தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.10.11

ஆயிரம் படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் லூஸ் மோகனின் பரிதாப நிலை


ஆயிரம் படங்களில் நடித்து, தமிழக மக்களை சிரிக்க வைத்த நடிகர் லூஸ் மோகன் பரிதாப நிலையில் உள்ளார். மகன் மீது போலீஸ் கமிஷனரிடம் அவர் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன். ஆயிரம் படங்களில் நடித்து மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். இன்று பலரால் பார்த்து சிரிக்கப்படும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

84 வயதான அவர், மைலாப்பூர் சாலை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது சொந்த வீட்டில் வாழ்கிறார். அவருக்கு எந்த குறையும் இல்லையாம். தேவையான பணம் இருக்கிறதாம். ஆனால் தள்ளாடும் வயதில் தனக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை என்று கண்ணீர் விட்டு அழுதபடி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கிடம், அவர் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். தனது மகன் மீதும், மருமகள் மீதும் குற்றம்சாட்டி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனுவில் கூறியுள்ளார்.
பின்னர் அவரது கண்களில் கண்ணீர் பொங்க நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்களை சிரிக்க வைத்த எனது நிலை, இன்று பலரும் சிரிக்கும்படி ஆகிவிட்டது. எனக்கு தேவையான அளவு பணம் இருக்கிறது. ஆனால் உதவிக்கு ஆள் இல்லை. எனது மனைவி பச்சையம்மாள் இறந்தபிறகுதான் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. தாய்க்குப்பின் தாரம் என்பார்கள். எனது மனைவியால்தான் இந்த சொந்தவீட்டில் வாழும் அளவுக்கு நான் வசதியாக உள்ளேன். எனக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைத்துவிட்டேன்.
மகன் கார்த்திக் என்னை நன்றாக பார்த்துக்கொள்வான் என்று நினைத்தேன். அவனுக்கு கம்ப்யூட்டர் சென்டர் வைத்து கொடுத்தேன். அதை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை. அதன்பிறகு தமிழ் பத்திரிகை ஒன்றில் வேலை வாங்கி கொடுத்தேன். இப்போது அங்குதான் வேலைபார்க்கிறான்.
ஆனால் திருமணத்துக்கு பிறகு எனது மகன் அடியோடு மாறிவிட்டான். மனைவி பேச்சை கேட்டுக்கொண்டு என்னை தனி ஆளாக தவிக்க விட்டு போய்விட்டான். 3 நாட்களாக நான் சாப்பிடவில்லை. சாப்பாடு வாங்கித்தரக்கூட ஆள் இல்லை. கமிஷனர் அலுவலகத்தில் டீ கொடுத்தார்கள். அந்த டீயை குடித்தபிறகுதான் எனது பசி அடங்கியுள்ளது.
எனது மகள்கள் வீட்டுக்கு போக விருப்பமில்லை. எனது மனைவி வாழ்ந்த வீட்டில் எனது உயிர் போகும்வரை வாழ்வேன். வயதான காலத்தில் பலரது நிலைமை என்னுடைய நிலைமையைப்போலதான் உள்ளது. எனது வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் என்பதற்காகத்தான் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தேன். எனக்கு ஒரு காது கேட்காது. கண்பார்வை மங்கிவிட்டதால் மற்றவர் துணையில்லாமல் என்னால் நடமாட முடியாது.
இருந்தாலும் துணிவே துணை என்ற பொன்மொழியை நினைத்துக்கொண்டு நான் காலத்தை தள்ளுகிறேன். தமிழக மக்களுக்கு குறிப்பாக சினிமா உலகத்தினருக்கு எனது வேண்டுகோள். வாழ்க்கையின் கடைசி காலத்தில் நன்றாக வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் என்பதுதான். எனக்காவது வீடு இருக்கிறது, பணம் இருக்கிறது. பணமும், வீடும் இல்லாத வயதானவர்கள் எப்படி வாழ்வார்கள் என்பதுதான் அனைவராலும் யோசிக்கப்பட வேண்டியது ஒன்று. இவ்வாறு லூஸ் மோகன் கூறினார்.
ஒருபக்கம் பேட்டி கொடுக்கும்போது கண்ணீர் விட்டாலும், இன்னொருபக்கம் நகைச்சுவையும் செய்தார். தனது பல் செட்டை வைத்துவிட்டு வந்ததாக கூறினார். சினிமாவில் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு, பல தயாரிப்பாளர்கள் போலி காசோலை கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டார்கள். நான் பலரிடம் ஏமாந்தேன். ஆனால் நான், யாரையும் ஏமாற்றவில்லை என்றார்.
எனது உதவியாளருக்கு 'டென்சன்' பாஸ்கர் என்று பெயர் வைத்தேன். ஆனால் அவன் என்னிடம் லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிக்கொண்டு, எனக்கு 'டென்சன்' கொடுத்துவிட்டு போய்விட்டான் என்று அவருக்கே உரிய பாணியில் சினிமாவில் நகைச்சுவை செய்வதுபோல, நெளிந்து நெளிந்து பேசினார்.
அவரது பேச்சை கேட்டு புகார் கொடுக்க வந்த மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அவரது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மைலாப்பூர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு, மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் மோகன்ராஜ் உதவி செய்தார்.

0 கருத்துகள்: