புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வெனிசுலா அதிபர் ஹூகோ சாவேஸ் இன்னும் ஒரு ஆண்டுதான் உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் (57). சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் ராணுவத்தில் சேர்ந்து அதிகாரியாக பணியாற்றினார். நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்கும் நோக்கில் ஒரு அமைப்பை தொடங்கினார்.
அரசுக்கு எதிராக போராட்டம் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டார்.
2 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த அவர் ஐக்கிய சோஷலிச கட்சியை தொடங்கினார். 1999-ல் அதிபரானார். அரசியல் சட்டத்தை மாற்றியமைத்த அவர் பல சட்ட திருத்தங்களையும் கொண்டு வந்தார். 2001-ல் மீண்டும் அதிபரானார். அவரை பதவிநீக்கம் செய்யும் வகையில் 2002-ல் நடந்த ராணுவ புரட்சி படுதோல்வியில் முடிந்தது. 2007-ல் நடந்த அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
அடுத்த தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதிலும் போட்டியிடப் போவதாக சாவேஸ் அறிவித்துள்ளார். இதற்கிடையில், புற்றுநோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டார். தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறார். டாக்டர்கள் கூறியதையும் கேட்காமல், வெனிசுலா நாடாளுமன்றத்தில் சாவேஸ் கடந்த 13-ம் தேதி தொடர்ச்சியாக 11 மணி நேரம் உரையாற்றினார்.
‘‘பொது கடமை நிறைய இருக்கிறது. அதை இடைஞ்சல் செய்யும் சிகிச்சை முறைகள் எனக்கு தேவையில்லை’’ என்றும் டாக்டர்களிடம் சாவேஸ் கூறியிருக்கிறார். இந்நிலையில், அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த டாக்டர்கள் இன்னும் 9 முதல் 12 மாதங்கள் வரைதான் அவர் உயிருடன் இருப்பார் என்று கூறியிருக்கின்றனர். அதிர்ஷ்டம் இருந்தால் அக்டோபரில் அதிபர் தேர்தலை சந்திப்பார் என்றும் கூறியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக