தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.1.12

பாகிஸ்தானில் பதற்றம்; ஆட்சி கவிழ்ப்புக்கு தயாராகிறது இராணுவம்?


பாகிஸ்தான் பாதுகாப்பு செயலரை பிரதமர் கிலானி திடீரென நீக்கியுள்ளதை தொடர்ந்து அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் கிலானி தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்ற சதி செய்வதாக அரசு தரப்பில் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அப்படி ஒரு சதி அரங்கேற்றப்பட்டால், அமெரிக்கா தனது படைகளை அனுப்பி பாகிஸ்தான் இராணுவத்தை ஒடுக்க வேண்டும் என்று அதிபர் ஆஸிப் அலி சர்தாரியின் ஒப்புதலுடன் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு தரப்பில் கடிதம் எழுதப்பட்டதாக செய்தி வெளியானது. 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக பாதுகாப்பு செயலரான காலித் லோஹி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இராணுவ தளபதி கயானி மற்றும் ஐஎஸ்ஐ தலைவர் ஷா ஆகியோர் இந்த பிரச்னை தொடர்பாக தெரிவித்த உண்மையான பேச்சுக்களை தாக்கல் செய்யவில்லை என்று பிரதமர் கிலானிக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து பாதுகாப்பு செயலர் பதவியிலிருந்து லோஹியை, கிலானி இன்று அதிரடியாக நீக்க உத்தரவிட்டார். 

அத்துடன் இந்த வழக்கு விவகாரத்தில் இராணுவ தலைமை தளபதி கயானியும், ஐஎஸ்ஐ தலைவர் பாஷாவும் சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும் கிலானி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

அவரது இந்த குற்றச்சாட்டும், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரவிட அதிக அதிகாரமுள்ளவராக விளங்கிய பாதுகாப்பு செயலரை நீக்கியதும், இராணுவ தரப்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கிலாயின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்துள்ள இராணுவ தலைமை தளபதி கயானி, பிரதமரின் இந்த குற்றச்சாட்டு மிக மோசமானது என்றும், கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறியுள்ளார். 

அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே வெடித்துள்ள இந்த மோதல் காரணமாக இராணுவம், கிலானி அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியை கைப்பற்றலாம் என்று கூறப்படுவதால், பாகிஸ்தானில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. 

0 கருத்துகள்: