தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.10.11

நில மோசடி வழக்கு: எடியூரப்பா சரண்; பெங்களூர் சிறையில் அடைப்பு!

பெங்களூர்:நில மோசடி விவகாரத்தில் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இவர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், இன்று இந்த மனுவை விசாரித்த லோக் ஆயுக்தா ‌நீதிமன்றம் எடியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே
நேரத்தில் எடியூரப்பாவின் மகன்கள் மற்றும் மருமகனுக்கு ஜாமீன் வழங்கியது.
எடியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டது.
இதையடுத்து அவரைக் கைது செய்ய 2 லோக் ஆயுக்தா டிஎஸ்பிக்கள் அவரது ரேஸ்கோர்ஸ் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால், எடியூரப்பா அந்த வீட்டில் இல்லை.
இதையடுத்து இன்னொரு போலீஸ் டீம் எடியூரப்பாவின் டாலர்ஸ் காலனி வீட்டுக்குச் சென்றது. ஆனால், அங்கேயேயும் அவர் இல்லை.
இதனால் அவர் பெங்களூரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள தும்கூர் சென்றுவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கேயும் அவரைத் தேடி லோக் ஆயுக்தா போலீஸ் குழு சென்றது. தும்கூரில் உள்ள மடங்களுக்கு எடியூரப்பா அடிக்கடி சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை வரும் திங்கள்கிழமை அணுகவும், அதுவரை கைதாகாமல் இருக்கவும் எடியூரப்பா முயன்று வந்ததாகவும் கூறப்பட்டது.
இந் நிலையில் எடியூரப்பாவை பல இடங்களிலும் லோக் ஆயுக்தா போலீசார் தேடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் மாலையில் பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நீதிபதி சுதீந்திர ராவ் முன் சரணடைந்தார். இதையடுத்து அவரை வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் பின் பக்க வாசல் வழியாக அவர் ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

0 கருத்துகள்: