முதல்வரின் தனி டாக்டர் கோபால் மற்றும் ஆளுநரின் டாக்டர் உள்ளிட்ட 7 டாக்டர்களுக்கு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சமீபத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இந்த நிலையில் இந்த பட்டம் வழங்குவதை எதிர்த்து ஜி.வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், சொந்த விருப்பத்திற்கேற்ப கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளது போலத் தெரிகிறது. ஒருவர் ஆளுநரின் டாக்டர், முதல்வரின் டாக்டர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கி விட முடியாது.
இலவசப் பொருட்களை வழங்குவதைப் போல டாக்டர் பட்டங்களை அளித்து விட முடியாது. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
பட்டங்களை வழங்கக் கூடாது என்று கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் பட்டங்களை ஏற்கனவே வழங்கி விட்டனர். எனவே வழங்கப்பட்ட பட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மனுதாரர் தனது மனுவை மாற்றிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.
முன்னதாக மனுதாரரின் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் வாதிடுகையில்,ஆளுநரின் தனி மருத்துவராக இருக்கும் டாக்டர் சபாரத்னவேலின் பெயரை கடைசி நேரத்தில்தான் பட்டம் பெறுவோர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதில் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக