அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதய அதிபர் பராக் ஒபாமாவுக்கு கடுமையான போட்டியாளராக உருவாகியுள்ளார் றிப்பப்ளிக்கன் கட்சி வேட்பாளர் மிற் றொம்னி. பராக் ஒபாமா மறுபடியும் அதிபராக வந்தால் ஈரானின் கையில் அணு குண்டு இருக்கும், ஆகவே எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் இவர் கருத்துக் கணிப்பில் ஒபாமாவை முந்திச் சென்றுள்ளார். நேற்று நடைபெற்ற 90 நிமிடங்கள் கொண்ட
தொலைக்காட்சி உரையாடலில் தான் அதிபராக வந்தால் ஈரானுக்கு எதிரான தாக்குதலை மேற்கொள்வேன் என்று இவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எக்காரணம் கொண்டும் ஈரானை அணு ஆயுத மேலாதிக்கம் கொண்ட நாடாக வருவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் சூழுரைத்தார். ஆனால் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒருவர் தனது பிரச்சாரத்தில் சொந்த நாட்டு பிரச்சனையை விட்டுவிட்டு, இன்னொரு நாட்டுடன் போர் புரியப்போவதை நிபந்தனையாக வைப்பது தற்கொலைக்கு ஒப்பான வாதம் என்று இவருடைய கட்சியிலேயே கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் சென்ற வாரம் இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரஸ் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடாத்தத் தயங்காது என்று கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரம் இலகுவானதல்ல, காரணம் ரஸ்ய அதிபர் தேர்தலுக்கு போட்டியிடவுள்ள சிறீமான் விளாடிமிர் புற்றின் ஈரானுக்கு உதவுவதை தனது பிரச்சாரமாக முன் வைத்துள்ளார். ஆக இரு பெரும் வல்லரசுகள் இழுக்கப்போகும் போட்டா போட்டி அரசியல் கயிற்றில் மத்தாக சுழலப்போகிறது ஈரான். சர்வதேச அரசியல் மத்து கடையப்போகும் கடைச்சலில் ஈரானின் அணு உலை அமெரிக்கத் தேர்தலுக்கு முந்தியே வெடித்து சிதறினாலும் சிதறிவிடுமோ என்ற அச்சமும் உருவாகி வருகிறது. தமது நாட்டு பொருளாதார பிரச்சனையை தீர்க்க முடியாத தலைவர்கள் மக்கள் கவனத்தை திசை திருப்ப இப்படியான நாசகார பிரச்சாரங்களை செய்வது வழமை. முன்னாள் அதிபர் புஸ் இதே தவறையே இழைத்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஒபெக் நாடுகளின் மாநாட்டில் அமெரிக்காவும் – ரஸ்யாவும் கடும் மோதலை சந்திக்கவுள்ளன. ஐரோப்பாவில் ஏவுகணைகளை அமைக்கும் அமெரிக்க முடிவுக்கு ரஸ்யா பயங்கர எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானை குறிவைத்து அமெரிக்கா பொருத்தவுள்ள ஏவுகணைகளை ரஸ்யா தடுக்கப்போகிறது. அதையும் மீறி ஏவுகணைகளை பொருத்தினால் ஈரானுக்கு அணு ஆயுத உருவாக்கத்திற்கு ரஸ்யா துணை போகும். அதன் பின் ஈராக்கைப் போல ஈரானையும் ரஸ்யா நடுத்தெருவில் கைவிட வேண்டுமானால் மிகப்பெரும் நிதியை மேலை நாடுகள் ரஸ்யாவுக்கு வழங்க வேண்டி வரும். எப்படியோ இந்த விவகாரத்தில் இரு தரப்பும் இலாபமடைய ஈரான் பலத்த நட்டமடைய வாய்ப்புள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக