சென்னை ரங்கநாதன் தெருவில் கடைகள் சீல் வைக்கும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்த்தகர்களை கலந்தாலோசிக்காமல் இனி எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.விதிமுறைகள் மீறி கட்டப்பட்டதாக சென்னை தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 27 முன்னணி வணிக
நிறுவனங்களை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடி முத்திரை பதித்தனர்.அரசின் இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சரியான விசாரணை நடத்தாமல் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ரங்கநாதன் தெரு வணிகர் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கின் போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பின்னர் தமது தீர்ப்பில்
தி.நகரில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு வரும் 30-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதுவரை தி. நகர் பகுதியில் கடைகளுக்கு சீல் வைக்க கூடாது. ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட 27 கடைகளை இடிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. ஏற்கனவே, சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம். அவர்களின் கோரிக்கைகள் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை திமுக ஆட்சிக்காலத்தில் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை, அதிமுக அரசு திடீர் நீக்கம் செய்த நடவடிக்கைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமச்சீர் கல்வி திட்ட மாற்றம், அண்ணா நூற்றாண்டு பல்கலைக்கழக மாற்றம் என முன்பு அதிமுக கொண்டுவந்த அதிரடி நடவடிக்கைகளுக்கும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போதும் அதிமுக அரசின் இந்த முரண்பாடான நடவடிக்கைகளுக்கும், தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக