தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.10.11

301 பயணிகளுடன் சென்னையிலிருந்து தாமதமாக துவங்கிய முதல் ஹஜ் பயணம்


ஹஜ் பயணத்திற்கு 301 பயணிகளுடன் முதல் விமானம் நேற்று முதல் நால் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.
முஸ்லிம்கள் 5 கடமைகளில் இறுதிக் கடமையான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு
புனித பயணம் செல்வார்கள்.
இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 3,900 பேரும். புதுச்சேரியில் 31 பேரும், அந்தமான்-நிக்கோபர் தீவில் இருந்து 30 பேரும் ஆக மொத்தம் 3,961 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் 165 ஆண்களும், 135 பெண்களும் ஒரு குழந்தையும் என 301 பேர் சென்றனர். ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான பிரசிடென்ட் அபூபக்கர், தமிழக அரசு செயலாளர் கோ.சந்தானம் ஆகியோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். புனித ஹஜ் பயணத்திற்கான சிறப்பு விமானம் நேற்று முதல் வருகிற 31-ந் தேதி வரை 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
பின்னர் இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புனித ஹஜ் பயணிகள் சிறப்புடன் சென்று வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனர். ஹஜ் பயணிகள் எந்த வித சிரமமின்றி புனித பயணத்தை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அவர்கள் சென்னையில் இருந்து ஜெட்டா நகருக்கு செல்லும். அங்கிருந்து மக்கா மாநகருக்கு வாகனங்களில் அழைத்து செல்லப்படுவார்கள். அதுபோல் தமிழக ஹாஜிகள் மதீனா நகரில் இருந்து ஜெட்டா வழியாக சென்னைக்கு வருவார்கள்.
இறுதி விமானம் வருகிற 1-ந் தேதி புறப்பட்டு செல்லும். இந்திய அரசுக்கு வழங்கப்படும் புனித யாத்திரை பயணத்தின் கோட்டாவை உயர்த்தி தரவேண்டும் என சவுதி அரசாங்கத்தை பிரதமர் மூலமாக வலியுறுத்தியுள்ளோம். கூடுதலாக 40 ஆயிரம் பேருக்கு விசா வழங்க வேண்டும். வருகிற 2012-ம் ஆண்டு முதல் இந்த கூடுதல் கோட்டா வரும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புனித ஹஜ் பயணத்திற்காக விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் முதல் விமானம் சவுதிக்கு பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெட்டாவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக மாலை 6.20 மணிக்கு வந்தது. இந்த விமானம் சுமார் 7 மணி நேரம் தாமதமாக இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

0 கருத்துகள்: