தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.10.10

உலகின் மிகக் குள்ளமான மனிதராக நேபாளி இளைஞர்!கின்னஸ் தேர்வு

கடந்த வியாழக் கிழமையன்று தனது 18 வயதை நிறைவு செய்த நேபாளிய இளைஞர் ஒருவர் உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கஜேந்திர தாபா மகர் 67.08 சென்டி மீட்டர் (26.4 இஞ்ச்) உயரம் உடையவராகவும் 6.5 கிலோ எடையுள்ளவராகவும் இருக்கிறார். கின்னஸ் ரிகார்டு புத்தகத்தில் இதனைப் பதிவு செய்வதற்காக லண்டனில் இருந்து அதன் துணைத் தலைவர் மார்கோ ஃப்ரிகாட்டி காட்மண்டு வந்திருந்தார்.

உலகிலேயே கஜேந்திர தாபா மகர்தான் மிகவும் குள்ளமான மனிதர் என்பதை நான் உறுதி செய்கிறேன் என்று ஆரவாரங்களுக்கிடையே ஃப்ரிகாட்டி கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் வியாபாரி ஒருவர் இந்த இளைஞரைக் கண்டறிந்து ஊடகங்களுக்கு தகவல் சொன்னார். அதன் பின்னர் இந்த இளைஞர் நேபாளத்தின் பிரபலமான மனிதர் ஆனார்.

தம்முடைய மகனுக்கு கின்னஸ் அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக இந்த இளைஞரின் தந்தை ரூப் பகதூர் தாபா மகர் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். நான் இப்பொழுது பெரிய மனிதன் என்று கடந்த சில நாட்களாக தன்னுடைய மகன் கூறிவருவதாகவும் அவர் கூறினார்.

இந்த இளைஞரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று கடந்த நான்காண்டுகளாக தாம் செய்த முயற்சிகள் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இவரைக் கண்டறிந்து தகவல் சொன்ன வியாபாரி பகதூர் ராணா கூறியுள்ளார்.

முதன் முறையாக கின்னஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது, இளைஞருக்கு 18 வயது ஆக வேண்டும் என்று அவர்கள் கூறியதாகவும் ராணா கூறினார்.

மகருக்கு முன் கொலாம்பியாவைச் சேர்ந்த எட்வர் நினோ ஹெர்மன்டெஸ் என்ற 24 வயதுடையவர் 70.21 சென்டி மீட்டர் உயரத்துடன் உலகின் மிக குள்ளமான நபராக அறியப்பட்டு வந்தார்

இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் மீது தே.பா. சட்டம்

இந்து மக்கள் கட்சி என்கிற வலது சாரி கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தர்மர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட உள்ளார்.

திண்டுக்கல் நகர பாரதிபுரத்தைச் சேர்ந்த 42 வயது தர்மர்,இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவராக இருந்து வந்தார் . இவர், கடந்த மாதம் திண்டுக்கல் மலைக்கோட்டையில் சிலையொன்றை சட்டவிரோதமாகப் பிரதிஷ்டை செய்த போது கைது செய்யப்பட்டார்; பின்னர் சிலையும் அகற்றப்பட்டது.

மேலும் பதினைந்து தினங்களுக்கு முன் அக். 3ஆம் தேதியன்று, திண்டுக்கல் மலைக்கோட்டையில் தன் இஷ்டப்படி ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். அப்போது தடுத்த காவல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டார். அடிதடி வழக்கு, மதப் பிரச்னையை தூண்டியது உட்பட பல வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சட்ட ஒழுங்குக்கு ஊறு விளைவித்த இவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் உயரதிகாரி தினகரன் பரிந்துரையின் பேரில், திண்டுக்கல் ஆட்சியர் வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.

நடுவானில் இந்திய விமானி மாரடைப்பால் மரணம்

துபை, அக். 15: கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்திய விமானி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று கத்தார் தலைநகர் தோஹாவுக்கு புதன்கிழமை புறப்பட்டது.

அந்த விமானத்தில் 260 பயணிகள் இருந்தனர். விமானத்தை மும்பையைச் சேர்ந்த விமானி அஜய் குக்ரேஜா (43) உள்ளிட்ட விமானிகள் குழு இயக்கியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சக விமானியிடம் கூறினார் அஜய்.

இதையடுத்து வழியில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூரில் உள்ள செர்தாங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் 4 1/2 மணி நேரம் தாமதமாக தோஹா சென்றடைந்தது.

கோலாலம்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் அஜய் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அஜய் நீண்ட நாளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவர் எப்போதும் இன்ஹேலர் வைத்திருப்பார் என்றும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அஜய் குக்ரேஜாவின் பெற்றோர் மற்றும் மனைவி, மகன், மகள் ஆகியோர் மும்பையில் உள்ளனர். இது பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜயின் உடலை கோலாலம்பூரில் இருந்து மும்பைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.