தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.10.10

பாபரி மஸ்ஜித் தொடர்பாக வழக்கு தொடுத்தவர் அதிர்ச்சியில் மரணம்


அஸ்லம் புரே தனது வழக்குறைஞர் ஒ.பி. சர்மாவுடன்



பாபரி மஸ்ஜித் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அஸ்லம் புரே அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேட்டு அதிர்ச்சி அடைந்து அக்டோபர் 2 அன்று காலை மரணமடைந்தார்.
டெல்லியைச் சேர்ந்த சைக்கிள் ரிக்ஷா விற்பனையாளர் அஸ்லம் புரே. 1991ல் உ.பி. மாநில முதல்வராக இருந்த கல்யாண் சிங் பாபரி மஸ்ஜிதை சுற்றி 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். இந்த நிலப்பகுதியில் எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட மனுவை அது நவம்பர் 1991ல் ஏற்றுக் கொண்டு உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதே போல் மத்திய அரசு கையகப்படுத்திய நிலப் பகுதியில் மீண்டும் கரசேவை செய்ய வி.ஹெச்.பி. 2002ல் முயற்சித்தப் போது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரித்த நீதிபதி லிபரான் விசாரணை ஆணையத்தின் முன்பும் இவர் பிரமாண வாக்குமூலம் சமர்பித்துள்ளார். அடல்பிகாரி வாஜ்பேயியை லிபரான் ஆணையம் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் இவர் மனு செய்திருந்தார்.


பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேட்டவுடன் அஸ்லம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானர். இவர் அது குறித்து யாரிடமும் பேசாமல் தனது அறையை விட்டு வெளியே வராமல் முடங்கிப் போனார். இவரது மகன் இம்ரான் செய்தியாளர்களிடம் பேசுகையில் அயோத்தி தீர்ப்பு எனது தந்தைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நான் எப்படி இனி முஸ்லிம் சமூகத்தை சந்திப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்நதார். இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தாரியாகஞ்சில் உள்ள அவரது வீட்டிலேயே மரணம் அடைந்தார். டெல்லி கேட் அருகே உள்ள அடக்கவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

அபத்தங்கள் நிறைந்த அகழ்வாராய்ச்சித் துறையின் அறிக்கை: பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப்

புதுடெல்லி,அக்.4:ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதற்கு ஆதாரமாக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் கூறிய ஆர்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா என்ற இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் அறிக்கை அபத்தங்கள் நிறைந்தது என பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப் கூறியுள்ளார்.

மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சிதிலங்களின் கற்களில் விஸ்வஹிந்து பரிசத்தால் கண்டெடுக்கப்பட்டது எனக்கூறப்படும் பழங்கால கல்வெட்டுகள் திட்டமிட்டே இட்டுக்கட்டப்பட்ட செய்தி என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் சமர்ப்பித்தது.

ராம்சாபுத்ரா எனக்கூறப்படும் இடத்திற்கு கீழ் செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் பாபரால் தகர்க்கப்பட்ட ராமர்கோயில் என்ற கண்ணை மூடிக்கொண்ட முடிவுக்கு வந்துள்ளது நீதிமன்றம்.

ஆனால், செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்த கட்டிடக்கலை மொகாலாயர்களின் வருகையின் மூலமே இந்தியாவிற்கு வந்தது என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

பழங்கால ஹிந்துக் கோயில்கள் இம்மாதிரியான கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்படவில்லை. ஏறத்தாழ சம அளவிலான கட்டிகளை பயன்படுத்தி இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது என அவ்வறிக்கையில் கூறப்பட்டாலும், அதன் சுவர்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுக் குறித்து அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் விவரிக்கப்படவில்லை. ஆனாலும், அது ஒரு முக்கிய கட்டிடம் என அகழ்வாராய்ச்சித்துறை அறிக்கையில் கூறப்படுகிறது.

கட்டிடத்திற்கு கலைநயம் மிகுந்ததாக அஸ்திவாரம் இருந்ததாக கூறும் அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் அந்த கலை நயம் எத்தகையது என்பதுக் குறித்து கூறவில்லை. இவ்வாறு இர்ஃபான் ஹபீப் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

அயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் ?

புது தில்லி : அயோத்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நேற்று நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லீம்களுக்கும் இரண்டு பங்கை ஹிந்துக்களுக்கும் கொடுக்குமாறு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மையில் இந்தியாவின் மதசார்பின்மைக்கு வைக்கப்பட்ட இத்தேர்வில் இந்தியா வெற்றியடைந்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று சிறுபான்மை சமூகத்தினர் கருதுவதாக கருதுகிறது.

புகழ் பெற்ற வரலாற்றாசியர் இர்பான் ஹபீப் தீர்ப்பு குறித்து கூறும் போது “ வரலாறு மற்றும் உண்மைகளை குழி தோண்டி புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வரலாற்று தகவல்களை கையாளும் போது கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேனல்களில் விவாதம் நடத்தும் முஸ்லீம் அறிவு ஜீவிகள் தங்கள் சோகத்தை காட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இது சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த அநீதி என்றே கருதுகின்றனர். மத்திய பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் “ பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே முஸ்லீம்கள் வாழ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இத்தீர்ப்பு வழிகோலியிருப்பதாக கூறினார்.

சமூக சேவகியும் சஹ்மதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மியோ இத்தீர்ப்பு தன்னை இந்தியாவின் இரண்டாம் தர குடிமகனாக உணர வைத்துள்ளதாக கூறினார். திட்ட குழுவின் உறுப்பினரான சையதா ஹமீதோ இத்தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

மேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது. மேலும் அம்முன்னாள் துணைவேந்தர் கூறும் போது பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டனர் - முலாயம் சிங்

லக்னோ,அக்.2:பாப்ரி மஸ்ஜிதின் உரிமைத் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கருதுவதாக சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரும், உ.பி.மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்புக் கூறாமல், நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதில் நான் அவநம்பிக்கைக் கொள்கிறேன். தேசம் மற்றும் நீதித்துறையின் எதிர்காலத்திற்கு இது உகந்தது அல்ல." என முலாயம் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

"அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும். தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு நிராசையும், ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வும் மேலோங்கியுள்ளது.

முஸ்லிம்கள் தற்பொழுது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்கள். உச்சநீதிமன்றத்தில் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு கூறப்படும் என நான் எதிர்பார்க்கிறேன்.

1990 ஆம் ஆண்டில் அயோத்தியில் தாக்குதல் நடத்த முன்னேற்பாடுகள் நடக்கின்றன என நான் எச்சரித்திருந்தேன். சென்னையில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திலும் இதனைக் குறித்து தெரிவித்தேன்." இவ்வாறு முலாயாம் தெரிவித்தார்.

முலாயாம்சிங் யாதவின் அறிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், மாயாவதியும் களமிறங்கியுள்ளனர். மாநிலத்தின் அமைதி சூழலை தகர்ப்பவர்கள் யாராகயிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முலாயம் சிங்கின் பெயர் குறிப்பிடாமல் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு தனி மனிதர்களின் அறிக்கையின் மூலம் கொந்தளிப்பிற்கு உள்ளாகக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தியில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அறிக்கை வெளியிடவேண்டாம் என உ.பி காங்கிரஸ் கட்சி முலாயம் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீர்ப்பைக் குறித்து உச்சநீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டுமெனவும், தீர்ப்பில் பா.ஜ.கவிற்கும், முலயாம்சிங்கிற்கும் சாதகமான நிலையில்லாததால் இரு பிரிவினருக்கு இத்தீர்ப்பு நிராசையை ஏற்படுத்தியுள்ளதாக உ.பி. மாநில சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் ப்ரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன்

சென்னை: அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும்,
1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.

இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.

ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.