வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பெண்ணின் தீர சாகசம் சிதம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் அருகே உடையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. நேற்று இரவு ராஜலட்சுமி தன் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த நேரத்தில் இருவர் தீடீரென அவர் வீட்டினுள் புகுந்துள்ளனர். பின்னர், ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகைகளையும் வீட்டிலிருந்த ரூ. 10,000 ஐயும் கத்தி முனையில் மிரட்டி பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
கொள்ளையர்கள் வீட்டிலிருந்து வெளியேறியதும் கையில் அரிவாள் ஒன்றை எடுத்துக்கொண்டு அவர்களைத் தெருவில் விரட்டிச் சென்ற ராஜலட்சுமி, பின்புறமிருந்து ஒரு கொள்ளையனை வெட்டினார். மற்றொருவன் வெட்டுபடாமல் தப்பித்துக்கொண்டான். வெட்டுபட்ட கொள்ளையன் படுகாயமடைந்ததால் ஓட முடியாமல் தடுமாறி விழுந்தான். இதற்குள் அவ்விடம் கூடிய கிராம மக்கள், வெட்டுபட்ட கொள்ளையனைச் சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டனர்.
இச்சம்பவம் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் ராஜலட்சுமியின் வெட்டால் காயமடைந்த கொள்ளையனை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெட்டுபட்ட கொள்ளையனின் பெயர் முருகன் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய கொள்ளையனைப் பிடிக்கக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தீரத்துடன் விரட்டிச் சென்று, ஒருவனைப் பிடிக்கவும் செய்த ராஜலட்சுமின் வீரச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக