தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.1.12

கோடிக்கணக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 கள்ள நோட்டுகள் புழக்கம்: தமிழகம் முழுவதும் உஷார் நடவடிக்கை

சென்னை, ஜன. 22   சமீபத்தில் தலைநகர் டெல்லியி ல் ரூ.6 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுத ல் செய்யப்பட்டன.மேலும் வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள் கள்ள ரூபாய் நோட்டுகள் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து, கள்ள நோட்டு கும்பலை பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள்
தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்தநிலையில், கடந்த வாரம் சென்னையில் கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த இவர்கள் கள்ள நோட்டு கும்பல் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டிலும் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பிற தென் மாநிலங்களிலும் தொழிலாளர்கள்போல் கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி இருப்பது விசாரணையின் மூலம் தெரியவந்தது.
வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பல இடங்களில் வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் போர்வையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களும் ஊடுருவி விடுகிறார்கள். இதனால் கள்ள நோட்டு கும்பலை பிடிக்க போலீசார் 'உஷார்' படுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோல் மற்ற மாநிலங்களிலும் போலீசார் 'உஷார்' படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தநிலையில், புதுச்சேரியில் நேற்று முன்தினம் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 1/2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய், 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது கூட்டாளிகளான ஜமேதார் ஷேக், ஷபீக், அப்துல்கரீம், மிட்டு ஷேக், முகமது இஸ்மாயில் ஆகிய 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
அவர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த அனைவரும் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் ஏஜெண்டுகள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
புதுச்சேரியில் கைதான முகமது இஸ்மாயில் ஷேக், சென்னை சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் தலைமையில் போலீசார் அவரை சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது செல்போனை வைத்தும் அவருக்கு யார்-யாருடன் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஊடுருவியுள்ள கள்ள நோட்டு கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையைச் சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கின.
சிதம்பரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் வசூலான பணத்தை, அங்குள்ள வங்கி ஒன்றில் கட்டுவதற்காக ஊழியர் எடுத்துச் சென்றார். அந்த பணத்தை வங்கி கேஷியர் சரிபார்த்தபோது, அதில் 500 ரூபாய் கள்ள நோட்டு ஒன்று இருந்ததை அவர் கண்டுபிடித்தார்.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் வசூலான பணத்தை, அங்குள்ள ஸ்டேட் வங்கியில் கட்டுவதற்காக ஊழியர் எடுத்துச் சென்றார். அந்த பணத்திலும் 500 ரூபாய் கள்ளநோட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கோடிக்கணக்கான கள்ள ரூபாய் நோட்டுகள் குறிப்பாக 500 ரூபாய், 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் தமிழ்நாடு முழுவதும் புழக்கத்தில் விடப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. கள்ள நோட்டுகள் பெரும்பாலும் டாஸ்மாக் கடைகள் மூலம்தான் புழக்கத்தில் விடப்படுவதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கள்ள நோட்டு புழக்கத்தை தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள் வங்கியில் செலுத்தும் பணத்தை, நன்கு சோதித்தபிறகே வாங்க வேண்டும் என்று வங்கி கேஷியர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மேலும், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் செலுத்தும் பணத்தையும், நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க பொதுமக்களும் 'உஷார்' படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

0 கருத்துகள்: