தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.10.10

சன்னி வக்ஃபோர்டு தலைவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் சந்திப்பு

அப்பீல் அளிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகின்றன

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை திரும்ப அளிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து வருவதாக உ.பி மாநில சன்னி வக்ஃபோர்டு தலைவர் சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் ஆகிய தலைவர்களுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்தார் அவர்.

வழக்கில் வாதாடுவதற்கு பிரபலமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து சமரசத்திற்கு தயாராகவேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. நம்பிக்கையை மட்டும் ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த தீர்ப்பில் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் தராது. இவ்வழக்கில் மாயாவதி தலைமையிலான உ.பி அரசு வக்ஃபோர்டிற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளது. வழக்கை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார ரீதியான குறைபாடுகள் உண்டு என சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பார்கள் இதற்கு பதிலளித்த தலைவர்கள் கூறுகையில்,பாப்ரி மஸ்ஜித் வழக்கு என்பது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாகும். வழக்கை நடத்துவதில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பர் என உறுதி வழங்கினர்.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு தேவையான விபரங்களை ஒரு வழக்கறிஞர் குழு தயாராக்கி வருவதாக வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார் மேலும் உச்சநீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வழக்கை நடத்துவதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படும். என்றும் தெரிவித்தார்.


சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன்- அன்சாரி

முஸ்லிம்கள் தரப்பில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் துவக்கம் கால மனுதாரரான ஹாஷிம் அன்சாரியையும் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI, இமாம் கவுன்சில் தலைவர்கள் சந்தித்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை உலக முஸ்லிம்களின் பிரச்சனை என அன்ஸாரி சந்திப்பின்போது குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது: பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சன்னி வக்ஃப் போர்டுடன் நிற்பேன். சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன். அயோத்தியில் சில ஹிந்து சன்னியாசிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடலை ஊடகங்கள் தவறாக பரப்புரைச் செய்தன என்றும் அன்சாரி குறிப்பிட்டார்.

செய்தி:தேஜஸ்

முஸ்லிம்கள் பாபர் மசூதி இடத்தை விட்டுத் தரவேண்டும்: கட்டியார்

அயோத்தியில் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதி அமைந்திருந்த பிரச்சனைக்குரிய இடத்தை முஸ்லிம்கள் விட்டுத் தரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சித் தலைவர் வினய் கட்டியார் கேட்டுக் கொண்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழியேற்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் பிரச்சனைக்குரிய அந்த இடத்தை விட்டுத் தருவதன் மூலம் தேச நலன் காக்கப்படும். இந்தியர்களின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதாகவும் இது அமையும் என்று வினய் கட்டியார் அயோத்தியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

முஸ்லிம்கள் இவ்வாறு செய்ய முன்வராவிட்டால், நாடு முழுவதும் நில உரிமைகள் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

வினய் கட்டியாரை பாரதீய ஜனதா கட்சியிலிருந்து நீக்காவிட்டால் சாதுக்கள் பாஜகவை விட்டு விலகுவார்கள் என்று அகாரா பரிஷத்தின் தலைவர் கியான்தாஸ் கூறியிருப்பது தொடர்பாகக் கேட்கப்பட்டதற்கு, அவரது வார்த்தைகள் தனக்கு ஆசிர்வதம் அளிப்பது போலாகும் என்று கூறினார்.

இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது : அஹ்மது நிஜாத் ஆவேசம்

லெபனான் : இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்றும் இஸ்ரேலியர்கள் தாங்கள் பூர்விக நாட்டிற்கே திரும்ப போகும் நேரம் வந்து விட்டது என்றும் இஸ்ரேலிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள பின்ட் ஜிபில் எனுமிடத்தில் நடைபெற்ற ஹிஸ்புல்லாவின் பேரணியில் இஸ்ரேலின் கடும் எதிரியான ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறினார்.

2006-ல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நடைபெற்ற போரில் இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஏராளமான மக்கள் பின்ட் ஜிபிலில் கொல்லப்பட்டார்கள். அவர்களின் மறைவை நினைவு கூறும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அஹ்மது நிஜாத் மக்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே "பின்ட் ஜிபில் உயிரோடு உள்ளது. மலை போன்ற உறுதியுள்ள உங்களின் வீரத்தை பாராட்டுகிறேன். என்றும் உங்களுக்கு ஈரான் துணை நிற்கும்" என்று கூறினார்.

இஸ்ரேலுக்கு மிக அருகில் நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் அஹ்மது நிஜாத் கலந்து கொண்டது இஸ்ரேலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. அஹ்மது நிஜாத்தின் அதிகாரபூர்வ லெபனான் வருகையை அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் கண்டித்ததுடன் இப்பயணத்தின் மூலம் லெபனானும் தீமைகளின் அச்சு நாடுகளில் இணைந்து விட்டதாக கூறினர்.

பின்னர் லெபனான் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அஹ்மது நிஜாத் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஆதரித்து பேசினார். மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வித அறிவியல் வளர்ச்சியும் பெற்று விட கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பதாக கூறிய அவர் தாம் விஞ்ஞானத்தை பரப்ப நினைப்பதாகவும் அமெரிக்காவோ அதை தடுத்து இருட்டில் ஆழ்த்த நினைப்பதாகவும் கூறினார்

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு-தமுமுக தலைவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேர்காணல்


அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இரண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பிரித்தளித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையின் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.



சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து லக்னோவில் கூடி விவாதித்த முஸ்லீம் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு ஓர் சொத்துரிமை வழக்காகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர மத மற்றும் இதர நம்பிக்கைகள் அடிப்படையில் அதை அணுகி தீர்ப்பளிப்பது பாரதூர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ள பிரபல வழக்கறிஞர்களை வைத்து முக்கிய நகரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் மனுதாரரான உத்தரப் பிரதேச வக்ப் வாரியம் மேல் முறையீடு செய்யும் போது, இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

இஸ்ரேலிய கெடுபிடியைமீறி ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸாவில்...

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் பல நாட்களாக உட்பிரவேச அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஸ்டப் கடந்த வியாழக்கிழமை (14.10.2010) இஸ்ரேலியக் கெடுபிடிகளை மீறி காஸா சென்றடைந்துள்ளார்.

அமைச்சர் ஸ்டப் பெய்ட் ஹனூன் கடவை வழியாக காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அங்கே அவர் பல்வேறு அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரினால் கடும் சேதமடைந்துள்ள பகுதிகளையும் அமைச்சர் பார்வையிடவுள்ளார். காஸா மீதான இஸ்ரேலிய அத்துமீறல் யுத்தத்தின் விளைவாக காஸாவின் வடக்குப் பிராந்தியத்தில் சுமார் 20 000 வீடுகள் சிதிலமடைந்துள்ளதோடு, அப்பிரதேசத்தின் கீழ்க்கட்டமைப்பு வசதிகள் முற்றாகச் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பிரமுகர்களின் தொடர் காஸா வருகை "ஹமாஸ் இயக்கமே பலஸ்தீன் மக்களின் பிரதிநிதி" என்ற அங்கீகாரத்தை சர்வதேச அளவில் பெற்றுத்தர வழிவகுத்து விடும் என்று காரணங்காட்டி ஃபின்லாந்தின் வெளியுறவு அமைச்சருக்கு காஸாவுக்குள் பிரவேசிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை பல நாட்களாகத் தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தது.

இதேவேளை, ஜோர்தானைச் சேர்ந்த கால்பந்தாட்டக் குழுவினரை காஸாவுக்குள் செல்லவிடாமல் எகிப்து அதிகாரத் தரப்பு அனுமதி மறுத்துள்ளது. 'விஹ்தாத்' எனும் ஜோர்தானிய விளையாட்டுக் கழகத் தலைவர் தாரிக் கோரி இதுபற்றிக் குறிப்பிடுகையில், அம்மானில் உள்ள எகிப்தியத் தூதுவராலயத்தில் மேற்படி விளையாட்டுக் குழுவினருக்கு ரபாஹ் கடவையினூடே காஸா செல்வதற்குக் கடவுச் சீட்டுக்கள் வழங்குமாறு சுமார் 50 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பித்தும் எகிப்திய அதிகாரத்தரப்பு அதற்கு எத்தகைய மறுமொழியும் அளிக்கவில்லை என்று விசனம் தெரிவித்துத்துள்ளார்.

கடந்த நான்கு வருட காலமாக காஸா மீது நியாயமற்றுத் தொடரும் முற்றுகையை முறியடிக்கும் நோக்கிலும், காஸா விளையாட்டுக் கழகம் மற்றும் உள்ளூர் விளையாட்டுக் குழுக்களுடனான கால்பந்தாட்டப் போட்டிகளை ஏற்பாடு செய்யுமுகமாகவுமே தமது குழு காஸா பயணத்துக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது என கோரி கருத்துத் தெரிவித்துள்ளார்

பாலஸ்தீன் : சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் கைது

ஆக்கிரமிப்பு ஜெருசலம்: யூதரால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட கார் விபத்தில் கடும் காயமடைந்த பாலஸ்தீன் சிறுவர்களில் ஒருவர் இஸ்ரேலிய போலிசாரால் கைதுசெயப்பட்டுள்ளான். முஹம்மத் சராப் என்ற பாலஸ்தீனிய சிறுவன் விபத்தில் ஏற்பட்ட கடும் காயங்களுக்கான சிகிச்சை முடிவதற்கு முன்னரே கைதுசெயப்பட்டுள்ளான்.
பாலஸ்தீன் சில்வண் மாவட்டத்தில் யூத குடியேற்றங்களுக்கான தலைவர் டேவிட் பீறி தனது காரில் வந்துகொண்டிருக்கும் போது முஹம்மத் சராப் உட்பட பல பாலஸ்தீனிய சிறுவர்கள் மீது வேண்டுமென்றே தனது கரை ஏற்றினார். அவர்கள் அனைவரும் தனது காரின் மீது கல்லெறிந்ததாகவும் அதற்காகவே தான் தனது காரை அவர்களின் மீது இடிக்க நேர்ந்தது என்று பின்னர் அவர் கூறியிருந்தார்

ஆனால் அடிபட்ட சிறுவன் முதல் அடியிலே தூக்கி வீசப்பட்டு பின் மீதும் அதே காரில் மீண்டும் அடிபட்டது அப்படியே புகைப்படமாக தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது, பாலஸ்தீனியர்களின் மீது இஸ்ரேலிய அத்துமீறிய செயல்கள் இந்த புகைப்படம் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளது

பாலஸ்தீனிய கைதிகளுக்கான அமைப்பு ஒன்று சிறுவன் முஹம்மத் சராபை விடுதலை செய்ய முயற்சி செய்யுமாறு அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது, மேலும் இஸ்ரேல் தனது கடும் குற்றங்களை மறைக்க சிறுவர்களின் மீதான தனது தீவிர வாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றது என்றும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது

செவிட்டு ஊமை அரசாங்கம் - ஜீலானி கடும் தாக்கு

அரசு அமைத்துள்ள 3 நபர் குழுவினால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என ஹூரியத் மாநாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் செவிடாகவும் ஊமையாகவும் செயல்படுவதாக இந்த அமைப்பின் தலைவர் சையத் அலிஷா ஜீலானி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அரசு காஷ்மீரில் சமாதானத்தை ஏற்படுத்த பத்திரிகையாளர் திலிப் பட்கான்கர், பேராசிரியர் ராதா குமார் மற்றும் தகவல் ஆணையர் அன்ஸாரி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு காஷ்மீரிகள் பிரிவினைவாதிகள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் அவர்களது கருத்துக்களை கேட்கும் என அரசு தெரிவித்திருந்தது. இந்தக் குழு சம்பந்தமாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இது சம்பந்தமாக ஜீலானி மேலும் கருத்துக் கூறுகையில் தாங்கள் அளித்துள்ள 5 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் அரசு செயல்படாதவரை காஷ்மீர் பிரச்னையில் எந்த மாற்றமும் ஏற்படாது என தெரிவித்தார்.

காஷ்மீரை ஒரு சர்ச்சைக்குள்ளான பகுதி என அரசு அறிவிக்க வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும், ஆயுதம் தாங்கிய படைகள் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும், மனித உரிமைகள் மீறப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மற்றும் பொதுமக்களின் படுகொலைகளுக்கு காரணமான பாதுகாப்பு படையினர் கைது செய்யப்படவேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை ஹூரியத் அமைப்பு முன்வைத்துள்ளது.


ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாஸின் மாலிக் இந்தக் குழு அமைத்தது சம்பந்தமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.