தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.10.10

என்னைக் கொல்ல மொஸாத் திட்டம் - துபை காவல்துறை ஆணையர்

இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாதிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக துபையின் காவல்துறை தலைவர் தாஹி கல்ஃபான் தெரிவித்துள்ளார். ஜனவரி 20, 2010 அன்று ஹமாஸ்

அமைப்பைச் சார்ந்த மஹ்முத் அல் மபுஹின் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் மொஸாத் இருப்பதாக தாஹி கல்ஃபான் தெரிவித்திருந்தார். இதுவரை தனக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உங்களது நாக்கை தேவையில்லாமல் பயன்படுத்தினால் உயிரை இழக்க நேரிடும் என ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஆய்வாளர்கள் இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிந்ததாக கல்ஃபான் தெரிவித்தார். இரண்டாவதாக கல்ஃபானின் உறவினரை தொடர்பு கொண்ட ஒருவர் கல்ஃபானை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார். பின்னர் அவ்வாறு அந்த உறவினரை மிரட்டியவர் மொஸாதின் உளவாளி என்பது தெரிய வந்துள்ளது.

பிப்ரவரி 2010 ல் கல்ஃபான் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட 11 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டார். ஒரு மேற்கத்தேய நாடு இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த சந்தேக நபர்களில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்த கல்ஃபான் அந்த நபரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்தக் கொலையில் 12 இங்கிலாந்துக்காரர்கள், 6 அயர்லாந்தவர், 4 பிரான்ஸ் நாட்டவர், 3 ஆஸ்திரேலியர் மற்றும் ஒரு ஜெர்மனியர் சம்பந்தப்பட்டிருப்பதாக துபை காவல்துறை சந்தேகிக்கிறது. இவர்கள் அனைவரும் அந்தந்த நாட்டின் போலி பாஸ்போர்ட்களை வைத்து துபை வந்திருக்கின்றனர். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நாடு தங்கள் நாட்டிலுள்ள இஸ்ரேலிய தூதரகத்திடம் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலைக்கும் மொஸாதுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.

ஹஜ் யாத்ரிகர்களுக்கு வசதியாக மக்காவில் மெட்ரோ ரெயில்!

மக்கா: முஸ்லிம்களுக்கான ஹஜ் புனிதக்கடமையின் போது யாத்ரீகர் போக்குவரத்துக்கு உதவும் வகையில் மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய புனித இடங்களுடன் மக்காவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் முழுமை பெற்றுள்ளது. 30 தினங்களுக்கு இந்த ரயில்களின் வெள்ளோட்டம் விரைவில் விடப்படவுள்ளன. ஹஜ் யாத்ரிகர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


முன்னதாக, சவுதி அரேபிய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் இளவரசர் மன்சூர் பின் மித்அபு இதனை ஆய்வு செய்ய உள்ளார்.

அமைச்சக வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில் "6.5 பில்லியன் சவூதி ரியால்கள் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மக்கா மெட்ரோ திட்டம், யாத்ரிகர்களுக்கான திட்டங்களிலேயே இரண்டாவது பெரிய திட்டமாகும். இதன்மூலம் ஒரு மணி நேரத்திற்கு 72,000 யாத்ரிகர்கள் பயணித்துப் பயனடையலாம். புனிதக்கிரியைத் தலங்களான மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகியவற்றில் தலா மூன்று நிலையங்கள் என்கிற கணக்கில் 9 நிலையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, சுமார் 300 மீட்டர் நீளமுள்ள 10 தொடர்வண்டிகள் இயக்கப்படும் என்று சவுதி அரேபிய நகர்ப்புற வளர்ச்சி துறை துணை அமைச்சர் ஹபீப் ஜெயினுல் ஆபிதின் தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு வண்டியும் 3000 பயணிகளுக்கு இடமளிக்கும்" என்றார் அவர். இந்த ரயில் திட்டமானது அரஃபா - முஸ்தலிஃபா மற்றும் முஸ்தலிஃபா - மினா இடையேயான பயண கால அளவையும், மக்கா நகரின் போக்குவரத்து நெரிசலையும் வெகுவாக குறைத்துவிடும்.

மேலும் அவர் தெரிவிக்கையில் "இரண்டாம் கட்டத்தில், தொடர்வண்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும். மக்கா புனித ஆலயத்திற்கான நிலையம் உம்முல்குரா சாலையில் அமைக்கப்படும். இந்த அல்மஷாயிர் ரெயில்வேயானது படிப்படியாக மதீனா, ஜெத்தா நகரங்களையும் இணைத்துச் செயற்படும் வகையில் அல்-ஹரமைன் ரெயில்வேயுடன் இணைக்கப்படும்"என்று கூறினார்.

வருடம் முழுதும் இந்த ரெயில்கள் இயக்கப்படும். 80-120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரெயில்களில் 20விழுக்காடு அமர்ந்து பயணிக்கவும், 80 விழுக்காட்டினர் நின்று பயணிக்கவுமாக அமைக்கப்பட்டுள்ளனவாம். வரும் வியாழனன்று இதற்கான வெள்ளோட்டம் தொடங்கப்படுகிறது.

இங்கிலாந்து தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

எமன் தலைநகரம் சனாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மீது இன்று தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்னொரு தாக்குதலில் ஒரு பிரான்ஸ் ஊழியர் கொல்லப்பட்டுள்ளார். இந்த ராக்கெட் தூதரகத்திலுள்ள வாகனத்தின் மீது விழுந்ததாகவும் அதிலிருந்த ஒரு இங்கிலாந்து நாட்டவர் காயமடைந்திருப்பதாகவும் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலேஹ் இந்தத் தாக்குதல் சம்பந்தமாக இங்கிலாந்து தூதரிடம் நேரில் சந்தித்து உரையாடினார்.
மற்றொரு சம்பவத்தில் OMV என்ற எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒரு பாதுகாவலர் திடீரென துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களைச் சுட்டதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு பிரான்ஸ் நாட்டவர் கொல்லப்பட்டார். அரசு பாதுகாப்பு படையினர் உடனே துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்தனர். அல்காய்தாவுக்கும் எமன் அரசு படையினருக்குமிடையே தொடர்ந்து சண்டைகள் நடந்து கொண்டிருந்தாலும் அல் காய்தா பெரும்பாலும் எமனில் உள்ள மேற்கத்திய நாட்டினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்

கடந்த ஏப்ரலில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் இங்கிலாந்து தூதரைக் குறி வைத்து நடத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்தனர். இங்கிலாந்து தூதர் அரேபியா தீபகற்பத்தில் முஸ்லிம்களுக்கெதிரான போரை நடத்துவதில் முன் நிற்பதால் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக அல் காய்தா அப்போது தெரிவித்திருந்தது. 2008 ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்