ஜெட்டா : சவுதி அரேபியாவில் மத அமைப்பு பிறப்பித்த "பத்வா' உத்தரவை மீறி, அந்நாட்டு சூப்பர் மார்க்கெட்களில் பெண் "கேஷியர்கள்' பணியமர்த்தப்பட்டுள்ளனர். வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உண்டு. முஸ்லிம் பெண்கள், ஆண் பாதுகாவலரின் உதவியின்றி வெளியிடங்களுக்கு செல்லுவது மற்றும் இரு பாலினரும் ஒரே இடத்தில் பணியாற்றுவது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்வா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த உத்தரவுகளுக்கு ஏற்ற வகையில், பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், சவுதி அரேபிய அரசு சில சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபிய அரசின் உயரிய மத அமைப்பு கடந்த ஞாயிறன்று "பத்வா' ஒன்றை பிறப்பித்தது. அதில், "கேஷியர் பணி, சம்பந்தம் இல்லாத ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யும் பணி என்பதால், அந்தப் பணிக்கு பெண்களை நியமிக்கக் கூடாது' என, தெரிவித்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி ஜெட்டா நகரில் உள்ள,"மர்ஹபா ' குரூப் சூப்பர் மார்க்கெட்களில், பெண் "கேஷியர்'கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதே போல, சில ஜவுளிக் கடைகளிலும் பெண் "கேஷியர்'கள் பணிபுரிகின்றனர்.
இதுகுறித்து, மர்ஹபா நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு, மூன்று மாதங்களுக்கு முன் தொழிலாளர் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. உத்தரவு வரும் வரை, தொடர்ந்து பெண்கள் பணிபுரிவர். எங்கள் அனைத்து கிளைகளிலும் 25க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கின்றனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். ஆனால், பத்வா உத்தரவு மீறப்படுவதற்கு, சில மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக