தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.10.10

தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் : இ.யூ.மு. லீக் மாநில செயலாளர் நம்பிக்கை

குலசேகரம்: தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹ்பூப் தெரிவித்தார்.
குலசேகரம் ஜமா அத்திற்கு வருகை தந்த காயல் மஹ்பூப் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவராக மத்திய அசைச்சர் அகமதுவும், மாநில தலைவராக காதர்மைதீனும் உள்ளனர். மத்தியில் ஆட்சியில் உள்ளோம். மாநிலத்தில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். கட்சி தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மையினர் நல பாதுகாப்புக்கு குரல் கொடுக்கிறது.காஷ்மீர் தூதுக்குழுவில் இடம் பெற்று இந்திய மக்களின் கருத்தை எடுத்து கூறியதற்கு பா.ஜ., பாராட்டியது. மதத்தின் பெயரால் மனிதர்களை பிரிக்கக்கூடாது என்ற கொள்கை முழக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். சமய நல்லிணக்க மாநாடு நடத்தி மூன்று சமய தலைவர்களையும் கவுரவித்தோம்.வரும் டிசம்பர் 11ம் தேதி தாம்பரம் ரயில்வே மைதானத்தில் மகிளா ஜமா அத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கு நடத்த உள்ளோம். இதில் ஜமா அத் கட்டுப்பாடுடன் சமுதாய செயல்பாடு நடத்தும் ஜமா அத்துகளை தேர்தெடுத்து கவுரவிக்கிறோம். இதில் தமிழகத்தில் நான்கு ஜமா அத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.குலசேகரம் ஜமா அத்தும் அதில் ஒன்று. அதற்காக ஜமா அத்தை பார்வையிட்டு பரிந்துரை செய்ய வந்துள்ளோம். மேலும் கருத்தரங்கில் தமிழக முதல்வருக்கு நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது வழங்கி கவுரவிக்கிறோம். இந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் அகமது, தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கின்றனர்.
கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். தி.மு.க., கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். கடந்த முறை 7 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டில் வெற்றி பெற்றோம். இம்முறை பத்மனாபபுரம் தொகுதி உட்பட 10 தொகுதிகள் கேட்போம்.இதுவரை கட்சியில் 8.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். பத்து லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கில் உள்ளோம். தமிழகத்தில் உள்ள 60 லட்சம் முஸ்லிம்களில் 92 சதவீதத்தினர் சுன்னத் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். எட்டு சதவீதம் தான் மற்ற பிரிவினர்.தமிழகத்தில் 12 ஆயிரம் மகிளா ஜமா அத் அமைப்பு உள்ன. தற்போது 28 மாவட்டங்களில் கட்சியின் அமைப்பு தேர்தல் நடத்தி உள்ளோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் அமைப்பு தேர்தல் நடக்க உள்ளது. இவ்வாறு காயல் மஹ்பூப் கூறினார்.பேட்டியின் போது பாங்காக் தமிழ் சங்க தலைவர் சம்சுத்தீன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் நாசர், செயலாளர் மஹ்மூத் ஹஸன், குமரி மாவட்ட தலைவர் சாகுல் அமீது, செயலாளர் நசீம், மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் அப்துல் நாசர், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, குலசேகரம் முஸ்லிம் ஜமா அத் தலைவர் பீருக்கண், செயலாளர் ஷாகுல் ஹமீது, குலசேகரம் பிரைமறி முஸ்லிம் லீக் தலைவர் ஷாஜகான், செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட தி.மு.க., முன்னாள் தலைவர் எஸ்.எம்.ஷா, குளச்சல் பிறைமறி முஸ்லிம் லீக் துணைத்தலைவர் ஷாகுல் ஹமீது உடன் இருந்தனர்.