தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.2.12

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை. புதிய சட்டம் அமல்.


ஓட்டுப் போட லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை அளிக்க வகை செய்யும், தேர்தல் கமிஷனின் ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.ஐந்து மாநில தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில், உத்தரபிரதேசத்தில் மட்டும் முறைக்கேடாக எடுத்துச் செல்லப்பட்ட, 53 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், வன்முறை மற்றும் லஞ்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வர, தலைமை தேர்தல் கமிஷன்
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிரிமினல் பின்னணி உள்ளவர்களை, தேர்தலில் பங்கேற்க தடை செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், தேர்தலின் போது தங்களுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, தற்போது பரவலாக காணப்படுகிறது. இதற்காக, ஐந்து மாநில தேர்தலில், தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து, வாக்காளர்களை கவரும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இது தொடர்பான சட்டம் கொண்டு வரும்படி, தலைமை தேர்தல் கமிஷன், மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.இந்திய தண்டனைச் சட்டம் 171(பி) பிரிவின் கீழ், தேர்தலின் போது பணம் கொடுப்பவர்களை தண்டிக்கலாம். இந்த சட்டத்தின் கீழ் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்போருக்கு, ஓராண்டு வரை சிறை தண்டனை அளிக்கலாம். அல்லது சிறை தண்டனை மற்றும் அபராதமும் சேர்த்து விதிக்கலாம்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(1) பிரிவின் கீழ், லஞ்சம் பெறுவதும் குற்றம். இந்த சட்டத்தை பயன்படுத்தி, ஓட்டுப் போட பணம் பெறுபவர்களுக்கும் தண்டனை கொடுக்கலாம்.இந்திய தண்டனைச் சட்டம் 171 பி(1) பிரிவின் கீழ், ஒரு பொருளை கொடுத்தோ, பணத்தை கொடுத்தோ வாக்காளர்களை ஓட்டுப் போட செய்வது குற்றமாகும்.
"இந்த சட்டப் பிரிவுகளை பயன்படுத்தி, தேர்தலின் போது பணம் கொடுப்பவர்களை தண்டிக்க வழி செய்யும்படி, மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளோம். இந்த ஆலோசனையை, சட்டத்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது' என, தேர்தல் கமிஷனின் செலவு கண்காணிப்பு பிரிவின் டைரக்டர் ஜெனரல் பி.கே.தாஷ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: