தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.1.12

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை

மதுரையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த வி.ஆர்த்தி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா, 88 பிளாக் மருத்துவமனைகள், 14 நடமாடும் மருத்துவ பிரிவுகள், 11 அரசு மருந்தகங்கள், 7 பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், 4 காசநோய் மருத்துவமனைகள் மற்றும் 7 தொழுநோய் மருத்துவமனைகள் உள்ளன.


பொதுமக்கள் இந்த மருத்துவமனைகளின் சேவையை நம்பியே உள்ளனர். சமுதாயத்திற்கு சேவையாற்றும் பொறுப்பு இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு உள்ளது. அரசு டாக்டர்கள் அரசு ஊழியர்கள். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு முழு சேவையை வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான அரசு டாக்டர்கள், தனியாக கிளினிக் நடத்துகின்றனர்.


தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரிகின்றனர். அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான டாக்டர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. கடந்த 6 மாதங்களில் அரசு டாக்டர்களின் கவனக்குறைவால் 70 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என்ற உயிர் பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர்.


தமிழகத்தில் பொலிசார், ஆசிரியர்களுக்கு தனியாக தொழில் நடத்த அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு & காஷ்மீரில் அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் அரசு டாக்டர்கள், தனியாக கிளினிக் நடத்தவும், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா ஆகியோர் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் அருணாச்சலம் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணை வரும் 24ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

0 கருத்துகள்: