தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.10.11

மாநில கட்சிகள் அங்கீகாரம் பெற 8 சதவீத ஓட்டுகள் வாங்க வேண்டும்: தேர்தல் கமிஷன் விதிமுறைகளில் மாற்றம்

புதுடெல்லி, அக். 13-  மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற வேண்டுமானால், 8 சதவீத ஓட்டுகள் வாங்கினால் போதும் என்று, விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மாநில அளவிலான கட்சிகள், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி அந்த கட்சிகள் ஒரு தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம் வாங்க வேண்டும். அல்லது சட்டசபை தேர்தலாக இருந்தால், 30 தொகுதிகளுக்கு 1 தொகுதி என்ற
அளவில் வெற்றி பெற வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலாக இருந்தால், 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த விதிமுறைகளை தலைமை தேர்தல் கமிஷன் எளிமைப்படுத்தி மாற்றி அமைத்து உள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி கூறியதாவது-
"சில கட்சிகள் தேர்தலில் 8 முதல் 10 சதவீத ஓட்டுகள் வாங்கியிருந்தாலும், குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற முடியாததால் அங்கீகாரம் பெற முடியாமல் போய்விடுகிறது. இது குறித்து பல்வேறு கட்சிகளிடம் இருந்து எங்களுக்கு முறையீடுகள் வந்துள்ளன. எனவே, அங்கீகாரம் வழங்குவதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்தி மாற்றியமைக்க முடிவு செய்து இருக்கிறோம்.
அதன்படி இனி மாநில கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறது என்ற எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும் 8 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தால் அந்த கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் வழங்கப்படும். இதன் மூலம் அங்கீகாரம் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி இருக்கிறோம்". இவ்வாறு எஸ்.ஒய்.குரேஷி கூறினார்.

0 கருத்துகள்: