தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.11.11

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு: கட்ஜுவின் கருத்திற்கு குடியரசு துணை தலைவர் ஆதரவு


புதுடெல்லி:செய்தி சேனல்கள் உள்ளிட்ட ஊடகங்களை கட்டுப்படுத்த ஒரு அதிகார மையம் தேவை என ப்ரஸ் கவுன்சிலின் சேர்மன் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் பரிந்துரையை குடியரசுதுணை  தலைவர் ஹமீது அன்சாரி ஆதரித்துள்ளார்.நேற்று நடந்த தேசிய ஊடக தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். அதேவேளையில் ஊடகங்கள் தங்களுக்கு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுதான் மிகச்சிறந்த வழி என செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர்
அம்பிகா சோனி உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார்.
துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி தனது உரையில் கூறியதாவது: ஊடகங்களுக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான அரசு ஏஜன்சி இல்லாத காரணத்தால் சுயக்கட்டுப்பாடு என்ற கொள்கை உருவானது. ஆனால் அது முற்றிலும் தோல்வியை தழுவியுள்ளது. ஊடகங்கள் பாரபட்சமாகவும், பொது விருப்பங்களை விட சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக நடந்து கொள்ளும் வேளையில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சுயக்கட்டுப்பாடு விதிக்கும் கொள்கை என்பது பயனற்று போகிறது.
ஊடக கார்ப்பரேட்டுகளின் வர்த்தக விருப்பங்கள் மீதான கட்டுப்பாடுகளில் இருந்து தப்புவதற்கு கருத்து சுதந்திரம் என்ற அரசியல் சட்ட உரிமையை பயன்படுத்தலாம் என்றால் பொது விருப்பமும், சுய விருப்பமும் எங்கே துவங்குகிறது? ஊடகங்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் பிற நாடுகளின் முன்மாதிரியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனைக் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு ஹமீது அன்சாரி கூறினார்.
ப்ரஸ் கவுன்சில் சேர்மன் கட்ஜு உரையாற்றுகையில்; ’ப்ரஸ் கவுன்சிலின் கீழ் தொலைக்காட்சி சேனல்கள் வருவதற்கு விருப்பம் இல்லையெனில் லோக்பால் உள்ளிட்ட இதர அமைப்புகளை குறித்து ஆலோசிக்க வேண்டிவரும். சுய கட்டுப்பாடு மட்டும் போதும் என்றால் அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் சுயக்கட்டுப்பாடு மட்டும் போதும் என கூறவேண்டிய சூழல் உருவாகும். ஊடகங்கள் மட்டும் புனிதர்கள் எனவும், இதர நபர்களெல்லாம் மோசமானவர்கள் என எண்ணுவது சரியல்ல. அவ்வாறெனில் பணம் வாங்கி செய்தி வெளியிடுதல், நீரா ராடியாவின் டேப்புகள் உள்ளிட்டவை எதனை நிரூபிக்கிறது? அவமதிப்பு வழக்கில் டைம்ஸ் நவ் சேனலுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிப்பது சரியல்ல. நீதிமன்றம் தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவேண்டும். தனது கருத்து நீதிமன்றத்தின் மீதான பூரண மதிப்புடன் கூறவதாகும். இவ்வாறு கட்ஜு கூறினார்.
அதேவேளையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்துவது ஊடகங்கள் மற்றும் சுதந்திர சிந்தனையாளர்கள் ஆகியோரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் உருவாக காரணமாக அமையும் என அம்பிகா சோனி தெரிவித்தார்.

0 கருத்துகள்: