தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.1.11

இலங்கை புத்தளத்தில் வாழ்ந்து வந்த யாழ் முஸ்லிம் மக்களில் யாழ் நோக்கி 370 பேர் 6 பஸ்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்!

இலங்கை புத்தளத்தில் வாழ்ந்து வந்த யாழ் முஸ்லிம் மக்களின் மற்றுமொரு தொகுதியினர் நேற்று இரவு யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றுள்ளனர். 1990 ஆம் ஆண்டு புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த 20 வருடங்களா புத்தளத்தில் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த இவர்கள் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று இரவு 10 மணியளவில் 370 பேர் 6 பஸ்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இவர்கள் புத்தளத்தில் பெற்றுவந்த உளர் உணவு பங்கீடுகளை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்துக்கு மீள் குடியேற்றதுக்கான பதிவுகளை மேற்கொள்ளவெனவும் யாழ்ப்பாணத்தில் வாழ்வியல் சாத்திய கூறுகளை கண்டறியும் முகமாக யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகியுள்ளனர் என்று எமது புத்தளம் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக
இவர்களும் யாழ்ப்பாணத்தில் 11 ஆம் திகதி செவ்வாயன்று யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்படவுள்ள நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்வர்                                                             நன்றி:  தமிழ் உலகம்           

இலங்கை விமானப் படையினர் இதுவரையில் 56 பேரை காப்பாற்றியுள்ளனர்!

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்த கர்ப்பிணித் தாய் உட்பட 56 பேரை இதுவரையில் விமானப் படையினர் பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் காப்பாற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  மேலும், நேற்று முன்தினம் 22 பேரும் நேற்று 34 பேருமாக மொத்தமாக 56 பேர் காப்பாற்றியுள்ளனர் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை தொப்பிகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதுடன், வாழைச்சேனையை சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவரும் பெல்212 ஹெலிகொப்டர் மூலம் காப்பாற்றப்பட்டு பொலன்னறுவை வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு நிலைமைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படின் உடனடியாக அனுப்பி வைக்கவென அம்பாறை, ஹிங்குராங்கொடை, கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை ஆகிய விமானப் படைத் தளத்திலுள்ள ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

அஜ்மீர் குண்டுவெடிப்பு இந்துக்களின் தர்கா விஜயத்தை தடுக்கவே - ஆசிமானந்த் !

அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிகளவில் விஜயம் செய்வதால் அதனைத் தடுக்கும் முகமாகவும், இந்துக்களை பயமுறுத்தும் முகமாகவுமே அஜ்மீர் தர்காவில் குண்டுவெடிப்பு  நடத்தப்பட்டது என்று கைதாகியுள்ள இந்து தீவிரவாத சாமியார் ஆசீமானந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்து தீவிரவாதிகளே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாமியார் ஆசீமானந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமியார் ஆசீமானந்த் மக்கா மசூதி குண்டுவெடிப்பு, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ள ஆசீமானந்த், இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த இரு தினங்களுக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரான, பின்னர் கொலை செய்யப்பட்டு விட்ட சுனில் ஜோஷி தன்னை வந்து சந்தித்ததாகவும், அவருடன் ராஜ் மற்றும் மெஹல் என்ற இருவரும் வந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜோஷி தன்னிடம், அவரது ஆட்கள்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பை நடத்தியதாகவும், சம்பவம் நடந்தபோது அவர் தர்காவில் தான் இருந்ததாகவும் தெரிவித்ததாக கூறினார். மேலும், இந்த குண்டுவெடிப்பை நடத்துவதற்காக இரண்டு முஸ்லீம் சிறுவர்களை மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவரான இந்திரேஷ் தன்னிடம் அனுப்பி வைத்ததாகவும், அந்த சிறுவர்கள் தான் வெடிகுண்டை தர்காவுக்குள் சென்று வைத்ததாகவும் ஜோஷி தன்னிடம் தெரிவித்ததாக ஆசிமானந்த் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணம் அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் பெருமளவில் விஜயம் செய்து வருவதால் அதனைத் தடுக்கும் வண்ணமும், இந்துக்களை பயமுறுத்தவுமே என்று ஆசிமானந்த் கூறியுள்ளார்.
மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஒருவர் சுவாமி ஆசிமானந்துடன் நன்முறையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து ஹைதராபாதில் உள்ள மக்கா மசூதியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத் தொடர்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன் சாமியார் ஆசிமானந்த் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது

கெளரவ டாக்டர் பட்டம்-சரமாரியாக இஷ்டத்திற்கு வழங்குவதா?-ஹைகோர்ட் கண்டனம்

சென்னை: ஆளுநரின் தனி டாக்டர், முதல்வரின் தனி டாக்டர் என்ற ஒரே காரணத்திற்காக இலவசப் பொருட்களை வாரி வழங்குவது போல கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குவதா என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

முதல்வரின் தனி டாக்டர் கோபால் மற்றும் ஆளுநரின் டாக்டர் உள்ளிட்ட 7 டாக்டர்களுக்கு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சமீபத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இந்த நிலையில் இந்த பட்டம் வழங்குவதை எதிர்த்து ஜி.வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், சொந்த விருப்பத்திற்கேற்ப கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளது போலத் தெரிகிறது. ஒருவர் ஆளுநரின் டாக்டர், முதல்வரின் டாக்டர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கி விட முடியாது.

இலவசப் பொருட்களை வழங்குவதைப் போல டாக்டர் பட்டங்களை அளித்து விட முடியாது. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

பட்டங்களை வழங்கக் கூடாது என்று கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் பட்டங்களை ஏற்கனவே வழங்கி விட்டனர். எனவே வழங்கப்பட்ட பட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மனுதாரர் தனது மனுவை மாற்றிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

முன்னதாக மனுதாரரின் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் வாதிடுகையில்,ஆளுநரின் தனி மருத்துவராக இருக்கும் டாக்டர் சபாரத்னவேலின் பெயரை கடைசி நேரத்தில்தான் பட்டம் பெறுவோர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதில் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன என்றார்

இந்தியாவின் முதல் இலகு ரக போர் விமானம் தேஜாஸ் விமானப்படையில் இணைந்தது

பெங்களூர்: இந்தியாவின் முதல் இலகு ரக போர் விமானம் என்ற பெருமையைப் பெற்றுள்ள தேஜாஸ் விமானப்படையில் இணைந்துள்ளது. 2012ம் ஆண்டு இது செயல்படும் போர் விமானப் பிரிவில் சேர்க்கப்படும்.

கடந்த 30 ஆண்டு காலமாக இழுபறியாக இருந்து வந்தது தேஜாஸ் போர் விமானத் திட்டம். முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் போர் விமானம் இது. இருப்பினும் இதன் என்ஜின் அமெரிக்க தயாரிப்பாகும். அதேபோல இதில் உள்ள ரேடார் ரஷ்யத் தயாரிப்பாகும்.

கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்துள்ள தேஜாஸ் முறைப்படி தற்போது விமானப்படையி்ல் சேர்க்கப்பட்டுள்ளது. விமானப்படைத் தலைமைத் தளபதி பி.வி.நாயக்கிடம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தேஜாஸ் விமானத்தை கையளித்தார்.

விமானப்படையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்து தேஜாஸ் விமானத்தை பல்வேறு முறை பறந்து பார்த்து பரிசோதிக்கவுள்ளது விமானப்படை. அதன் பின்னர் இது இறுதி செயல்பாட்டு அனுமதியைப் பெறும். அதைத் தொடர்ந்து செயல்படும் போர் விமானப் பிரிவில் இணையும். அதாவது மற்ற போர் விமானங்களோடு இந்த தேஜாஸும் பயன்படுத்தப்படும். 2012ம் ஆண்டுதான் இது நிறைவேறும் என்று தெரிகிறது.

பெங்களூரில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்துடன் இணைந்து மத்திய பாதுகாப்புத்துறையின், பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழகம் தேஜாஸை வடிவமைத்தது என்பது நினைவிருக்கலாம். 1983ம் ஆண்டு இந்தத் திட்டம் ரூ. 560 கோடியில் தொடங்கியது.

2004ம் ஆண்டு தேஜாஸ் என்ற பெயரை இந்த விமானத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சூட்டினார். இந்த விமானத்திற்கான டிசைனிங் பணிகள் 1985ம் ஆண்டு தொடங்கியது.

1998ம் ஆண்டு இந்தியா நடத்திய அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததைத் தொடர்ந்து தேஜாஸ் பணிகள் தேக்கமடைந்து போயின.

இப்படி பல்வேறு தடங்கல்களை சந்தித்து வந்த தேஜாஸ் தற்போது விமானப்படையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இந்தியாவின் முதல் சுதேசி போர் விமானம் என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது.

முதல் கட்டமாக, 2011 மத்திக்குள் இரண்டு ஸ்குவாட்ரன் தேஜாஸை கொள்முதல் செய்ய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலில் 40 தேஜாஸுக்கான ஆர்டர்களை கடந்த 2005ம் ஆண்டே கொடுத்து விட்டது விமானப்படை.

இந்த நாற்புத விமானங்களும் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஜிஇ-எப்404 என்ஜின் பொருத்தப்பட்டவையாகும். இதற்காக 99 என்ஜின்களை வாங்கியுள்ளனர்.

வரும் ஆண்டுகளில் மேலும் சக்தி வாய்ந்த என்ஜின் பொருத்தப்பட்ட 100 விமானங்களை வாங்க விமானப்படை திட்டமிட்டுள்ளது.

மொத்தத்தில் முதல் கட்டமாக 200 தேஜாஸ் விமானங்களை விமானப்படை கொண்டிருக்கும். தேஜாஸ் விமானங்கள் சேர்க்கப்பட்ட பின்னர் படிப்படியாக ரஷ்யாவின் அறுதப்பழசான மிக்-21, மிக்-27 விமானங்கள் நீக்கப்படும்.

இந்திய விமானப்படையின் முதல் தேஜாஸ் படைப் பிரிவு கோவை மாவட்டம், சூலூரில் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் விமான விபத்து: 70 பேர் பலி!

ஈரானின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற விமான விபத்தில் 70 பேர் பலியாகி உள்ளதாக ஈரானிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஈரானியத் தலை நகர் டெஹ்ரானில் இருந்து ஞாயிற்றுக் கிழமையன்று புறப்பட்ட விமானம் ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள ஒருமியாஹ் என்ற ஊருக்கு மாலை 4.15 மணிக்கு வந்து சேர்ந்த போது விமானம் வெடித்துச் சிதறியது என்று கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் மொத்தம் 102 பேர் பயணம் செய்ததாகவும் அவர்களில் 70 பேர் பலியாகிவிட்டதாகவும் ஈரானிய செம்பிறைச் சங்கம் கூறியுள்ளது.

போயிங் 727 வகையைச் சேர்ந்த இந்த விமானம் சுமார் 40 ஆண்டுகளுக்கும் முந்தைய தயாரிப்பு என்று தகவல்கள் கூறுகின்றன.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதால், புதிய விமானங்கள் வாங்குவதோ, விமான உதிரி பாகங்கள் வாங்குவதோ ஈரானுக்குச் சிரமம். எனவே ஈரானில் பெரும்பாலும் பழைய விமானங்களே புழக்கத்தில் இருந்து வருகின்றன. அங்கு விமான விபத்துகளும் அதிகம் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

சென்னை தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள 16 சட்டசபைத் தொகுதிகளில் மொத்தம் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டுள்ளது. 2011 ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் தொகுதி மறு சீரமைப்பின்படி திருத்தப்பட்ட புதிய தொகுதிகளாகும்.

சென்னையில் 30 லட்சம் வாக்காளர்கள்:

தலைநகர் சென்னையில் தற்போது 16 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 30,23,900 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 15,14,037. பெண்கள் 15,9,571 ஆவர். இவர்கள் தவிர திருநங்கைகளின் எண்ணிக்கை 292 ஆகும்.

பெரம்பூர் தொகுதியில்தான் அதிக அளவிலான வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 2,20,654 பேர் உள்ளனர். ஆண்கள்தான் அதிகம், அவர்களின் எண்ணிக்கை 1,10,653 பேராகும். பெண்களின் எண்ணிக்கை 1,09,993 பேராகும். 2வது பெரிய தொகுதியாக, வேளச்சேரி தொகுதியில், 2,17,026 பேர் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தாலோ, சேர்த்தல், நீக்கல் செய்ய வேண்டி இருந்தாலோ மீண்டும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மண்டல அலுவலகங்களில் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 19 லட்சம் வாக்காளர்கள்:

மதுரை மாட்டத்தில் 10 சட்டசபைத் தொகுதிகளில் 19 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியான வரைவுப் பட்டியலில் 19,25,126 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இதில் பெயர்களைச் சேர்க்க 63,565 மனுக்கள் பெறப்பட்டு அதில் 56,243 மனுக்கள் ஏற்கப்பட்டன. நீக்கல் மனுக்கள் 282 பெறப்பட்டு அதில் 148 மனுக்கள் ஏற்கப்பட்டன. துணைப்பட்டியலில் 28,725 ஆண் வாக்காளர்களும், 27,518 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 56,243 வாக்காளர்கள் உள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான ஷேக் கலிபாவுக்கு எலும்பு முறிவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான ஷேக் கலிபா பின் ஸைத் அல் நஹ்யானுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில்
உடல்பயிற்சி செய்யும்போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய அரபு அமீரக அரசு செய்திப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இன்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனை ஷேக் கலிபா சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிபருக்கு ஏற்பட்டுள்ள விபத்தினால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹிலாரி கிளிண்டன் 9.1.2011 அன்று அபுதாபி வந்தார். வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் முதலில் ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஸேக் கலிபா உடல்நல சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து சென்று வந்தார். அதிபர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அபுதாபி இளவரசர் முஹம்மத் பின் ஸைத் அரசு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்.