கடந்த 30 ஆண்டு காலமாக இழுபறியாக இருந்து வந்தது தேஜாஸ் போர் விமானத் திட்டம். முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் போர் விமானம் இது. இருப்பினும் இதன் என்ஜின் அமெரிக்க தயாரிப்பாகும். அதேபோல இதில் உள்ள ரேடார் ரஷ்யத் தயாரிப்பாகும்.
கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்துள்ள தேஜாஸ் முறைப்படி தற்போது விமானப்படையி்ல் சேர்க்கப்பட்டுள்ளது. விமானப்படைத் தலைமைத் தளபதி பி.வி.நாயக்கிடம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தேஜாஸ் விமானத்தை கையளித்தார்.
விமானப்படையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்து தேஜாஸ் விமானத்தை பல்வேறு முறை பறந்து பார்த்து பரிசோதிக்கவுள்ளது விமானப்படை. அதன் பின்னர் இது இறுதி செயல்பாட்டு அனுமதியைப் பெறும். அதைத் தொடர்ந்து செயல்படும் போர் விமானப் பிரிவில் இணையும். அதாவது மற்ற போர் விமானங்களோடு இந்த தேஜாஸும் பயன்படுத்தப்படும். 2012ம் ஆண்டுதான் இது நிறைவேறும் என்று தெரிகிறது.
பெங்களூரில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்துடன் இணைந்து மத்திய பாதுகாப்புத்துறையின், பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழகம் தேஜாஸை வடிவமைத்தது என்பது நினைவிருக்கலாம். 1983ம் ஆண்டு இந்தத் திட்டம் ரூ. 560 கோடியில் தொடங்கியது.
2004ம் ஆண்டு தேஜாஸ் என்ற பெயரை இந்த விமானத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சூட்டினார். இந்த விமானத்திற்கான டிசைனிங் பணிகள் 1985ம் ஆண்டு தொடங்கியது.
1998ம் ஆண்டு இந்தியா நடத்திய அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததைத் தொடர்ந்து தேஜாஸ் பணிகள் தேக்கமடைந்து போயின.
இப்படி பல்வேறு தடங்கல்களை சந்தித்து வந்த தேஜாஸ் தற்போது விமானப்படையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இந்தியாவின் முதல் சுதேசி போர் விமானம் என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது.
முதல் கட்டமாக, 2011 மத்திக்குள் இரண்டு ஸ்குவாட்ரன் தேஜாஸை கொள்முதல் செய்ய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலில் 40 தேஜாஸுக்கான ஆர்டர்களை கடந்த 2005ம் ஆண்டே கொடுத்து விட்டது விமானப்படை.
இந்த நாற்புத விமானங்களும் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஜிஇ-எப்404 என்ஜின் பொருத்தப்பட்டவையாகும். இதற்காக 99 என்ஜின்களை வாங்கியுள்ளனர்.
வரும் ஆண்டுகளில் மேலும் சக்தி வாய்ந்த என்ஜின் பொருத்தப்பட்ட 100 விமானங்களை வாங்க விமானப்படை திட்டமிட்டுள்ளது.
மொத்தத்தில் முதல் கட்டமாக 200 தேஜாஸ் விமானங்களை விமானப்படை கொண்டிருக்கும். தேஜாஸ் விமானங்கள் சேர்க்கப்பட்ட பின்னர் படிப்படியாக ரஷ்யாவின் அறுதப்பழசான மிக்-21, மிக்-27 விமானங்கள் நீக்கப்படும்.
இந்திய விமானப்படையின் முதல் தேஜாஸ் படைப் பிரிவு கோவை மாவட்டம், சூலூரில் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக