தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.10.11

புரூக்ளின் பாலத்தை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் : 700க்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் கைது


அமெரிக்காவின் நியூயோர்க், லோவர் மன்ஹட்டனில் அமைந்துள்ள புரூக்ளின் பெருந்தெருப்பாலத்தை வழிமறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

உலகின், மிக பெரிய பங்குச்சந்தை நிலையம் மற்றும் பெடரல் மையம் என்பன Wall Street இல் அமைந்துள்ளன. இதனால் அமெரிக்காவின்
வர்த்தக பிரதேசமாகவே Wall Street அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் 'மாற்றம் பெற்று வரும் அமெரிக்க நிதி முறைமையின் விளைவாக சமூக அவலங்களை சந்திக்க நேரிட்டுள்ளது என கோரி, பல நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள்' புரூக்லினிருந்து மான் ஹட்டன் செல்லும் வழிப்பாதையை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கு இது இடையூறு விளைவிப்பதாக கூறி காவற்துறையினர் பல தடவடை அவர்களிடம் எச்சரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்ட காரர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால், காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

'வோல் ஸ்ட்ரீட்டிற்கான ஆக்கிரமிப்பு'  எனும் இக்குழுவினர் கடந்த சில மாதங்களாகவே இப்பகுதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சியின்  பாணியில், சமூக வலைத்தளங்களின் உதவிடன் ஆரம்பித்த இவர்களது போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு பெருகியிருந்தது.

கடந்த இரு வாரங்களாக, அவர்கள் வேறு சில கண்டனங்களை முன்வைத்தும் போராட்டத்தை தொடர்கின்றனர். காவற்துறையின் அடாவடித்தனம், மற்றும் தொழிற்சங்க உடைப்பு என்பனவற்றிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி வந்தனர்.

கடந்த செப்.25ம் திகதி 80க்கு மேற்பட்டவர்கள், கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை, 2000ற்கு மேற்பட்டவர்கள், நியூயோர்க் தலைமையகங்களை நோக்கி கவனயீர்ப்பு பேரணி நடத்தினர்.

நாங்கள் அனார்சிஸ்ட்டுக்கள் இல்லை. நாங்கள் குண்டர்கள் இல்லை. மிதமிஞ்சிய அதிகாரமுடைய 1% வீதத்தினரால், மீதி 99% வீதத்தினரும் ஆளப்படுகின்றனர். இதை எதிர்த்தே எமது போராட்டம் தொடர்கிறது என்கிறார் ஆர்ப்பாட்ட காரர் ஒருவர்.

நாட்டு மக்களுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு பதில், நமது அரசு பெரிய நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது என மற்றொருவர் குற்றம் சாட்டினார்.

ஒரு நாள் இவ்வீதியில் செல்லும் போது ஆர்ப்பாட்டத்தை பற்றி கேள்வியுற்று பங்கெடுத்தேன். அன்று முதல் தினந்தோறும் இதில் பங்கெடுக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டேன் என்கிறார் இன்னுமொருவர்.

இன்று சுமார் 700 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அடுத்து, சர்வதேச ரீதியில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முக்கியத்துவம் பெற தொடங்கியுள்ளது. காவற்துரையினரின் இக்கைது நடவடிக்கையினால், புரூக்லின் பாலம் முற்றாக மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்: