தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.10.11

சஞ்சீவ் பட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க குஜராத் அரசுக்கு மத்திய அரசு உத்தரவு


குஜராத்தில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பிய போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். மோடிக்கு எதிரான போலி பிரமாண பத்திரத்தில் (அபிடவிட்டில்) கையெழுத்து போடுமாறு சஞ்சீவ் பட் மிரட்டியதாக கே.டி.பந்த் என்ற போலீஸ்காரர் புகார் அளித்திருந்தார். அதன் பேரிலேயே, சஞ்சீவ் பட் கைதானார்.
இதைத் தொடர்ந்து,
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்துக்கு சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதா புகார் மனு அனுப்பினர். அதில், தன்னுடைய கணவரின் உயிருக்கு அபாயம் உள்ளதால் அவருக்கும், தனது குடும்பத்துக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனித உரிமை மீறப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார். எனவே, ஸ்வேதா அனுப்பிய புகார் குறித்து ஆலோசிக்க உயர்மட்ட கூட்டத்தை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்குமாறு குஜராத் அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், அச்சுறுத்தல் தொடர்பாக மத்திய உள்துறை மட்டத்திலும் தன்னிச்சையான விசாரணை நடைபெறும்" என்றார்.
இதற்கிடையே, சஞ்சீவ் பட் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில், 'சில அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளின் சதி காரணமாக தவறான உள்நோக்கத்தோடு என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநில அரசில் உள்ள அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரிலேயே என் மீது போலீஸ்காரர் பண்ட் புகார் கூறியுள்ளார்' என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: