குப்வாரா காஷ்மீரின் வட பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டம் சோகல் என்ற இடத்தில், நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி நடந்த வந்த 22 வயது இளைஞரை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
தனது இல்லத்தில் இருந்து வெளியே நடந்த வந்த மன்சூர் அகமது மாக்ரே, இராணுவம் விடுத்த எச்சரிக்கைக்கு செவி மடுக்காமல் தொடர்ந்து நடந்து சென்றதையடுத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய இராணுவத்தின் 4வது பாரா படைப்பிரிவு கூறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாக்ரே சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குப்வார மாவட்டத்தின் ஹண்டுவாரா நகரத்தில் பதற்றம் நிலவுகிறது.
இதேபோல் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி, இளைஞர் ஒருவர் இராணுவத்தால் சுடப்பட்டு இறந்தார். அதுவும் குப்வாரா மாவட்டத்தில்தான் நடந்தது. இது தொடர்பாக 4வது பாரா பிரிவு மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவம் துப்பாக்கியால் சுட்டு மேலும் ஒரு இளைஞர் பலியாகியிருப்பதை கண்டித்துள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைந்த கட்டளைத் தலைமையிடம் தான் கூறிய ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன ஆலோசனை வழங்கினார் என்பதை தெரிவிக்கவில்லை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக