தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.10.11

உடைந்து நொறுங்கும் அன்னா ஹசாரேவின் அலாவுதீன் அற்புத விளக்கு


இந்தியா எங்கும் பரவி கிடக்கும் ஊழலை ஒழிப்பதற்காக புறப்பட்டுள்ள நவீன காந்தியாக, கோடம்பாக்கம் நட்சத்திரங்கள் முதல் கார்பரேட் முதலாளிகள் வரை ஒரு சேர ஆதரவு அளிக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஊடகங்களால் உயர்த்தி பிடிக்கப்பட்ட அன்னா ஹசாரேவின் சொந்த கூடாரமே தற்போது கலகலத்து போயுள்ளது.
அன்னாவின் தனிப்பட்ட செல்வாக்கை
விட காங்கிரஸ் ஆட்சியின் போது வெளிப்பட்ட பெரும் ஊழல்களே அன்னாவுக்கு கூட்டம் கூட காரணம். ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸின் ஊழல்களை மட்டும் பகிரங்கப்படுத்தும் அன்னா பாஜகவின் ஊழல்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததும், பாபா ராம்தேவ் உடனான நெருக்கம் அன்னாவின் உண்ணாவிரத மேடைகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் இருப்பும் அன்னாவின் போராட்டத்துக்கு உள்நோக்கம் இருக்குமோ என எண்ண வைத்தது.
“ஜன் லோக்பால்” வந்து விட்டால் ஒட்டு மொத்த ஊழலையும் ஒழித்து விடும் அலாவுதீன் அற்புத விளக்காக எண்ணிப் போராடிய அன்னா, வசதியாக தன் ஆதரவாளர்கள் அர்விந்த் கேஜ்ரிவால் கார்பரேட்களிடமிருந்து தன் அறக்கட்டளைக்காக பெறும் நிதிக்காகவோ என்னவோ லோக்பாலில் கார்பரேட்டைகளையும் அறக்கட்டளைகளையும் கொண்டு வருவது குறித்து மறந்து விட்டார். ஒற்றுமையாக இருப்பதைப் போல் தோற்றமளித்த அன்னாவின் அணியின் முதல் வெட்டு சுவாமி அக்னிவேஷுக்கு விழுந்தது.
அன்னாவின் உள்நோக்கம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய திக்விஜய்சிங்கை மன நல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று கடுமையாக சாடிய அன்னா, லோக் ஆயுக்தாவுக்குத் தலைவரை நியமிக்காத மோடி அரசை புகழந்ததும், எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டில் அகப்பட்டு சிறைக்குச் சென்றதும் மெளனவிரதம் இருக்க போவதாக அறிவித்ததும் அடுத்த நாளே ஹிஸார் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததும் மௌன விரதத்தை மறந்து காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் தொடரும் என அறிவித்ததும் அன்னாவின் நேர்மையைச் சந்தேகிக்க வைத்தது.
அடுத்த படியாக காங்கிரஸுக்கு எதிராக நேரடியாக இடைத்தேர்தலில் இறங்கினார் அன்னாவும் அவரது குழுவும். ஊழல் ஒழிப்பு எனும் இலக்கிலிருந்து காங்கிரஸ் எதிர்ப்பு என்று திசை மாறுவதாக அதிருப்தி கொண்டார் முக்கிய உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டே. அதற்கடுத்தால் போல் அன்னா குழுவின் முக்கிய பிரமுகர் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் “காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க காஷ்மீர்களுக்கு உரிமை உண்டு. இந்தியாவிலிருந்து பிரிவதாக இருந்தாலும் அதை ஏற்க வேண்டும்” என்று சொன்னது ஒரு மிகப் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தி விட்டது அன்னாவின் குழுவில்.
பிரசாந்த் பூஷன் மீதான சேனா குண்டர்களின் தாக்குதலைக் கண்டித்தாலும் அவரின் கருத்து தங்களுக்கு உடன்பாடில்லை என்றனர் அன்னா குழுவினர். இன்று அன்னா ஹசாரே ஒரு ப்ளாக்கில் “ஒன்றும் தெரியாமல், உண்மை நிலவரம் தெரியாமல் காஷ்மீர் குறித்து சிலர் பேசுகின்றனர்” என்று தன் அணியிலுள்ள பூஷனைத் தாக்கியுள்ளார். அரவிந்த் கேஜர்வாலும் "பூஷன் அன்னா அணியில் தொடர்வாரா என்பது தற்போது வெளிநாடு சென்றிருக்கும் பூஷன் திரும்பியவுடன் முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார். எப்போது வேண்டுமானாலும் பூஷன் வெளியேற்றப்படலாம். மகன் வெளியேற்றப்பட்டால் அவரின் அப்பா சாந்தி பூஷனும் அன்னா அணியிலிருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கலாம்.
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் மக்சசே விருது பெற்றவரான ரஜிந்தர் சிங் மற்றும் ராஜகோபால் ஆகிய அன்னா குழுவின் இரண்டு முக்கிய பிரமுகர்கள், "குழுவைக் கலந்தோசிக்காமல் தன்னிச்சையாக எல்லா ஜனநாயக மரபுகளுக்கும் எதிராக காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்தது வருத்தமளிக்கிறது" என அன்னாமீது குற்றம் சுமத்தி குழுவிலிருந்து விலகியுள்ளனர். தற்போது மிஞ்சியிருப்பது அரவிந்த கேஜரிவாலும் கிரண்பேடியும் தான்.
அன்னா தான் இந்தியா, இந்தியா தான் அன்னா என்றும் பாராளுமன்றத்தை மிஞ்சியவர் அன்னா என்று இருவரும் சொன்ன கருத்துகள் பலரை அதிருப்தியடைய வைத்தது இன்னொரு விஷயம்.  காலம் தான் பதில் சொல்ல வேண்டும் அன்னாவும் அவர் குழுவும் இலக்கை அடைவார்களா அல்லது இன்னொரு உதிரி பூக்களாக உதிர்வார்களா என்பதை!
நியூஸ்@இந்நேரம் 

0 கருத்துகள்: