தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.11.10

கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!


அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறைபடிந்துள்ளது என்று வெள்ளிக் கிழமையன்று மிகவும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ள உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மை குறித்துக் கேள்வி எழுப்பி கவலை தெரிவித்துள்ளது.
"டென்மார்க நாட்டில் ஏதோ அரசியல் கறைபடிந்துள்ளது" என்று ஷேக்ஸ்பியர் தம்முடைய நாவலான ஹேம்லெட்டில் கூறியுள்ளார். அதுபோல, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறை படிந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது. "அலகாபாத் உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும்" என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்துவதற்காக நீதிபதிகளை இடம் மாற்றப் பரிந்துரை செய்தல் உள்பட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அலகாபத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக மாமா நீதிபதிகள் (uncle judge) போன்று செயலப்படுவதாகவும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் 12 பக்க உத்தரவில் கூறியுள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் பரைச் என்ற ஊரில் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தை, ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதத்தில் நடைபெறும் சர்கஸ் காட்சி நடத்துவதற்கு ஒதுக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் மேற்கண்டவாறு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளனர்.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் ஏற்றுக்கொள்ளத் தகாத தீர்ப்புகளால் நாட்டு மக்களின் நம்பிக்கை ஆட்டப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கட்ஜு மற்றும் மிஷ்ரா ஆகியோர் கூறியுள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சில நீதிபதிகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன என்பதை நாங்கள் வருத்தத்துடன் கூறிக் கொள்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் சில நீதிபதிகளின் உறவினர்கள் வழக்கறிஞர்களாக அதே நீதிமன்றத்தில் வழக்காடுகின்றனர். தங்கள் பணியைத் தொடங்கிய சில காலங்களுக்குள்ளே நீதிபதிகளின் உறவினர்கள் கோடீசுவரர்களாக மாறிவிடுகின்றனர். மிகப்பெரும் வங்கி இருப்புகள், சொகுசு கார்கள், மிகப்பெரும் வீடுகள் என சொசுகு வாழ்க்கையை வாழ்கின்றனர் என்றும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

நீதிபதிகளை உறவினர்களாகக் கொண்ட அனைத்து வழக்கறிஞர்களுமே தங்கள் உறவை தவறானவற்றிற்காகப் பயன்படுத்துகிறார்கள் என நாங்கள் கூறவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மிகக்கடுமையான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அலகாபாத் மற்றும் லக்னோ கிளைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அமர்வு நீதிபதிகள் தங்கள் கூட்டு உத்தரவில் கூறியுள்ளனர்.

62 ஆண்டு கால பாபர் மசூதி - இராம ஜென்ம பூமி வழக்கிலும் இதே அலஹாபாத் நீதிமன்றம் தான் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை

ரியாத் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் பிராத்தித்ததாக ஹஜ் செய்வதற்காக சவூதி அரேபியா வந்திருக்கும் கென்யாவை சார்ந்த அவரின் பாட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தன்னுடைய ஹஜ் கடமையை முடித்து விட்டு ஜெத்தாவில் அல்-வதான் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பராக் ஒபாமாவின் 80 வயதான பாட்டி ஹாஜா சாரா ஒமர் “ என் பேரன் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று பிராத்தனை செய்தேன்” என்று கூறினார்.

ஹாஜா சாரா ஒமர் தன் மகனும் ஒபாமாவின் மாமாவுமான சயீத் ஹுசைன் ஒபாமா மற்றும் தன் நான்கு பேரக்குழந்தைகளுடனும் சவூதி அரசரின் சிறப்பு விருந்தினர்களாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் அரசியல் குறித்து தான் புனித யாத்திரையின் போது எக்கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.

மீண்டும் வெள்ளை மாளிகைக்கு ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா என கேட்டதற்கு எதிர்காலத்தை அறியும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் அல்லாஹ் ஒருவனே அதை அறிவான் என்றும் கூறினார். மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள சவூதி அரசர் விரைவில் குணம் பெற வேண்டும் என்றும் பிராத்தித்ததாகவும் கூறினார்.

நிதீஷ்குமார் வெற்றி - மதவெறிக்கு இடமில்லை: நல்லக்கண்ணு

பீகார் சட்டமன்றத் தேர்தலில்ல அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது, பீகாரில் மதவெறிக்கு இடமில்லை என்பதை நிரூபிக்கிறது என இந்திய கம்யூனிஸ் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ’அயோத்தி தீர்ப்பும், மதச்சார்பின்மையும்’ என்ற கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, 1952-ல் முதல் தேர்தல் நடைபெற்றது. இப்போது பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்துள்ளன. உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து மிகப்பெரிய மாநிலமான பீகாரில் நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் 20-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்த இடதுசாரிகள் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியை பலரும் பல விதமாக பார்க்கிறார்கள். சிலர் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்கிறார்கள். சிலர் மதம், ஜாதியைக் கடந்து நிதிஷ்குமார் செயல்பட்டதால் கிடைத்த வெற்றி என்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரக்கூடாது என்று தடுத்ததால் அவருக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. அதாவது மதவெறிக்கு இடமில்லை என்பதை அந்த மாநில மக்கள் நிரூபித்துள்ளனர். மோடி பிரசாரம் செய்திருந்தால் வெற்றி கிடைத்திருக்காது.

என்று பேசினார். இந்தக் கூட்டத்தில் அ. மார்க்ஸ் எழுதிய 'பாபர் மசூதி ராமஜென்ம பூமி தீர்வும், தீர்ப்பும்' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது

அனாதையாக கிடந்த பெரியவரின் சடலம்- நல்லடக்கம் செய்த திருத்துறைப்பூண்டி TNTJ

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகில் முஸ்லிம் பெரியவர் ஒருவரின் உடல் இறந்த நிலையில் கிடப்பதாக கடந்த 3-11-2010 அன்று நகர TNTJ விற்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த நகர நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். இறந்தவரின் பெயர் முஹம்மது ஜின்னா வயது 54 என்பதும் அவரது ஊர் இளையாங்குடி என்பதும் தெரியவந்தது.

பின்னர் இளையாங்குடி TNTJ மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சடலத்தை TNTJ ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து பின்னர் TNTJ செலவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

TNTJ வின் இந்த மனிதநேய பணியை பார்த்த காவல்துறையினரும் இறந்தவரின் உறவினர்களும் TNTJ வை பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்!