தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.10.11

10 பேர் கொலை வழக்கில், மந்திரவாதி சந்தோஷ் சவுகான் உள்பட 4 பேருக்கு மரண தண்டனை


கோடீசுவர கனவில் மிதந்த 10 பேரை கொலை செய்த வழக்கில் மந்திரவாதி உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை ஐகோர்ட்டு நேற்று உறுதி செய்தது.
மராட்டியத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சவுகான், மந்திரவாதி. இவர் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையில் 10 பேரை ஒரு கூட்டணி அமைத்து கொலை செய்துள்ளார். மராட்டியத்தை கதிகலங்க வைத்த இந்த சம்பவத்தின் பின்னணி வருமாறு:-

மந்திரவாதியான சந்தோஷ் சவுகான், கோடீசுவரர் ஆக விரும்புகிற அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தை காட்டுவார். ஆளுக்கு ஏற்ப ரூ.1 1/2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கொண்டு வந்து தந்தால் சிறப்பு பூஜை நடத்தப்படும் என்பார். அதன்படி அவர்கள் பணம் எடுத்து வருவார்கள். அவர்களை சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள நந்தோஸ் காட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு பூஜை செய்கிறபோது, அவர்கள் மீது ஒரு கோடிக்கும் அதிகமாக பண மழை கொட்டும் என கூறுவார்.
அப்பாவி மக்கள் அதை அப்படியே நம்பி, பூஜைக்காக அவர் கேட்ட பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள். அதன்பின்னர் அவர்களை நந்தோஸ் காட்டுக்கு அழைத்துச்செல்வார். அங்கு அவரை முழங்கால் போடச் சொல்வார். அவர்களும் அவர் சொல்வதை கேட்டு முழங்கால் போடுவார்கள். அதைத் தொடர்ந்து முழங்கால் போட்டவரை துப்பாக்கியால் சுட்டோ, கத்தியால் குத்தியோ படுகொலை செய்து விடுவார்கள். பின்னர் முகத்தை மட்டும் அடையாளம் தெரியாதபடிக்கு நசுக்கி, சாக்கில் போட்டு கட்டி, பள்ளத்தாக்கு ஒன்றில் வீசி விடுவார்கள். இப்படி மராட்டியத்தில் 10 பேரை சந்தோசும், அவரது கூட்டாளிகளும் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த படுகொலைகளில் சந்தோஷ் சவுகான், அவனது கூட்டாளிகள் அமித் ஷிண்டே, யோகேஷ் சவுகான், மகேஷ் ஷிண்டே, இரண்டு மைனர்கள், ஒரு பெண் என 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த செசன்சு நீதிமன்றம், சந்தோஷ் சவுகான், அவனது கூட்டாளிகள் அமித் ஷிண்டே, யோகேஷ் சவுகான், மகேஷ் ஷிண்டே ஆகிய 4 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. 2 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
செசன்சு கோர்ட்டு ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதிக்கிறபோது, அதை ஐகோர்ட்டு உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த வழக்கிலும் மரண தண்டனை உறுதி செய்யப்படுவதற்காக மும்பை ஐகோர்ட்டில் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு, ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் பி.எச்.மார்லபல்லே, ஏ.எம்.திப்சே ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பு அளித்தனர்.
தீர்ப்பில், "இந்த கொலைகளை சாட்சியங்கள் இல்லாத வகையில் சர்வ ஜாக்கிரதையாக திட்டமிட்டு செய்துள்ளனர். இது மிகவும் மோசமான குற்றச்சதி ஆகும். குற்றவாளிகள் திருந்துவதற்கோ, தங்களது குற்றத்துக்காக மனஸ்தாபப்படவோ அறிகுறி ஏதும் இல்லை. மேலும் இந்த வழக்கு மிகவும் அபூர்வமான வழக்கு ஆகும். எனவே 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: