தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.9.12

கூடங்குளம் போலீஸ் தாண்டவம் --அரசே பொறுப்பு.


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஏறத்தாழ நானூறு நாட்களுக்கும் மேலாக எஸ். பி . உதயகுமார் , புஷ்பராயன் , மைபா ஜேசுதாஸ் போன்றோர் தலைமையில் நடந்து வந்த மக்கள் போராட்டம், இதுவரை எவ்வித வன்முறையோ அசம்பாவிதச் சம்பவங்களோ இல்லாமல் மிகவும் சாத்வீகமான முறையில் தொடர்ந்து கொண்டிருந்தது.அம்மக்களை வன்முறைக்குத் தூண்டும்படியான செயல்களில்  சிறுபான்மையினருக்கும் தமிழர்களுக்கும்  எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
ஒரு தமிழ் நாளேடும்  காங்கிரஸ் மற்றும் இந்து முன்னணி போன்ற கட்சியினரும் ஈடுபட்டு வந்தாலும் அவர்கள் வன்முறையில் இறங்கவில்லை. அந்த  உழைக்கும் எளிய மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக அரசோ அரசு ஏஜென்ஸிகளோ அவர்களைச் சந்தித்து அவர்களின் குரலைக் கேட்கவில்லை.மக்கள் ஜனாதிபதி எனப்புகழப்படுகின்ற அணுசக்திக்குத்  தொடர்பற்ற விமானத் தொழில் நுட்ப வல்லுநரான அப்துல்கலாமும்  அந்த மக்களைச் சந்திக்காமல் அணு உலை பாதுகாப்பானது என்று கூறிச்சென்றார். மத்திய மாநில அரசுகள் அனுப்பி வைத்த வல்லுநர் குழுக்களும் அம்மக்களைச் சந்தித்து அவர்களின் அச்சத்தை நீக்கும் வண்ணம் அவர்களிடம் பேசவில்லை. போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன்  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வல்லுநர் குழுக்கள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு வல்லுநர் குழு விடையளிக்கவில்லை.மத்திய அரசில் இணை அமைச்சராக இருக்கும்  நாராயணசாமி என்பவர் நாள்தோறும் "இன்னும் பதினைந்து நாளில் அணுமின் நிலையம் உற்பத்தியைத் துவங்கும்" என்று வானிலை அறிக்கைபோல் சொல்லிக்கொண்டே இருந்தார்.  இறுதியாக உயர்நீதிமன்றமும் அணு உலைக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்த நிலையில் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் முடிவுக்கு அரசு அனுமதி அளித்தது.

ஜனநாயக ரீதியில் அஹிம்சை முறையில் தம்மை வருத்திக்கொண்டு போராடியும் சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியும்  தீர்வு கிடைக்காத நிலையில் இறுதியாக நேரடி நடவடிக்கை மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கலாம் என்றுதான் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர். அணு உலையை ஆக்கிரமிக்கவோ வெறுங்கையால் தகர்த்தெறியவோ அவர்கள்  வரவில்லை. மறியல் அல்லது முற்றுகை என்பது ஒரு ஜனநாயக நாட்டில் போராட்ட அடையாளம். .அதற்கே அம்மக்கள் வந்தனர்.அவர்களை எதிர் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் செல்வராஜ்,   தென்மண்டல் ஐஜி ராஜேஷ்தாஸ் டி ஐ ஜி வரதராஜு, எஸ் பி விஜயேந்திரபிதரி  ஆக்யோர் தலைமையில் கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். மக்கள் கடற்கரையில் அமர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பொதுமக்களுக்கோ போக்குவரத்துகோ எவ்விதத் தடையும் இல்லாமல் விடிய விடிய அந்தக் கடற்கரையில் அமர்ந்து இருந்த மக்களிடையே  இருந்த உதயகுமாரையும் புஷ்பராயனையும் கைது செய்யப் போலீஸ் முனைந்தபோது அம்மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பகல் 11 மணியளவில் கடற்கரைக்கு வந்த  தென்மண்டல ஐ.ஜி., ராஜேஸ்தாஸ், கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி., வரதராஜு, எஸ்.பி., விஜயேந்திர பிதரி ஆகியோர், மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்கினர்.ஆனால், போராட்டக்காரர்கள் பிடிவாதமாக இருந்தனர். "இன்னும், 10 நிமிடம் மட்டும் அவகாசம் தருகிறேன். கலைந்து செல்லுங்கள்" என்றார் எஸ் பி விஜயேந்திர பிதரி.

போலீஸ் பொதுமக்களிடம் எப்படிப் பேசுவார்கள் ; எப்படி மிரட்டுவார்கள் என்று பள்ளிப்பிள்ளைகளும் அறிந்து வைத்துள்ளனர். எவ்வித வன்முறையிலும் ஆத்திரமூட்டும் செயலிலும் இறங்காமல் தம் வாழ்வாதாரத்தின் மீதும் வருங்காலச் சந்ததியின் மீதும் கொண்டுள்ள அக்கறையால் போராடும் மக்களை மிரட்டினால் என்ன நடக்கும்? மக்கள் எதிர்க்குரல் எழுப்பினர். போலீஸ் இதைத் தாங்குமா? உடனே வெறியாட்டம் துவங்கிவிட்டது. முதிய வயதினர், பெண்கள் குழந்தைகள் அடங்கிய கூட்டத்தில் தடியடியும் கண்ணீர்ப்புகக் குண்டு வீச்சும்.... தம் தவறையும் அத்துமீறலையும் மறைப்பதற்காகப் பத்திரிகையாளர்களைத் தாக்கி அவர்களின் கேமராக்களையும் பிடுங்கி வீசியுள்ளது போலீஸ். இப்போது மக்கள் போலீஸைத் தாக்கினார்கள் எனச்சொல்கிறது போலீஸ்.முதல்வரும் போலீசின் அறிக்கையை அப்படியே ஏற்றுச் சொல்கிறார்.போலி என்கெளண்டர்களில் தம் கைகளில் கத்தியால் லேசாகக் கீறிக் காயம் ஏற்படுத்தும் போலீஸ் உத்தி தமிழ்நாடு அறியாத ஒன்றன்று..

போராட்டம் துவங்குவதற்கு முன்னரே மக்களைத் தாக்கி விரட்டியடிக்கும் திட்டம் அரசுத்தரப்பில் இருந்திருக்க வேண்டும். இதனால்தான் கலெக்டர் செல்வராஜ் "விளைவுகளுக்கு உதயகுமாரே பொறுப்பு" என நோட்டீஸ் வழங்கினார். ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தின் விளைவுகளுக்கு ஒரு தனி நபர் பொறுப்பு என்று ஆட்சித்தலைவர் சொல்வது பொறுப்பற்றதாகும். போலீஸை விட்டுத் தாக்கும் முடிவை எடுத்துவிட்டு விளைவுகளுக்கு நீதான் பொறுப்பு என்று சொல்வதற்கு ஓர் ஆட்சித் தலைவர் தேவையா?அரசின் திட்டத்தை எதிர்பார்த்த உதயகுமாரும் "விளைவுகளுக்கு அரசே பொறுப்பு" என்று சொல்லிவிட்டார்.

நேற்று நடந்த தாக்குதலுக்கு  அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். "நான் உங்களுடன் இருப்பேன்" என்று போராடும் மக்களிடம்  போலி வாக்குறுதி கொடுத்த முதல்வர் ஜெயலலிதாதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.   யாருக்கும் இடையூறோ தொந்தரவோ இல்லாமல்  கடற்கரையில் அமைதியாக  அமர்ந்திருந்து ஜனநாயக அறவழியில் தம் எதிர்ப்பைக் காட்டிய மக்களின் உணர்வுகளை  அடக்குமுறை மூலம் நீர்த்துப்போகச் செய்ய முடியாது என்பதைக் கடந்த கால வரலாறுகளிலிருந்து அரசு  கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அண்மைக்கால சிங்கூர் நந்திகிராம நிகழ்ச்சிகளில் இருந்தாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்: