளர் கே.எம் ஷரீப் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் இருந்து காஸ்ஸாவிற்கு புறப்பட்ட சமாதானக் குழு பாகிஸ்தான் எல்லையில் தடை.

புதுடெல்லி,டிச.5:இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிவரும் காஸ்ஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து காஸ்ஸாவிற்கு புறப்பட்ட 50 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய சமாதானக் குழுவினரின் பயணம் தடைப்பட்டுள்ளது.எட்டு நாடுகளின் தரைமார்க்கம் வழியாக பயணித்து காஸ்ஸாவிற்கு செல்வதற்காக புறப்பட்ட அமைதிக் குழுவினர் பாகிஸ்தானிற்குள் செல்ல இயலவில்லை.

பாகிஸ்தான் அரசு அமைதிக் குழுவினரில் 34 பேருக்கு விசா அனுமதித்துள்ளது. ஆனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கடைசி நேர தகிடுதித்தத்தால் அமைதிக் குழுவின் பயணம் தடைப்பட்டுள்ளது.

வாகா எல்லைவரை சென்ற அமைதிக்குழு மீண்டும் டெல்லிக்கு திரும்பியுள்ளது. பயணத்தை தொடர்வது தொடர்பாக டெல்லிக்கு வந்தபிறகு தீர்மானம் எடுக்கப்படும். விசாவின் காலாவதி வருகிற ஏழாம் தேதி முடிவடைவதால் பயணம் ரத்துச் செய்வதற்கான வாய்ப்புள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு ஒன்றும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கூறி வாகா எல்லையில் இக்குழுவினர் தடுக்கப்பட்டுள்ளனர். பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆஜராக்கி அனுமதி பெற்றபின்னரே இக்குழு பயணத்தை துவக்கியது.

இஸ்ரேலின் தலையீட்டால்தான் எல்லாவித அனுமதி வழங்கப்பட்ட பிறகும் கடைநேரத்தில் பயணம் தலைப்பட்டது என அமைதிக் குழுவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து மற்றும் பொருட்களுடன் இப்பயணத்தை அவர்கள் துவக்கியிருந்தனர். ராஜ்காட்டில் காந்தி சமாதியிலிருந்து துவங்கிய இந்த பயணத்தை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மணிசங்கர் அய்யர் துவக்கி வைத்திருந்தார்.

பாகிஸ்தான் வழியாக சென்று ஈரான், துருக்கி, சிரியா, ஜோர்டான், லெபனான், எகிப்து ஆகிய எட்டு நாடுகளின் தரைவழியாக பயணித்து காஸ்ஸாவிற்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக வாகா எல்லை வழியாக லாகூருக்கு சென்றபிறகு கராச்சி, குவாட்டா, பலுசிஸ்தான் ஆகிய இடங்கள் வழியாக ஈரானிற்குள் செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது