தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.9.11

சௌதி அரேபிய அரசின் பொது மன்னிப்பு திட்டத்தால் 50 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்


உரிய ஆவணங்கள், அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் மேலாக தங்கியிருந்த சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள், சௌதி அரேபிய அரசின் பொது மன்னிப்பு திட்டத்தின் மூலம் தாயகம் திரும்பினர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் கட்டுமானப் பணிகளுக்காகவும் வீடுகளில் பணி செய்வது போன்ற பணிகளுக்காகவும் அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். சிலர் உரிய ஆவணங்கள்
இன்றி அங்கு பணி செய்வது சௌதி அரேபிய அரசுக்கு தெரிய வந்தது. அதே போன்று விசா காலம் முடிந்தும் பலர் அங்கேயே தங்கியிருப்பதும் தெரியவந்தது. ஹஜ் பயணம் செல்பவர்களும் அரபு நாடுகளில் தங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்களும் இதில் அடங்குவர். இதையடுத்து அந்நாட்டு சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை சௌதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து, அவர்கள் தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. ரியாத் மற்றும் ஜெட்டாவிலுள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களுக்கு எமர்ஜென்சி பாஸ்போர்ட் போன்ற பயண ஆவணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் 50,000 இந்திய தொழிலாளர்கள் நாடு திரும்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்திய தூதரகமும், சௌதி அரேபியாவின் பல்வேறு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியர்களுக்கு உதவும் வகையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரி டி.சி. பாருபால் கூறினார். இணைய தள வசதிகள் கொண்ட இம்மையத்தில், அவர்கள் ஆலோசனைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய அரசின் முன்னோடி திட்டம் என்று அதிகாரிகள் கூறினர். பல்வேறு நலத்திட்டங்களை அவர்கள் இந்திய தூதரகங்களுக்கு நேரில் சென்று பயன்படுத்தி கொள்ளலாம் என்றார் அவர்.

0 கருத்துகள்: