தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.11.10

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

இந்து மத வலதுசாரி பயங்கரவாதிகள் மூவர் நேற்று தீபாவளி தினத்தன்று  இரவு புனித நூல்களான குர்ஆன், பைபிள் ஆகியவற்றை பகிரங்கமாக எரித்து சாம்பலாக்க திட்டமிட்டு அறிவித்திருந்தனர். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

புனித நூல்களை எரிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இம்மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தினர்.

இம்மூவரில் பிரதானக் குற்றவாளியான  நாற்பத்திரண்டு வயதான டேட்டுஸ் பனகல் லியோ  என்பவர்  இனங் காணப்பட்டுள்ளார்.இவர்   கடந்த எட்டு வருடங்களாக சுவிட்ச்சர்லாந்தில் வசித்து வருகின்றார். நீதி மன்றத்தில் இவர் வாதிடுகையில்  குர்ஆன், பைபிள் இரண்டும் தீய சக்தியான சாத்தானின்  இரு கண்கள் மாதிரி, இந்நூல்களை குழந்தைகள் படிப்பதை தாம் விரும்பவில்லை  என்று கூறி இருக்கின்றார்.

மத மோதல்களுக்கு இடங் கொடாத சுவிஸ்சில் இவர்கள் குற்றவாளி என்று அறியப்பட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மரபுகளை உடைத்து ஒபாமாவை விமான நிலையத்தில் வரவேற்ற மன்மோகன்

டெல்லி: இரண்டு நாள் மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று பிற்பகலில் டெல்லி வந்தார்.

மரபுகளை எல்லாம் உடைந்தெறிந்துவிட்டு அவரை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி பாலம் விமான நிலையத்தில் நேரில் வந்து வரவேற்றார்.

நேற்று முன் தினம் மும்பை வந்த ஒபாமா அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, இன்று தனது மனைவி மிஷேல் மற்றும் குழந்தைகளுடன் டெல்லி வந்தார்.

அவரை பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவி குருசரன் சி்ங்குயுடன் வந்து விமான நிலையத்தில் வரவேற்றார். வழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்களை விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பது இல்லை.

ஆனால், ஒபாமாவுக்காக அந்த மரபை உடைத்துவிட்டு வந்தார் பிரதமர்.

இன்றிரவு தனது இல்லத்தி்ல ஒபாமா குடும்பத்தினருக்கு விருந்தளிக்கிறார் மன்மோகன் சிங்

இஸ்லாத்தின் கோட்பாடுகளை விட்டு விலகிச் சென்றுவிட்ட தீவிரவாதிகள்-ஒபாமா

மும்பை: ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

மும்பையில் புனித சேவியர் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இன்று ஒபாமா உரையாற்றினார். பின்னர் மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இந்தியா வளர்ந்து வரும் தேசம் என்கிறார்கள். இதை நான் மறுக்கிறேன். இந்தியா ஒரு வளர்ந்து விட்ட தேசம் தான். உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளை அதிசயிக்க வைத்துள்ளது. வறுமையையும் தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் தகுதியும் பலமும் இந்தியாவிடம் உள்ளது.

இந்திய-அமெரிக்க உறவு என்பது இந்த நேரத்தில் மிக மிக அவசியமானது. உலகின் பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒத்த கருத்து நிலவுகிறது என்றார்.

பின்னர் ஜிகாத் குறித்து ஒரு மாணவர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்பதே உண்மை. அவர்களை ஒடுக்குவது நம் முன் உள்ள பெரிய சவால்.

அனைவருமே உலகின் எல்லா மதங்களையும் மதித்து நடக்க வேண்டும். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அமைதியையும் நியாயத்தையும் நேர்மையையும் விரும்புபவர்கள். அவர்கள் அதீத சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தான் என்றார்.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு குறித்து நேற்று எந்தக் கருத்தையும் தெரிவிக்காத ஒபாமாவிடம், ஒரு மாணவி கேள்வி எழுப்புகையில், தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டதை சுட்டிக் காட்டினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஒபாமா,

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் எவ்வளவு வேகம் காட்ட வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அந்த வேகம் பாகிஸ்தானிடம் இல்லை. தீவிரவத்தை பாகிஸ்தான் இன்னும் வேகம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து இரு நாடுகளும் அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்க்க வேண்டும். இரு நாடுகளுமே இணைந்து வளர்ச்சி பெற முடியும். இதில் அமெரிக்காவுக்கும் உதவ முடியும். ஆனால், எங்களது கருத்தை எந்த நாடு மீதும் திணிக்க மாட்டோம்.

ஆப்கானி்ஸ்தானிலும் அமைதியைத் திரும்பச் செய்து அந்த தேசத்தை ஸ்திரமுள்ளதாக்குவதும் சாத்தியம் தான் என்றார்.

முன்னதாக மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஒபாமா தயாரானபோது மைக்கைப் பிடித்த அவரது மனைவி மிஷேல், குழந்தைகளே, ஒபாமாவிடம் மிகக் கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என்றார்

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமா

மும்பை: தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

மும்பை வந்துள்ள பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷேலும் தாஜ் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த மும்பை தாக்குதல் நினைவு புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலு்த்தும் நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, நான் மும்பைக்கு வந்ததற்கும், தாஜ் ஹோட்டலில் தங்குவதற்கும் காரணம் இருக்கிறது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஹோட்டலும் ஒன்று. அந்தத் தாக்குதலை நாம் என்றும் மறக்க முடியாது.

ஆனால், அந்தத் தாக்குதலை இந்திய மக்கள் மிகுந்த மன பலத்துடன் எதிர்கொண்டனர். அந்தக் கொலையாளிகளிடம் மக்கள் பணிந்துவிடவில்லை.

அந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளிலேயே மும்பை நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தாக்குதலால் முடங்கிவிடாமல் ஸ்கூட்டர்களிலும் ரயில்களிலும் பணிக்குச் செல்வோர் தங்கள் பணிகளை உடனே தொடங்கினர். தாஜ் ஹோட்டலும் அடுத்த ஒரே மாதத்தில் மீண்டும் விருந்தினர்களை அனுமதிக்க ஆரம்பித்தது.

ஹோட்டல் முடங்கிவிடாமல் மீண்டும் எழுச்சி கொண்டு நின்றது. அதே போல மும்பையும் இந்த மாபெரும் தேசமும் தனது இயல்பு வாழ்க்கைக்கு உடனே திரும்பின. அது இந்திய மக்களின் பலத்தை வெளிக்காட்டியது.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். மும்பை போன்ற மற்‌‌றொரு தாக்குதல் நடந்துவிடாமல் தடுக்க இரு நாடுகளும் தேவையான உளவு ரகசியங்களை பகிர்ந்து வருகிறோம் என்றார்.

மகா. முதல்வரிடம் வருத்தம் தெரிவித்த யுஎஸ் தூதரகம்:

ஒபாமாவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் மிக அதிகமாக உள்ளன.

ஒபாமாவை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மகாராஷ்ட்டிர முதல்வர் அசோக் சவாணுக்கும் துணை முதல்வர் சகன் புஜ்பால், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோருக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அவர்களுக்கு பாஸ் வழங்க, அவர்களது அட்ரஸ் புரூப், அடையாள அட்டை நகல், போட்டோ, பேன்கார்டு எண், பாஸ்போர்ட் எண் எல்லாம் கோரப்பட்டது. மேலும் இவர்களுக்கு முறைப்படியான அழைப்பும் நேற்று மாலை வரை வரவில்லை.

இதையடுத்து ஒபாமா பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து நேற்றிரவு அமெரிக்கத் தூதரம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் நேற்றிரவில் அமெரிக்கத் தூதரகம் அழைப்பிதழ்களையும் தந்தது.

இதைத் தொடர்ந்து இன்று ஒபாமாவை, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் மகாராஷ்டிராவின் வரலாறு, பண்பாடு அடங்கிய புததகத்தை நினைவுப் பரிசாக வழங்கி வரவேற்றார். ஆனால் உள்துறை அமைச்சர் பாட்டில் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டார்.

ஒபாமா முதல் முறையாக இந்தியா வருகை:

டெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக இன்று மும்பை வந்தார்.

முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு, மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் அருகே உள்ள கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு, வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் தனது மனைவி மிஷெல், இரு மகள்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் இந்தியா புறப்பட்டார் ஒபாமா.

வழியில் ஜெர்மனியில் அவரது விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

இன்று பகல் 1 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஒபாமாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொலபா கடற்படைத் தளத்துக்குச் சென்ற ஒபாமா அங்கிருந்து காரில் தாஜ் ஹோட்டல் சென்றார்.

அவரது வருகையையொட்டி மும்பையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் இரண்டு நாட்கள் ஒபாமா தங்கியிருப்பதால் சத்ரபதி சிவாஜி மார்க், ஆதம் தெரு, பூஷன் மார்க், ராம்சந்தானி மார்க், நவரோஜி பர்துன்ஜி ரோடு, பெஸ்ட் மார்க் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதலில் காயமடைந்தோருடன் சந்திப்பு:

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது தாஜ் ஹோட்டலில் காயமடைந்தவர்களை ஒபாமா சந்தித்தார்.

காஷ்மீரிலும் பலத்த பாதுகாப்பு:

அமெரிக்க அதிபரின் வருகையி்ன்போது காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் அதிகரிக்கலாம் என்பதால் அங்கும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவால் அமெரிக்காவில் 60,000 புதிய வேலைகள்:

இந்தப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையிலும், அணு சக்தி்த் துறையிலும் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது.

மேலும் அந் நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவுள்ளன.

இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் அவுட்சோர்சிங் விவகாரத்தில் இந்தியாவுக்கு பணிகளை ஏற்றுமதி செய்வதை ஒபாமா கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சனையை ஒபாமாவிடம் கிளப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்துக்கு இந்தப் பயணத்தின்போது தீர்வு ஏதும் கிடைப்பது சந்தேகமே.
  Read:  In English 
அமெரிக்காவில் செனட் சபைக்கு நடந்த இடைத் தேர்தலில் ஒபாமாவுக்கு பலத்த அடி விழுந்து, எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரத் தேக்கமும் வேலைவாய்ப்பின்மையுமே முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் அவுட்சோர்சிங் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒபாமா சலுகை ஏதும் காட்ட வாய்ப்பில்லை.

ஒபாமாவுடன் உயர்மட்ட பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பேர் பல விமானங்களில் வந்துள்ளனர்.