தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.2.12

இலங்கை – ஈரான் உறவை அமெரிக்கா உட்பட எந்த தரப்பினாலும் தடுக்க முடியாது-ஈரான் தூதுவர்!


எந்தவித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி நபி ஹசனி பேர் தெரிவித்தார்.இந்த உறவினை அமெரிக்கா மற்றும் இலங்கையின் எதிர்க்கட்சி உள்ளிட்ட எந்தவொரு தரப்பினராலும் கூட தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு 33 ஆண்டு நிறைவு மற்றும் தேசிய தினம் ஆகியவற்றினை இன்று சனிக்கிழமை ஈரான் கொண்டாடுகின்றது. இந்நிலையில், உலக நாடுகளுக்கு அமெரிக்காவினால் ஈரானிய எண்ணெய் தொடர்பில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை தொடர்பில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் ஒருதலைபட்சமான இந்த தடையின் ஊடாக சிறிய நாடுகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறான பொருளாதார தடைகளினை ஐக்கிய நாடுகள் மாத்திரமே விதிக்க முடியும் என அவர் தெரிவித்தார். அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகள் இவ்வாறான ஒருதலைபட்சமான தடைகளை விதிப்பது சட்டவிரோதமான செயலாகும் எனவும் ஈரான் தூதுவர் குறிப்பிட்டார்.
‘ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளினால் பொருளாதர தடை விதிக்கப்படுவது இன்று நேற்றல்ல. கடந்த 50 வருடங்களாக பொருளாதர தடை விதிப்பு இடம்பெற்று வருகின்றது. ஆனால் குறித்த பொருளாதார தடைகளுக்கு மாற்றீடான வழிகளை ஈரான் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இது போன்றே தற்போது ஈரான் தொடர்பில் உலக நாடுகளுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைக்கும் மாற்றுவழி காணப்படும்’ என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த தடைகளுக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் தேயிலை ஆகியன தொடர்ச்சியாக இரு நாடுகளுக்குமிடையில் பறிமாறப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டார். சுமார் 32 வருட நெருங்கிய உறவினை கொண்ட இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு தொடர்ந்து நீடிக்கும் என இலங்கைக்கான ஈரான் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்: