மதங்கள் வேறுபட்டாலும் மனிதநேயத்தால் ஒன்றுபட்ட தம்பதிகள் இருவர் ஒருவருக்கொருவர் சிறுநீரகத் தானம் செய்து இரு உயிர்களை வாழச் செய்துள்ள நெகிழ்வூட்டும் சம்பவம் ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தானூரைச் சேர்ந்தவர் அப்துல்மஜீத். 51 வயதான இவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு. உடனடியாக மாற்று அறுவை சிகிட்சை மேற்கொள்ளப்படவேண்டிய நிலை. இவருடைய மனைவி தாஹிரா தனது சிறுநீரகங்களுள் ஒன்றை கணவனுக்காக
முன்வந்து தானம் செய்யத் துடித்தும், வேறுபாடான குருதிநிலை காரணமாக அவ்வாறு தானம் தர இயலாத நிலை.அதே மலப்புரத்தின் பெருந்தாளூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். 37 வயதாகும் இவருக்கும் சிறுநீரகக் கோளாறு. பாலகிருஷ்ணனின் மனைவி பிந்துவின் குருதியும் அவர்தம் கணவனுடைய இரத்தப் பிரிவுடன் ஒத்துப் போகாதாதால் பிந்துவாலும் தனது கணவனுக்காக சிறுநீரகம் தானம் செய்ய இயலா நிலை.
அதே சமயம், தாஹிராவின் இரத்தப் பிரிவு பாலகிருஷ்ணனுக்கும், பிந்துவின் இரத்தப் பிரிவு அப்துல்மஜீதுக்கும் பொருந்துவதாகத் தெரியவந்த மருத்துவர்கள் இவ்விபரங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தனர்.
அவ்வாறு மருத்துவர்களின் அறிவுரைக்கிணங்க, தாஹிரா தனது சிறுநீரகம் ஒன்றை பாலகிருஷ்ணனுக்கு தானமளிக்க முன்வந்தார். அதுபோன்றே பிந்துவும் தனது சிறுநீரகத்தை அப்துல்மஜீதுக்கு தானமளிக்க ஒப்புக்கொண்டார். அதன்பேரில் ஒருவார கால இடைவெளியில் இவ்விரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்துல்மஜீத், பாலகிருஷ்ணன் ஆகிய இரு நோயாளிகளும் அதன் பின்னர் பூரண நலம் பெற்றுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக