காஷ்மீர் குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும், அண்ணா ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷண் மீது கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீர் குறித்து அம்மாநில மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீராம் சேனையைச் சேர்ந்தவர்கள் பூஷணை தாக்கினர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அண்ணா ஹசாரே வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது, பிரசாந்த் பூஷணின் கருத்து எங்களுடைய கருத்தை பிரதிபலிப்பலிக்கவில்லை. அது அவருடைய சொந்த கருத்து என்றார் அவர்.
ஹசாரே மேலும் கூறியது : காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அம்மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்வோம். எங்கள் குழு சார்பாக கருத்தை வெளியிடும் முன் குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளை வெளியிட தடையில்லை. அனுமதியும் தேவையில்லை. காஷ்மீர் குறித்து பூஷண் வெளியிட்ட கருத்துகள் சரியானவை அல்ல. எதிர்காலத்தில் அவர் எங்கள் குழுவில் இடம் பெறுவாரா, இல்லையா என்பதை இப்போது கூறமுடியாது. தேவைப்படும் நேரத்தில் அது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
அண்ணா ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள பூஷண், லோக்பால் வரைவு மசோதா தயாரிக்கப்பட்ட கூட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் குறித்து பூஷண் கூறியவை அவரது சொந்த கருத்து என்று, ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ளவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக