இக் கட்டுரையின் பகுதி 3ல் தென்மாவட்டங்களில் நடந்த சில கலவரங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இங்கு இன்னும் சிலவற்றை காண்போம்.
23.4.1997 கண்டமனூரில் அமைக்கப்பட்டிருந்த தேவர் சிலை சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கலவரம் பற்றிக் கொண்டது. அந்த ஊரிலும், அருகில் இருந்த ஊரிலும் இருந்த தேவேந்திரகுல வேளாளர்களின் கொடிக்கம்பங்கள் வெட்டப்பட்டன. ஆங்காங்கே சாலை மறியல் நடைபெற்றது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட
மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு போலீஸ் தடைவிதித்தது. ஆனால் தடையை மீறிச்சென்ற டாக்டர்.கிருஷணசாமி 2.5.97 அன்று கைது செய்யப்பட்டார். இந்த கலவரத்திற்கிடையில், 1.5.97 அன்று வீரன்சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகப் பேருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு இயக்கப்பட்டது. இந்த பெயரிலான போக்குவரத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து மேலும் கலவரங்கள் தொடர்ந்தன.அப்போது சிறையில் இருந்த கிருஷ்ணசாமியை விடுவிக்க கோரி மே.3,4,5 திகதிகளில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் சாலை மறியலும், ரயில் மறியலும் நடந்தன. சில பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. துறையூரில் மறியலில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் தேவேந்திரகுல வேளாளர் இனத்தை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.
வீரன் சுந்தரலிங்கம் பெயரை அழிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி காவல்துறையிடம் மனு கொடுக்க சென்ற தேவர் இனத்தவர்கள் தீடீர் கலவரத்தில் ஈடுபட அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். திருவில்லிபுத்தூர், மம்சாபுரம், இடையன்குளம், அம்மச்சியார்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்த தோப்புகளுக்கு தீ வைக்கப்பட்டன. காமாராஜர் மற்றும் ஆதித்தனார் பெயர்களிலும் போக்குவரத்துக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று புதிய கோரிக்கைகளும் போராட்டங்களும் தொடங்கின.
தென்மாவட்டங்களில் மேலும் சாதிக்கலவரம் பரவாமல் தடுக்க 14.5.1997 அன்று அனைத்து அரசியல்கட்சிகளையும், சாதிக்கட்சி தலைவர்களையும் அரசு தரப்பில் பேசுவதற்காக அழைப்புவிடுக்கப்பட்டது. 15.5.97 அன்று தேவர் சாதியில் 15 பிரிவுகளாக இருந்த அமைப்புகளின் தலைவர்களையும், டாக்டர்.கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகிய மூன்று தேவேந்திர குலவேளாளர் சமூக தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடந்தது. இந்தகட்டத்திலும் இந்த சாதி தலைவர்கள், பிரச்சினையை தீர்க்க வழிகாணாமல் புதிதாக பூலித்தேவன் பெயரில் போக்குவரத்து கழகம் தொடங்க வேண்டுமென்றும், தேவேந்திரகுல வேளாளர்கள் இமானுவேல் சேகரனார் பெயரில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர்.
இப்படி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில் அப்போதைய டி.பி.ஐ என்ற கட்சியான தற்போதைய விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு அப்பாவி சிறுவர்களை பயன்படுத்தி மதுரையில் வன்முறையில் இறங்கியது. அதாவது, நெல்லை மாவட்டத்தின் தென்கோடியில் இருக்கும் வள்ளியூரில் அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டதாக கூறி மதுரை அவனியாபுரத்தில் இவர்கள் சாலை மறியலில் இறங்கினார்கள். மதுரையின் முக்கிய பகுதிகளான புதூர்,தல்லாகுளம் மற்றும் மாட்டுத்தாவணி உள்பட பல இடங்களில் கல்எறி சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 9 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. நாகமலைப்புதுக்கோட்டை, முடக்கத்தான் கிராமம் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளை எரிக்க ஒரு கும்பல் முயற்சித்தது. மதுரை அண்ணாநகரில் சில இடங்களில் கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர்.
இந்த கலவரங்களுக்கு பின்னணியில் ஒரு காரணமும் இருந்தது. சாதிய கலவரங்கள் குறித்து பேச, அப்போதிருந்த தி.மு.க அரசு டாக்டர்.கிருஷணசாமி, ஜான்பாண்டியம், பசுபதி பாண்டியன் உள்ளிட்டவர்களை அழைத்தது. ஆனால் இந்த கூட்டத்திற்கு திருமாவளவனுக்கு அழைப்பு இல்லை. தன்னை அரசு அவமதித்தாக திருமாவளவன் நினைத்து அதனால் ஏற்பட்ட கோபத்தை காட்டவே மதுரையில் இது போன்ற கலவரத்தை திருமாவளவன் தூண்டிவிட்டதாக அப்போது மக்களிடம் பரவலாக பேச்சு எழுந்தது.
மதுரையில் மேலே சொல்லப்பட்ட இடங்களில் நடைபெற்ற கலவரங்களுடன், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலும், மதுரை மேலவாசல் குடியிருப்பில் போலீசார் புகுந்து தாக்கியதில் பழனிக்குமார் என்ற தாழ்த்தப்பட்ட சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தும் போனான். இந்த கலவரத்தில் ஈடுபட்ட கும்பல் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக்கொண்ட சில தேவர் இனத்தவர்கள், மதுரை முல்லை நகர் பகுதியில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
20.5.1997 அன்று மதுரையில் பந்த் நடத்தப்போவதாக அறிவித்தார் திருமாவளவன். பின்னர் அதை என்ன காரணத்தாலே வாபஸ் பெற்றார். இந்த கலவரத்தில் ஈடுபட்ட கும்பலில் இருந்தவர்கள் அனைவரும் பெட்ரோல் குண்டுகளை தாராளமாக பயன்படுத்தியதை அனைவரும் பார்த்தனர். ஏராளமாக பெட்ரோல் குண்டுகளை காவல் துறையினரும் கைப்பற்றினர்.
மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்தை ரிசர்வ் தொகுதியாக அறிவித்தார் ஜெயலலிதா. அதாவது இந்த பஞ்சாயத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இதை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக அந்த பகுதியில் இருந்த பிரமலைக்கள்ளர் இனத்தவர்கள் கருதினர். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை எதிர்த்து போராடியும் வந்தனர். இந்த கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கடுத்து நிகழ்ந்தது தான் கொடூரம்.
தலைவராக தேர்வு செய்யப்பட்ட முருகேசன் உள்பட 6 பேரை 30.6.97 அன்று ஒரு கும்பல் ஓடும் பேருந்தில் கொடூரமாக வெட்டி கொன்றனர். இதன் எதிரொலியாக 14.7.97 அன்று பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த பழனி என்பவரை மதுரை சிட்டம்பட்டி அருகில் சிலநபர்கள் வெட்டிக் கொன்றனர். அதாவது, தாழ்த்தப்பட்டவர் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பிரமலைக்கள்ளர்களை விட்டுவிட்டு, பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த பழனி கொல்லப்பட்டது புதிராக இருந்தது.
நெல்லை மாவட்டம் தேவிப்பட்டிணத்தில் 15.7.97 ல் நாடார் சமூகத்தினருக்கும், தேவேந்திர குல வேளாளருக்கும் திடீர் பிரச்சினை மூண்டது. இதனையடுத்து இந்த இரு சமூகத்தினரும் கலவரத்தில் இறங்கினர். பல்வேறு நோக்கங்களை காட்டி இவர்கள் அரசிடம் இருந்த லைசென்ஸ் பெற்று வைத்திருந்த துப்பாக்கிகளை இந்த கலவரத்தில் பயன்படுத்தினர். இந்த கலவரத்தில் ஏதுமறியாத அப்பாவி நாடார்கள் 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அதாவது, நடக்கும் கலவரத்தை பற்றி அறியாமல் வெளியூருக்கு வேனில் பழங்களை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு வேனில் தூங்கிய நிலையில் வந்த 4 வியாபாரிகளையும் ஒரு கும்பல் தூங்கிய நிலையில் சுதாரிப்பதற்குள் வெட்டி கொன்றது.
அப்போது தினமணி நாளிதழ் வெளியிட்ட புள்ளிவிபரப்படி, 1997 முதல் ஏப்ரல் 16 முதல் ஜுலை முடிய நடைபெற்ற சாதிக்கலவரங்களில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 78. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 39 பேரும், நெல்லையில் 14 பேரும், மதுரையில் 13 பேரும், தூத்துக்குடியில் 8 பேரும், தேனியில் 2 பேரும், சிதம்பரத்தில் 2 பேரும் என்ற கணக்கில் எண்ணிக்கை இருந்தது. இந்த கலவரத்தில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கொலையானவர்களில் சாதிரீதியாக 39 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதில் தாழ்த்தப்பட்டோர் 18, தேவர் 9, நாடார் 1, கோனார் 1, பிள்ளை 1 என்ற கணக்கில் சாதி அளவில் எண்ணிக்கை காட்டப்பட்டது.
அதாவது, சாதிய தலைவர்களாக தங்களை காட்டிக் கொண்டவர்கள் அரசியல்ரீதியாக மக்களிடம் பிரச்சாரத்தை தொடங்கிய பிறகு தான் கலவரங்கள் மூள்வதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது தெரியவந்தது. அதாவது, தங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவர்களாக காட்டிக் கொள்ள முற்பட்ட இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான வாழ்வாதரத்தை அரசிடம் கேட்டு பெற முன்முயற்சி எடுத்ததை விட தங்கள் கவுரவத்தை நிலைநாட்டிக் கொள்ள எடுத்த முயற்சிகள் தான் அதிகம். மக்களை கொன்று குவித்து பொருளாதாரத்தை சீரழிக்கும் கலவரத்தை தடுக்க அரசு பேச்சுவார்த்தைக்கு முயன்ற போது கூட, இவர்கள் தங்கள் மூதாதையர்கள் பெயரில் போக்குவரத்து கழகம் தொடங்கவும், மாவட்டம் அமைக்கவுமே கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு அமைப்பு சாதிக்கலவரங்கள் குறித்த பின்னணியை ஆய்வு செய்தது. அப்போது, தேவேந்திர குலவேளாளர்கள் சமூகத்தினர் இருக்கும் பகுதியில் இருந்த சில மக்களிடம் பேசியபோது, வீரன்சுந்தரலிங்கம் பேருந்து கழகம் தொடங்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்ட போது தான் தங்களுக்கு சாதி பற்றிய விபரங்களை சாதிய தலைவர்கள் மூலம் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். முகவூர் முத்துச்சாமியாபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர்களும், நாடார்களும் இந்த போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்டு சாதிய பூசல்கள் தொடங்கிய பிறகு தான் சாதிய வேற்றுமை பெரிதானதாகவும், அதற்கு முன்பு நாடார்களும், தேவேந்திரகுல வேளாளர்களும் ஒருவர் சோற்றை மற்றவர் சாப்பிட்டதாகவும் குறிப்பிட்டார்கள்.
ஆக, உழைக்கும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான காரணங்களை தேடுவதை விட்டு விட்டு தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கி விடுகிறோம் என்ற பெயரில் மிகப்பெரிய தொடர் கலவரங்களுக்கு இந்த சமூக தலைவர்கள் வித்திட்டுள்ளது அப்பட்டமாக தெரியவந்தது. அதாவது, இன்றைக்கு நாடார்கள் என்ற சாதியில் உட்சாதியாக கருதப்படும் சாணார்களும் தாழ்த்தப்பட்ட இனமாக கடும் இன்னல்களை சந்தித்து தான் வந்துள்ளனர். மிகப்பெரிய பொருளாதார போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு தங்களை பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொண்ட பிறகு சமூகத்தில் மதிப்பை பெற்றனர். இதே ரீதியில் தங்கள் மக்களையும் பொருளாதார உயர்நிலைக்கு கொண்டு செல்ல இருந்த வழிமுறைகளை தாழ்த்தப்பட்ட மக்களின்தலைவர்கள் என்பவர்கள் மறைத்து அவர்களின் ஈகோவை நிலைநாட்ட கலவரங்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை.
டாக்டர்.கிருஷ்ணசாமி, திருமாவளவன் மற்றும் ஜான்பாண்டியன்....இவர்கள் தான் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கிய பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டுள்ளனர். இதில் டாக்டர்.கிருஷ்ணசாமியின் நிலையை பார்க்கலாம். அதாவது 1996 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சர்வதேச ஆயுத தரகரான சந்திராசாமியின் நெருங்கிய நண்பரும், ராசீவ்காந்தி கொலையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று இன்றும் தமிழ் அமைப்புகளால் கோரிக்கைக்கு உள்ளாக்கப்படுபவருமான சுப்பிரமணிய சாமியுடன் கூட்டு வைத்தார். அதாவது, உயர்குடி பார்ப்பனரும், சந்தேகத்திற்கு உரியவருமான சுப்பிரமணிய சாமியுடன் எதற்காக கூட்டு என்பதை டாக்டர்.கிருஷ்ணசாமி தனது மக்களுக்கு விளக்கவே இல்லை.
இதே போல், திருமாவளவன் தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இருந்த தலித் உணர்வுகளை காலப்போக்கில் மூட்டை கட்டி வைத்து விட்டார் என்றே சொல்லலாம். தலித் விடுதலை என்ற நோக்கில் எடுக்கப்பட வேண்டிய எத்தனையோ முயற்சிகளை விடுத்து தி.மு.கவிடமும், காங்கிரசிடமும் தன்னை தொலைத்துக் கொண்டு விட்டார் என்று சொல்லலாம் என்கிறார்கள். எதை நோக்கியது தங்கள் இலக்கு என்பதை கூட தனது இயக்கத்தில் இருக்கும் அடிமட்ட தொண்டனுக்கு அவர் போதித்தாரா என்றும் தெரியவில்லை. தி.மு.க மட்டுமே தங்களை சிறப்பாக ஆதரிக்கிறது என்ற ரீதியில் கடந்த 5 ஆண்டு காலமும் தி.மு.கவின் கூட்டணியில் சரணடைந்தார்.
தி.மு.க ஆட்சியில் தலித் அமைச்சரான தமிழரசி தான் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். ஆனால் தமிழகம் முழுக்க ஆதிதிராவிடர் விடுதிகள் நலிந்து பேய்பங்களாக்களை விட மோசமாக காட்சியளித்தன. ஆதிதிராவிடர் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, தி.மு.க ஆட்சியில் இலவச தொலைக்காட்சி வழங்க திருப்பி விடப்பட்டது. இதைப்பற்றியெல்லாம் திருமாவளவன் என்றைக்குமே கேட்டதும் இல்லை. இதைப்பற்றி ஊடகங்கள் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பிய போது, அப்படி எதும் தனக்கு தெரியவில்லை என்று பதில் சொன்னது தான் கேலிக்கூத்து.
கல்வி தான் ஒருவனை அறிவுரீதியாக உயர்த்திக் கொள்ளவும், பொருளாதார ரீதியாக மேம்படவும் ஒரு கருவியாக இருக்கிறது. ஆனால் ஆதிதிராவிடர் கல்வியை பற்றி இந்த தலைவர்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி. இது போல் சாதிய மோதல்களில் எழும் கேள்விகளையும், வேறு பல உண்மைகளையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்...
தொடர்வோம்... நன்றி ; ஆனந்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக