தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.11.11

நரேந்திர மோடிக்கு விசா கிடையாது: அமெரிக்கா மீண்டும் மறுப்பு


குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்கா செல்ல சுற்றுலா விசா கோரி மோடி விண்ணப்பித்தார். ஆனால் குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி அவருக்கு விசா தரக் கூடாது என அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து மோடிக்கு விசா தர
அமெரிக்க அரசு மறுத்து விட்டது.இந் நிலையில் கடந்த 2008ம் ஆண்டு நியூஜெர்சியில் நடைபெற்ற குஜராத் கலாச்சார மாநாட்டில் பங்கேற்க சுற்றுலா விசா கோரி மோடி மீண்டும் விண்ணப்பித்தார். அப்போதும் மோடிக்கு விசா மறுக்கப்பட்டது. நரேந்திர மோடி தன் மீதான மனித உரிமை மீறல் புகார்கள், வன்முறை புகார்களை பொய் என்று நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க தெரிவித்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
எனினும் அமெரிக்க வர்த்தகத்துக்கு குஜராத் மாநிலம் சிறந்த வரவேற்புக்குரிய சூழலைப் பெற்றுள்ளது எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் தொழில் வளர்ச்சி, முதலீடுகள் விஷயத்தில் இந்தியாவில் குஜராத் முன்னணி மாநிலமாக திகழ்வதாக சமீபத்தில் அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்திருந்தது. மேலும் நரேந்திர மோடியை பிரதமராக முன் நிறுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்வதாக அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்தியாவில் மிகச் சிறந்த நிர்வாகத் திறனுக்கு மோடியே சாட்சி என்றும், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே கொண்ட குஜராத், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்வதாகவும் அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு பாஜக பெரும் வரவேற்பு தெரிவித்திருந்தது. மோடியை பிரதமராகக் கொண்டு பாஜக ஆட்சிக்கு வருவதை அமெரிக்கா விரும்புவது தெளிவாகவே தெரிகிறது என்று அக் கட்சியின் மூத்த தலைவரான அத்வானியும் தனது பிளாக்கில் எழுதியிருந்தார்.
மீண்டும் விசா மறுப்பு:
இந் நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா அளிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலாளர் ராபர்ட் பிளேக், விசா மறுப்புக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்க வர்த்தகத்துக்கு குஜராத் மாநிலம் சிறந்த சூழலைப் பெற்றுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: