தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.11.11

அப்துல்கலாமுக்கு அவமரியாதை செய்த அதிகாரிகள் பதவிநீக்கம் -அமெரிக்கா அறிவிப்பு


முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அமெரிக்கா சென்றபோது, பரிசோதனை என்ற பெயரில் அவருக்கு அவமரியாதை இழைத்த இரண்டு அதிகாரிகளை பதவிநீக்கம் செய்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.சமீபத்தில் அப்துல்கலாம் அமெரிக்கா சென்ற போது நியூயார்க் விமான நிலையத்தில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம்
கடுமையான சோதனை மேற்கொண்டனர்.
சோதனை முடிந்து அவர் விமானத்தில் அமர்ந்த பிறகும் உள்கோட்டையும், ஷூவையும் கழட்டி எடுத்துச்சென்று சோதனை செய்தனர். இந்திய அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய அரசு கொடுத்த புகாரை தொடர்ந்து அமெரிக்க அரசு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து கென்னடி விமான நிலையத்தில் பணிபுரிந்த சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளையும் தற்காலிக பணிநீக்கம் செய்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கண்டனம்
இதனிடையே அப்துல்கலாம் அவமானப்படுத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்க விமான நிலையத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் இந்திய நாட்டின் முக்கிய பிரமுகர்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிட்டு இதுபோன்ற அவமதிப்புகளை செய்து வந்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டஸ், இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான், தமிழ்சினிமா உலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன், மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி ஆகியோர் வன்மத்துடன் பரிசோதிக்கப்பட்டதும், அவமதிக்கப்பட்டதும் நிகழ்ந்தன.
இந்திய அரசின் எதிர்ப்பிற்கு பின் அமெரிக்கா மன்னிப்பு கோரியிருந்தாலும், எதிர்காலத்தில் இந்தியர்களின் மீதான அவமதிப்பு தொடர்ந்தால் இந்தியா பதிலடி தரும் என அறிவிக்க வேண்டும் என்று கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

0 கருத்துகள்: