தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.8.11

60 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. உள்நாட்டுப் போர்: பசி,


கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சோமாலியா நாட்டில் பெரும் வறட்சி நிலவுகிறது. இதனால் சுமார் 1.2 கோடி மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக துருக்கியைச் சேர்ந்த ஒரு ஆய்வு மையம் கூறியுள்ளது.
சோமாலியாவில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால், அங்கும் உணவுப் பொருட்கள் வினியோகம் சீராக இல்லாததால் ஏராளமான
மக்கள் உணவின்றி வாடி வதங்கி வருகின்றனர். குறிப்பாக சுமார் 1 லட்சம் குழந்தைகள் உணவின்றி எலும்புக் கூடுகளாக நடமாடி வருகின்றனர். இதில் சுமார் 29,000 குழந்தைகள் பசியால் உயிரிழந்துள்ளனர்.
இந்த முகாம்களுக்கு ஐ.நா. மற்றும் உலக அளவிலான பல சேவை மையங்கள் அனுப்பும் உணவுப் பொருட்களை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள கும்பல்கள் கொள்ளையடித்து, மிக அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து அதை போருக்கு ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தி வருகின்றன.
இந் நிலையில் அந்தப் பகுதியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வறட்சியும் நிலவுவதால், அடுத்த 2 மாதங்களில் சுமார் 1.2 கோடி மக்கள், குறிப்பாக சோமாலியாவைச் சேர்ந்த 1 கோடி பேர் (இது அந்த நாட்டின் மக்கள் தொகையில் பாதியாகும்) பட்டினியால் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது என துருக்கி நாட்டின் மனிதநேய நிவாரண அறக்கட்டளை எச்சரித்துள்ளது.
சோமாலியா தவிர கென்யாவின் வடக்குப் பகுதிகள், எதியோபியாவின் கிழக்குப் பகுதிகளும் பட்டினியில் மூழ்க உள்ளதாகவும், இவர்களைக் காக்க ரூ. 7,500 கோடி நிதி தேவைப்படும் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது.
அனாடொலு பகுதியில் உருவாக்கப்பட்ட ததாப் அகதிகள் முகாம் 90,000 பேருக்கு மட்டுமே உணவும் தண்ணீரும் தரும் வசதி கொண்டதாகும். ஆனால், இங்கு 6 லட்சம் பேர் குவிந்துள்ளதால் யாருக்குமே குறைந்த அளவு உணவும், நீரும் கூட கிடைக்கவில்லை. மேலும் நாள்தோறும் சராசரியாக 1,600 பேர் இந்த முகாமுக்கு கூடுதலாக வந்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.
இதில் பெரும்பாலான குழந்தைகள் உடல் நிலை பட்டினியால படுமோசமான நிலையில் உள்ளதால் அவர்களைக் காக்க மருத்துவ உதவிகளும் தேவைப்படுகின்றன. உரிய சிகிச்சை கிடைக்காமல் இந்தப் பகுதியில் 6 குழந்தைகளில் 1 குழந்தை பலியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உரிய உணவும் தண்ணீரும் வந்து சேராததால் கடந்த சில மாதங்களில் மட்டும் 36,000 குழந்தைகள் இங்கு இறந்துள்ளன.
இந்தப் பகுதிக்கு துருக்கி பெருமளவில் உதவிகளை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: